
44ஆவது செஸ் ஒலிம்பியாட் – ஏழாம் நாள் 05.08.2022
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியம்
இந்தியா A ஆண்கள் அணியும் இந்தியா C ஆண்கள் அணியும் இன்று 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஏழாம் நாளில் மோதின.
ஹரிகிருஷ்ணா கங்குலியுடன் விளையாடி ட்ரா செய்தார். விதித் குஜராதி சேதுராமனுடன் விளையாடி ட்ரா செய்தார். எரிகைசி அர்ஜுன் அபிஜித் குப்தாவுடன் விளையாடி வெற்றி பெற்றார். நாராயணன் அபிமன்யுவுடன் விளையாடி வெற்றி பெற்றார்.
இதனால் இந்தியா A ஆண்கள் அணி இந்தியா C ஆண்கள் அணியை 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இந்தியா B ஆண்கள் அணி இன்று க்யூபா அணியை எதிர்த்து விளையாடியது. குஹேஷ் தனது ஏழாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்தார். சரின் நிஹால், பிரக்ஞானந்தா ஆகியோரும் இன்று வெற்றி பெற்றனர்.
அதிபன் தனது போட்டியை ட்ரா செய்தார். இதனால் இந்தியா B ஆண்கள் அணி, க்யூபா அணியை 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இந்தியா A பெண்கள் அணி இன்று அசர்பைஜான் அணியுடன் விளையாடி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
வைஷாலியும் தானியா சச்சதேவும் வெற்றி பெற்றனர்; ஹரைகா த்ரோணவள்ளி ட்ரா செய்தார்; கோனேரு ஹம்பி அதிர்ச்சித் தோல்வியடைந்தார். இந்தியா B பெண்கள் அணி கிரீஸ் அணியுடன் விளையாடி 1.5-2.5 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றுப் போனது. திவ்யா தேஷ்முக் வெற்றிபெற்றார்.
மேரி ஆன் கோம்ஸ் ட்ரா செய்தார். வந்திகா அகர்வாலும் சௌம்யா சாமிநாதனும் தோல்வியடைந்தனர். இந்தியா C பெண்கள் அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை வென்றது.
ஈஷா கர்வாடே, நந்திதா இருவரும் வெற்றி பெற்று தலா ஒரு புள்ளி பெற்றனர். பிரத்யுஷா, விஷ்வா வாஸ்னவால இருவரும் ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர். இந்தியா A ஆண்கள் அணி 12 புள்ளிகளுடன் நாலாவது இடத்திலும், இந்தியா B அணி 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், இந்தியா C அணி 10 புள்ளிகளுடன் 19ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஆர்மேனியா அணி முதலிடத்தில், உஸ்பெஸ்கிஸ்தான் அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்திய A பெண்கள் அணி 14 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திலும், இந்திய B அணி 9 புள்ளிகளுடன் 31ஆவது இடத்திலும் இந்தியா C அணி 11 புள்ளிகளுடன் 11ஆம் இடத்திலும் உள்ளன.