December 9, 2024, 2:28 AM
26.9 C
Chennai

புதிய பாரதத்தின் உதயத்துக்கு கட்டியம் கூறும் அயோத்தி ராம்லல்லா பிராண ப்ரதிஷ்டை!

நாகபுரி தீர்மானம் : அயோத்தி ராம் லல்லா பிராணப் பிரதிஷ்டை பற்றி ஆர்.எஸ்.எஸ் – “புதிய பாரத உதயத்திற்கு கட்டியம்”!

நாகபுரியில் 2024 மார்ச் 15,16, 17 தேதிகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது இயற்றபட்ட தீர்மான வாசகம்:

“ஸ்ரீ ராமர் அவதரித்த தலத்தில் 2024 ஜனவரி 22 அன்று ஸ்ரீ ராம் லலா (குழந்தை ராமர் ) விக்ரகத்தின் மகத்தான தெய்வீக பிரதிஷ்டை உலக வரலாற்றின் ஈடிணையற்ற பொன்னேடாக அமைந்தது. வணக்கத்திற்குரிய மகான்கள், ஆன்றோர் வழிகாட்டுதலில் நாடு தழுவிய அளவில் ஹிந்து சமுதாயத்தின் நூற்றுக்கணக்கான ஆண்டுக்கால தொடர் போராட்டமும் தியாகமும், சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரின் ஒருமித்த திடவுறுதி ஆகியவை மோதலின் ஒரு நீண்ட அத்தியாயத்திற்கு மகிழ்ச்சியான தீர்வு தந்தன. இந்த நன்னாளை கண்கூடாக காணும் பெரும் பேற்றின் பின்னணியில் ஆராய்ச்சியாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சிந்தனையாளர்கள், சட்ட வல்லுநர்கள், ஊடகங்கள், தியாகம் புரிந்த கரசேவகர்கள், ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயம், அரசு நிர்வாகம் என அனைவர் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த அனைத்து தியாகிகளுக்கும் அகில பாரத பிரதிநிதி சபை சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துவதுடன், மேற்கூறிய அனைத்து மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

ஸ்ரீ ராமர் கோவிலில் பூசிக்ககப்பட்ட அட்சதை விநியோக இயக்கத்தில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் தீவிரமாகப் பங்கேற்றார்கள். லட்சக்கணக்கான ராம பக்தர்கள் அனைத்து நகரங்களிலும், பெரும்பாலான கிராமங்களிலும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களைத் தொடர்பு கொண்டனர். 2024 ஜனவரி 22 அன்று, பாரதத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அற்புதமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. வீதி தோறும் ஊர் தோறும் தன்னெழுச்சியான ஊர்வலங்கள், ஒவ்வொரு வீட்டிலும் தீபத் திருவிழா, கோயில்கள், மடங்களில் காவிக்கொடி தாங்கி பஜனை போன்றவற்றால் சமுதாயத்தில் ஒரு புதிய ஆற்றல் பொங்கியது.