டி-20 2024 உலகக் கோப்பை இறுதி ஆட்டம்
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
முனைவர் கு.வை.பாலசுப்பிரமனியன்
இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி-20 உலகக் கோப்பை இறுதி ஆட்டம் மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள பிரிட்ஜ்டவுன் கெனிங்க்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. வழக்கம்போல விராட் கோலியும் ரோஹித் ஷர்மாவும் தொடக்க வீரர்களாக இறங்கினர். ரோஹித் ஷர்மா (ஐந்து பந்துகளில் 9 ரன், 2 ஃபோர்), ரிஷப் பந்த் (2 பந்துகளில் பூஜ்யம் ரன்) சூர்யகுமார் யாதவ் (4 பந்துகளில் 3 ரன்) ஆகியோர் முதல் 6 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 45/3.
அதன் பின்னர் விராட் கோலியும் (59 பந்துகளில் 76 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) அக்சர் படேலும் (31 பந்துகளில் 47 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்) அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். அதன் பின்னர் ஷிவம் துபே (16 பந்துகளில் 27 ரன்) கடைசி ஓவரின் நாலாவது பந்தில் ஆட்டமிழந்தார். இவ்வாறு 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கட் இழப்பிற்கு 176 ரன் எடுத்தது.
இரண்டாவதாக தென் ஆப்பிரிக்க அணி விளையாட வந்தபோது மூன்று ஓவர் முடிவதற்குள் ஹெண்ட்ரிக்ஸ் (4 ரன்) மற்றும் மர்க்ரம் (4 ரன்) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர். ஆனால் க்விண்டன் டி காக் (31 பந்துகளில் 39 ரன்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (21 பந்துகளில் 31 ரன்), கிளாசன் (27 பந்துகளில் 52 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறாவே அதிக வாய்ப்பிருக்கிறது என நம்பிக்கை பெறவைத்தனர்.
இருந்தாலும் 16.1ஆவது ஓவரில் கிளாசன் (17 பந்துகளில் 21 ரன்) ஆட்டமிழக்கும்போது இன்னமும் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டன.
18ஆவது ஓவரை பும்ரா வீசினார். அவர் 2 ரன்கள் கொடுத்து ஒரு விக்கட் எடுத்தார். அடுத்த ஓவரை அர்ஷ்தீப் வீசினார். அவர் அந்த ஓவரில் 4 ரன்கள் கொடுத்தார்.
கடைசி ஓவரில் 16 ரன் கள் தேவைப்பட்டன. ஹார்திக் பாண்ட்யா பந்துவீச வந்தார். அப்போது டேவிட் மில்லர் ஆடிக்கொண்டிருக்கிறார். அவரடித்த ஒரு பந்தை சூர்யகுமார் யாதவ் பவுண்டரி லைனில் பிடித்தார். பேலன்ஸ் தவறியதால் அவர் பவுண்டரிக்கு வெளியே செல்ல வேண்டியதாயிற்று. ஆனால் சமயோசிதமாக பந்தை மைதானத்திற்குள் வீசிவிட்டு, பவுண்டரி லைனுக்கு வெளியே சென்று, பின்னர் மீண்டும் உள்ளே வந்து அந்த கேட்சைப் பிடித்தார்.
அதற்கடுத்த ஐந்து பந்துகளில் 8 ரன்கள் கொடுத்து இந்திய அணிக்கு 7 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றியையும் உலகக் கோப்பையையும் பெற்றுத்தந்தார்கள்.
விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும்.