
மாத கர்ப்பிணியான செவிலியர் ஒருவர் கர்நாடகா அரசு மருத்துவமனையில் தினமும் 6 மணிநேரம் பணியாற்றி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் சிவமொக்கா நகரில் கஜனூரு கிராமத்தில் வசித்து வரும் ரூபா பிரவீன் ராவ் என்ற 9 மாத கர்ப்பிணி, அங்குள்ள ஜெய சாமராஜேந்திரா அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
நிறைமாதமாக இருந்தும் தினமும் தனது கிராமத்தில் இருந்து தீர்த்தஹள்ளி பகுதிக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுபற்றி ரூபா கூறும்போது, ‘இந்த பகுதியை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு எங்களுடைய சேவை தேவையாக உள்ளது.
எனது மூத்த பணியாளர்கள் விடுமுறை எடுத்து கொள்ளும்படி என்னிடம் கேட்டு கொண்டனர். ஆனால் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்.
ஒரு நாளைக்கு 6 மணிநேரம் பணியாற்றி வருகிறேன்.முதல் அமைச்சர் எடியூரப்பா தொலைபேசி வழியே என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். எனது அர்ப்பணிப்பு உணர்வை அவர் பாராட்டினார். ஓய்வு எடுத்து கொள்ளும்படி எனக்கு அவர் ஆலோசனையும் வழங்கினார்’ ,என்று கூறியுள்ளார்.