சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறும் ஆப்பிள் நிறுவனம்!

இந்தியா பொது தகவல்கள் வணிகம்
apple 1 - 2026

ஸ்மார்ட்போன் உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகக் கருதப்படும் நிறுவனம், ஆப்பிள். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தின் ஐபோன்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.

விலை அதிகம் என்றாலும், உலகமெங்கும் மக்களின் அபிமான போனாக இருந்து வருகின்றன ஐபோன்கள். இப்படி ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வந்த போதிலும், அந்நிறுவனத்தின் ஐபோன் வகை ஸ்மார்ட்போன்கள் மற்றும் இதர உதிரிபாகங்கள், சீனாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. உலகின் ஒட்டுமொத்த ஐபோன் தேவையையும் அந்நிறுவனம் சீனாவிலிருந்துதான் பல வருடங்களாகத் தயாரித்து பூர்த்தி செய்துவந்தது.

சமீபகாலமாக, அமெரிக்கா – சீனா இடையே நிலவி வரும் வர்த்தகப் போரின் காரணமாக, சீனாவில் இயங்கி வரும் அமெரிக்க நிறுவனங்களை வெளியேறுமாறு நிர்ப்பந்தித்து வருகிறது அமெரிக்க அரசு. சீனா, உலக நாடுகளின் உற்பத்தித்தளமாக இருந்து வருகிறது. உலகின் மிகப் பெரிய வர்த்தகச் சந்தையாகக் கருதப்படும் சீனாவில் அமெரிக்கா, ஜப்பான் உட்பட பல நாடுகள் முதலீடு செய்துள்ளன.

இந்தச் சூழலில் ஆப்பிள் நிறுவனம், சீனாவில் நடைபெறும் ஐந்தில் ஒரு பங்கு உற்பத்தியை அப்படியே இந்தியாவிற்கு எடுத்துவர முடிவு செய்துள்ளது. முன்னதாக, சீனாவில் கடந்த 30 வருடங்களாக இயங்கிக்கொண்டிருந்த தென்கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம், அதன் தொழிற்சாலைகளை முழுமையாகக் கைவிட்ட நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனமும் ஐந்தில் ஒரு பங்கு உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றியுள்ளது, சீனாவிற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

சீனாவிலிருந்து 20% உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றத் திட்டமிட்டு வரும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் இருக்கும் தனது ஒப்பந்த உற்பத்தியாளர்களான விஸ்டரான் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்களின் மூலம் புதிய உற்பத்தித் தளத்தை எங்கு அமைப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறது. ஏற்கெனவே, சில மாதங்களுக்கு முன்புதான் சென்னையில் ஐபோன் உற்பத்தி தொடங்கியது.

மேலும், இந்தத் திட்டத்தை சாத்தியப்படுத்துவது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இந்திய அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் இந்தத் திட்டம் நிறைவேறும் பட்சத்தில், அடுத்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு சுமார் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வேலைவாய்ப்பின் மூலம் பயன்பெற உள்ளதாகத் தெரிகிறது.

கடந்த மார்ச் மாதம், மத்திய அரசு மொபைல் போன் நிறுவனங்களின் முதலீடுகளை இந்தியாவில் ஈர்க்க பல சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்திருந்தது. அந்தத் திட்டத்தின் மூலம் பயனடையும் நோக்கில், தற்போது ஆப்பிள் நிறுவனம் சீனாவிலிருந்து இந்தியா பக்கம் திரும்பியிருக்கிறது. Production Linked Incentive (PLI) திட்டத்தின்கீழ் ஆப்பிள் நிறுவனம் சலுகைகளைப் பெறவுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையைப் பொறுத்தவரை ஆப்பிள் ஐபோன்கள் மீது வெகு ஜன மக்களுக்கு அதிக ஈர்ப்பு இல்லை. ஆடம்பர ஸ்மார்ட்போனாகவே கருதப்படும் ஆப்பிள் ஐபோனை பணக்காரர்களும், பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பவர்களும்தான் பெரும்பாலும் வாங்குகின்றனர்.

இந்த நிலையில், தற்போது இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கவிருக்கும் ஆப்பிள் நிறுவனம், உள்நாட்டு விற்பனையில் கவனம் செலுத்தாமல் வெளிநாட்டு ஏற்றுமதிக்கே முக்கியத்துவம் அளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கப்பட்டு, உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ள மத்திய அரசுக்கு, ஆப்பிள் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவு பெரும் நம்பிக்கையை அளித்திருக்கிறது.

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா நின்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியாவிற்கு, தொடர்ந்து பல உலக நாடுகளின் முதலீடுகளும் ஆதரவும் கிடைக்கும் என்று பொருளாதார நிபுணர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + four =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.