தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அறநிலையத்துறைக் கோயில்களில் இரவு நேர பாதுகாப்பு என்பது கொரோனா காலத்தில் கேள்விக்குறி யாகியுள்ளது.
அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோயில்களில் அங்குள்ள விக்ரகங்கள், விலையுர்ந்த பொருட்களைப் பாதுகாக்க மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டது தான் கோயில் பாதுகாப்பு படை. இந்தப் படையில், பணி நிறைவு பெற்ற காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு இரவு நேரங்களில் சுமார் 20 ஆண்டுகளாக பாதுகாப்பு பணியானது எவ்வித தொய்வின்றி நடைபெற்று வருகிறது.
இவர்களை கோயில் அருகே அமைந்துள்ள காவல் நிலையங்கள் மூலமாக பணிகளை அரசு கண்காணித்து வந்தது. இவர்களுக்கு மாவட்ட காவல்துறை மூலமாக மாதந்தோறும் சம்பளமாக ரூ.5000 வழங்கப்பட்டு வந்ததாம். ஆனால் க.டந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு மாதச் சம்பளம் கிடைப்பதில் சில சிக்கல் ஏற்பட்டதாம்.
இதனால் அப்போது சிலர் பணிக்கு வரவும் தயங்கியதாக தெரிந்தது. பிறகு காவல் உயர் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்று நிவர்த்திக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.
கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதிக்குப் பின்னர் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், மதுரை மாவட்டத்தில் பல கோயில்களுக்கு இரவு நேர பாதுகாப்பு பணிக்கு வரும் பணி நிறைவு பெற்ற அலுவலர்கள் வரமுடியவில்லை. இதனால் ஆலயங்களில் பணிபுரியும் காவலாளிகளை இரவு நேர பணியை கவனிக்க அறநிலையத்துறை அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மதுரை நகரில் மட்டும் பெரிய கோயில்களில் பணி்யாற்றும் சிலர் தாங்கள் வைத்திருக்கும் வாகனங்கள் மூலம் பணிக்கு வருகின்றனர். மதுரை புறநகரை பொறுத்த மட்டில், சோழவந்தான், திருவேடகம், குருவித்துறை ஆகிய கோயில்களில் இரவு நேர பணிக்கு ஆட்கள் வராததால், கோயில் காலாளிகளே, அப் பணியை மேற்கொள்கின்றனர்.
இது குறித்து விசாரித்தபோது, கோயில் இரவுப் பணிக்கு வரும் பணி நிறைவு பெற்ற போலீஸார் ஒருவர் தமது தரப்பு சிரமங்களைப் பட்டியலிட்டார்.
எங்களுக்கு கோயிலுக்கு அருகிலுள்ள காவல் நிலையங்கள் மூலம் மாதந்தோறும் ரூ. 5000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது போதுமானதாக இல்லை! கோயில்களில் பணிபுரிவோரில் பெரும்பாலோர், வெளியூர்களிலிருந்து வருவதால் பஸ் போக்குவரத்தையே நம்பி உள்ளோம் என்றார்.
ஆகவே, ஊரடங்கு முடியும் வரை அரசு, கோயில் விக்ரகங்களின் பாதுகாப்பு கருதி, ஒரு போலீஸ்காரரையாவது பெரிய கோயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.
- செய்தியாளர்: ரவிச்சந்திரன், மதுரை