
மதுரை: மதுரையில் கட்டுமானப் பணிகள் தொடங்கினாலும், மார்பிள் கற்கள் விற்கும் நிலையங்கள் பல இன்னமும் முடங்கிக் கிடக்கின்றன.
மதுரை நகரிலும், புறநகர் பகுதிகளான கருப்பாயூரணி, வரிச்சூர், ஓடைப்பட்டி, மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் மார்பிள் கடைகள் திறக்கப்பட்டு, பல நாட்கள் ஆகியும், விற்பனையானது மந்தமாகவே உள்ளதாம்.
மதுரை மாவட்டத்தை பொறுத்த வரை நிறுத்தப்பட்ட கட்டுமானப் பணிகள் யாவும் உள்ளூர் பணி்யாட்களைக் கொண்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மணல் கிடைககாவிட்டாலும், எம் சாண்டை பயன்படுத்தி கட்டுமானப் பணிகளும், செங்கல் தயாரிக்கும் தொழில்களும், மதுரை புறநகர் பகுதியில் நடைபெற்று வருகின்றன.
கருப்பாயூரணியில் எம்.சாண்டை பயன்படுத்தி செங்கல் தயாரிக்கும் பணியானது மும்முரமாக நடந்து வருகிறது. ஆனால் அதே சமயத்தில் சோழவந்தான், மேலூர், திருமங்கலம் வட்டாரங்களில் செங்கல் சூளை பணியானது, குறைவான ஆட்களை வைத்து நடைபெறுகிறது.
கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்தாலும், மதுரை நகரை பொறுத்த மட்டில், புதிய வீடுகள், அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
பீகார், ஓடிசா, உத்திரபிரதேச மாநில தொழிலாளர்களை வைத்து பல இடங்களில் ஆழ்துளை அமைக்கும் பணியானது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது ஆழ்துளை அமைக்கும் பணியும், மும்முரமாக நடைபெறவில்லை.

இது குறித்து போர்வெல் அமைக்கும் நிறுவனத்தை சேர்ந்தவர் கூறியது: மக்கள் கையில் பணப்புழக்கம் இல்லையென்றும், அன்றாட தேவைக்கு மக்கள் சிரமப் படுவதால், வீடுகள், நிலங்களில் ஆழ்துளை அமைக்க மக்கள் தயக்கம் காட்டி வருவதாகவும், இருந்தபோதிலும், மக்கள் அழைத்தால், நாங்கள் போர்வெல் அமைக்க தயாராக இருக்கிறோம் என்றனர்.
டைல்ஸ் விற்பனையாளர்கள் கூறியது: வீடுகள் கட்டப்பட்டு வந்தாலும், தற்போது பூச்சு வேலை மற்றும் நடைபெற்று வருகிறது. பொருளாதாரம் மந்தம், மற்றும் மக்கள் கையிருப்பு போதிய அளவு இல்லாததாலும், டைல்ஸ் வாங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
டைல்ஸ் வியாபாரம் பழைய நிலைக்கு வருவதற்கு, இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும் என்றனர். மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் டைல்ஸ் விற்பனையானது மந்தநிலையிலேதான் உள்ளது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை