ஆரிய பிரசாந்த் கிஷோர் ஐடியா!? திராவிட விநாயகர் சதுர்த்தி கொண்டாட திமுக., திட்டம் இட்டிருப்பதாக அக்கட்சியினர் பேசி வருகின்றனர். இதற்கு இந்து தமிழர் கட்சியின் ராம.ரவிக்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்தவை…
ஒன்றிணைவோம் வா என்கின்ற அடிப்படையில் திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகளுடன் காணொளிகள் பேசி வருகிறார்.
இந்த காணொளி கூடலில் பேசிவரும் திமுக நிர்வாகி ஒருவர் வழக்கம்போல திமுக தலைவருக்கு பாராட்டு தெரிவித்து, பின்னர் ஆரியர்களுக்கு சொந்தமான விநாயகர் சதுர்த்தி தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் என்றாலே ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு சொந்தம் என்பது போல் அவர்கள் நடத்துகிறார்கள் நாங்களும் கடவுள் நம்பிக்கையாளர்கள் தான் ஆகவே ஆரியத்தை அழிப்பதற்கு திராவிடர்கள் நாம் “திராவிட விநாயகர் சதுர்த்தி விழா” கொண்டாடவேண்டும்” இதற்கு திமுக தலைவர் அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் முன் வைக்கிறார்.
ஆரியர்களுக்கு சொந்தமான எனக் கொண்டாடி வரும் விநாயகர் சதுர்த்தியை நாம் திராவிடர்கள் அனைவரும் சேர்ந்து ஆரியத்திற்கு எதிராக திராவிட விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும்.
ஆகவே “திராவிட விநாயகர் சதுர்த்தி விழா” இதற்கு திமுக தலைவர் அனுமதி வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.
“மாற்றம்_ முன்னேற்றம்” என்கின்ற அடிப்படையில் விநாயகரை வீதியில் போட்டு உடைத்த திராவிட கழகத்தின் வாரிசுகள், ஈ.வே.ரா அண்ணாவின் “திராவிட வார்ப்புகள்”, இன்று “திராவிட விநாயகர் சதுர்த்தி விழா” கொண்டாட வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது என்று சொன்னால் அது “இந்து ஓட்டு வங்கி” உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு முன்னோட்டமாக பார்க்கிறேன்.
“ஒரு பிள்ளையார் வைத்து கொழுக்கட்டை வைத்தால், நான் திங்க வரமாட்டானா என்று கருணாநிதி வசனம் பேசினார்.
திமுகவில் எம்எல்ஏ வாக இருந்தாலும் மறைந்த ஜெ அன்பழகன் விநாயகர் சதுர்த்தி கூட்டங்களில் கலந்து கொண்டார். திமுக தலைவர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்கள் செய்தி போட்டு பின்னர் நீக்கிவிட்டார்.
இந்த சூழ்நிலையில் திமுக நிர்வாகி திராவிட விநாயகர்
சதுர்த்தி கொண்டாடவேண்டும் என்ற கோரிக்கையை ஒருவேளை திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதிப்பாரே யானால், விநாயகருடைய எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாகி விடும் என்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.
திமுக உடன் பிறப்புகளும் “திராவிட விநாயகருக்கு ஜெய் “என்று சொல்வார்கள். இல்லை நாங்கள் “திராவிடத்தை” நிலைநாட்ட “தமிழில் வழிபாடு” செய்கிறோம் என்று
” திராவிட விநாயகரே போற்றி”
“திமுகவை வளர்ப்பவனே போற்றி”
“திராவிடத்தின் திருவுருவே போற்றி”
“தளபதியை முதல்வராக்க அருள் தருவாய் போற்றி”
“கனிமொழியை காத்திடுவாய் போற்றி”
“கழகத்தின் குல தெய்வமே போற்றி”
“கருணாநிதியை மன்னிப்பாய் போற்றி”
“வீரமணிக்கு நல்ல புத்தி தந்திடுவாய் போற்றி”
“சுப வீரபாண்டியனுக்கு சுண்டல் தருபவனே போற்றி”……
இப்படி 108 அல்லது ஆயிரத்து எட்டு போற்றிகளை
பல தமிழறிஞர்கள் அவர்களுக்கு போற்றியும் எழுதிக் கொடுப்பார்கள். ஆன்மீக சொற்பொழிவாளர்கள் என்று மேடைகளில் பேசும் பல பேச்சாளர்களுக்கு திராவிட விநாயகர் சதுர்த்தி விழா மேடைகளில் பேச அழைக்கப்
படுவார்கள் அவர்களுக்கும் வருமானம் கிடைக்கும்.
“திராவிட விநாயகரின் தலைமை விநாயகராக “
“அறிவாலய திராவிட விநாயகர்” அனைவருக்கும் அருள்பாலிப்பார். அதிகாலையில் அண்ணா அறிவாலயத்தில் “திராவிட தீ யாகம்” வளர்த்து திராவிட விநாயகருக்கு
முதல் பூசையில் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் வைகோ திருமாவளவன் ஜி ராமகிருஷ்ணன் முத்தரசன் காங்கிரஸ் கே எஸ் அழகிரி திருநாவுக்கரசர் முஸ்லிம் லீக் முக்கிய தலைவர்கள் இப்படி பலரும் பங்கேற்பார்கள் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
தோழமை அடிப்படையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் வீதி எல்லாம் விநாயகர் வைக்க வேண்டும் என்று அறிக்கை விடுவார் கேட்டால் புத்தருக்கு “விநாயக்” என்கின்ற பெயரும் இருக்கிறது என்ற தத்துவம் சொல்லுவார்.
நாட்டில் சாதிவெறி ஒழிய வேண்டும் சமத்துவம் நிலவ வேண்டும் என்று அதற்கு “விடுதலை விநாயகர்” என்று பெயர் வைப்பார்”. மதிமுக தலைவர் வைகோ திராவிட விநாயகர் சதுர்த்தி கொண்டாட “மறுமலர்ச்சி விநாயகர்” வைத்து தமிழ்நாட்டில் “ஒரு திராவிட மறுமலர்ச்சி” உருவாக வேண்டுமென்று அறிக்கை விட்டு மதிமுக தொண்டர்களுக்கு கட்டளை பிறப்பிப்பார்.
பரமசிவனிடம் பழம் பெற “பம்பரமாய்” சுழன்று
“பழம்” பெற்றவர் விநாயகர் என்று ஆதாரங்களை அடுக்குவார்.
“நாங்கள் மதங்கள் கிடையாது என்பவர்கள்” மதம் ஒரு
“அபின்”என்று சொல்பவர்கள். இஸ்லாமியர்களின் நோன்பு கஞ்சி விழாவில் பங்கேற்று நோன்பு கஞ்சி குடிப்பது போல , கூட்டணி தர்மத்தை கட்டிக் காப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் “திராவிடர் விநாயகர் சதுர்த்தி விழா”வில் கலந்து கொண்டு தமிழர்களின் உரிமைகளை காக்க, ஆரியத்தை அழித்தொழிக்க, கொழுக்கட்டை பொங்கல் அவல் பொரி சுண்டல் சாப்பிட இரண்டு கம்யூனிஸ்டுகளும் தங்கள் கூட்டணி தர்மத்தை நிலை நாட்டிட பங்கேற்பாளர்கள்.
“உழைப்பாளி விநாயகரை” ஊர்தோறும் வைக்க உத்தரவை இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பிறப்பிப்பார்கள்” உழைப்பாளி விநாயகர்” விழாவில் கலந்துகொண்டு விழாவை கம்யூனிஸ்ட் கட்சியினர் சிறப்பிப்பார்கள் உண்டியல் கட்டாயம் இருக்கும்.
ஈவேரா “ஆரிய” பிள்ளையாரை தான் உடைத்தார். ஆனால்
இன்று தளபதி வைத்திருப்பதோ “திராவிட விநாயகர்.”
இது “திராவிட திருமகன்” அரிய கண்டுபிடிப்பு. என்று
சொல்லி திராவிட விநாயகர் சதுர்த்தி விழாவில்
கி வீரமணி, சுப வீரபாண்டியன் ……. உள்பட பலர் கலந்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்து இயக்கங்கள் நடத்தும் விநாயகர் சதுர்த்தியை தான் நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால் திமுக நடத்தும் திராவிட விநாயகர் சதுர்த்தி விழாவை” நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சிறுபான்மை காவலர் தளபதியின் உத்தரவை ஏற்று சிந்தனையைச் செயலாக்கம் செய்திட ஒவ்வொரு மசூதி முன்பாகவும், இஸ்லாமிய பகுதிகளிலும் திராவிட விநாயகர் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்திட திமுக கூட்டணி முஸ்லிம் அமைப்புகள் உதவிட தயாராகவே இருப்பார்கள் என்று நம்புகிறோம்.
தங்கள் திராவிட விசுவாசத்தை இஸ்லாமியர்கள் வெளிப்
படுத்திட இத்தனை ஆண்டுகாலம் தீர்க்கப்படாத “திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பொதுப் பாதையில் விநாயகர் ஊர்வலம் செல்ல அனுமதி மறுப்பு பிரச்சனை, திமுக வைத்திடும் திராவிட விநாயகர் பொது வீதியில் திருவல்லிக்கேணி சாலைகளில் செல்வார் என்று இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம்.
திராவிட விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு ஒவ்வொரு மசூதி முன்பாகவும் சிறப்பு வழிபாடு வரவேற்பு கொடுப்பார்கள், மதநல்லிணக்கத்தை வெளிப் படுத்திடுவார்கள் எதிர்பார்க்கிறோம்.
தமிழக அரசும் காவல்துறையும் திமுக நடத்த இருக்கின்ற திராவிட விநாயகசதுர்த்தி விழாவிற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கிட இந்துத் தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். திராவிட விநாயகர் சதுர்த்தி விழாவில் அனைத்து இந்துக்களும் பங்கேற்க அறைகூவல் விடுக்கிறோம்.
எது எப்படியோ விநாயகர் சதுர்த்தி விழா மக்கள் விழாவாக மாறப்போகிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது. ஆரிய விநாயகராக இருந்தாலும், திராவிட விநாயகராக இருந்தாலும், நமக்கு என்ன? “விநாயகர், விநாயகர் தானே!”
திராவிட விநாயகர் சதுர்த்திக்கு மீண்டும் ஒருமுறை இந்துத் தமிழர் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.