ஏப்ரல் 20, 2021, 3:25 காலை செவ்வாய்க்கிழமை
More

  யார் பக்கம் நிற்க வேண்டும்? கிருஷ்ணர் காட்டும் வழி!

  சஞ்சலங்கள், சபலங்களை போக்கி முன்னேறிச் செல்லுங்கள். இதுவே கிருஷ்ண ஜெயந்தியினுடைய நற்செய்தி

  srikrishna
  srikrishna

  முல்லை நில – ஆயர்குடியின் தலைவன் கிருஷ்ணன். அவர் இந்த பூமியில் அவதரித்த நாளை கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தி என்ற பெயரில், உலகெங்கும் வாழக்கூடிய இந்து மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நன்னாளில் புதிய தமிழகம் கட்சி தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

  கிருஷ்ணனைப் பொருத்தமட்டிலும், நீலநிறத்திலே குழந்தையாகவும், வெண்ணெய் உண்ணக் கூடியவராகவும், கங்கைக் கரையிலே கோபியரோடு விளையாடக் கூடியவராகவும் மட்டுமே அதிகமாகக் காட்டப்பட்டிருக்கிறார்.

  அதைவிட, இந்து மக்களின் புனித நூலாகக் கருதப்படக்கூடிய மகாபாரதத்தில், அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக இருந்து போர்க்களத்தில் கிருஷ்ணன் போதித்த உபதேசங்களை இன்னும் எண்ணற்ற இந்து மக்களே அறிந்திருக்கவில்லை. கிருஷ்ண ஜெயந்தியான இன்று நாம் அனைவரும் அதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

  இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களும் இந்திய மக்களுடைய வாழ்வியலில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி உள்ளன. இதிகாசங்களில் சொல்லப்பட்டவைகள் அப்படியே நடந்தவைகளா? இல்லையா? என்பதும்; அவைகளை அப்படியே எடுத்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்பதும் வேறு வேறு விசயம். ஆனால், அதில் சொல்லப்பட்ட பல அம்சங்கள் இன்றும் பொருந்தி வருகின்றனவா என்பதைத் தான் ஊன்றிப் பார்க்க வேண்டும்.

  பகவத்கீதையை பலரும் பல்வேறு கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடும். ஆனால், இப்பொழுது அதற்குள் நாம் முழுமையாக செல்ல வேண்டியதில்லை. மகாபாரதப் போரில் இரண்டு பேர் முக்கியமான கதாநாயகர்கள். ஒருவர் கிருஷ்ணன், இன்னொருவர் அர்ஜுனன்.

  மகாபாரதப் போரில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்குக் கூறிய ஆலோசனைகள் அல்லது அறிவுரைகள் அல்லது போதனைகளில் ஒன்றிரண்டை சுட்டிக்காட்டவதும், நினைவுபடுத்துவதும் தான் கிருஷ்ண ஜெயந்தியின் உண்மையான அர்த்தமுடையதாக இருக்க முடியும் என்று கருதுகிறேன்.

  பாண்டவர் படைகளும், கௌரவர் படைகளும் போர்க்களத்தில் நேரெதிராக நிற்கின்றன. வில்லுக்கு பெயர் பெற்ற அர்ஜுனன் தான் பாண்டவர் படையில் மிக முக்கியமானவர். போர் முரசு கொட்டியாயிற்று; போர் துவங்கப்பட வேண்டும். ஆனால், போர்க்களத்தில் அர்ஜுனனோ, எதிரில் இருக்கக்கூடியவர்கள் தன்னுடைய உற்றார்-உறவினர்கள், அண்ணன்-தம்பிகள், ஆசான் போன்றார்; அவர்களை எதிர்த்து எப்படி நான் போரிடுவது? என்று கலக்கமடைந்து தேர்த்தட்டிலே சாய்கிறான்.

  அப்பொழுதுதான் “தகாத நிலையில், தகாத இடத்தில், கலக்கம் அடையாதே, சஞ்சலம் அடையாதே, பேடித் தனத்தை காட்டாதே” என்று கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்கிறார். அதனுடைய பொருள், ‘போர்க்களத்தில் ஒப்பாரி வைக்கக் கூடாது’ என்பதுதான். அதனுடைய உள்ளார்ந்த அர்த்தம் என்பது நீதிக்கும், அநீதிக்கும் போராட்டம் நடந்தால் நீதியின் பக்கம் நிற்க வேண்டும்; உண்மைக்கும் பொய்மைக்கும் போர் நடந்தால் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும்.

  நியாயத்திற்கும், அநியாயத்திற்கும் போர் நடந்தால் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும். எனவே, எதிரில் இருக்கக்கூடியவர்கள் உண்மைக்குப் புறம்பானவர்களாக, நீதி நேர்மையற்றவர்களாக, அநியாயம் செய்யக்கூடியவர்களாக, தனது உற்றார் – உறவினர்களாக இருந்தாலும் அதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் பொருள். எனவே ”கலக்கம் அடையாதே, எழுந்து நின்று போராடு” என்று அர்ஜுனனுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தார் கிருஷ்ணன்.

  2000 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டது என்றாலும்கூட, இன்றும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உண்மையை பேசுவதா? பொய்யை உரைப்பதா? தீமையின் பக்கம் நிற்பதா? நன்மையின் பக்கம் நிற்பதா? கொள்கையின் பக்கம் நிற்பதா? கொள்கையே இல்லாத பக்கம் நிற்பதா? கொள்கைக்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இருப்பதா? கொள்கையை விட்டுவிட்டு, விலைபேசும் இடத்தில் நிற்பதா? என்ற நிலைகள் இன்றும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திற்குள்ளும் எழுகின்றபொழுது, நான் எந்த பக்கம் நிற்க வேண்டும் என்பதை தெளிவு படுத்துவதே கிருஷ்ணனுடைய உபதேசம்.

  அதாவது சரி என்று ஒன்றை தேர்ந்தெடுத்து விட்டால், அதை நிலைநாட்டுவதற்காக நம்முடைய சிந்தனை, செயல் அனைத்தையும் அதன்பால் குவிக்க வேண்டுமே தவிர, எதிர்த்து நிற்பவர் அண்ணனா? தம்பியா? மாமனா? மச்சானா? என்று குழப்பம் அடையக்கூடாது. நல்லதை வெற்றியடைய வைக்க வேண்டுமென்றால், தீயதை எதிர்த்துப் போரிட்டே தீர வேண்டும்; அதுதான் அதனுடைய ஆழ்ந்த கருத்தாகும். அதேபோல எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் தேவையற்ற அச்சத்திற்கும்; உடலாலோ, உள்ளத்தாலோ மனரீதியான பலவீனத்திற்கும் சிறிதளவும் இடம் கொடுத்துவிடக் கூடாது. உடலளவில் பலகீனமாக இருந்தாலும், உள்ளத்தளவில் சோர்வு இருந்தாலும், மனதளவில் பயம் இருந்தாலும் அது போர்க்களத்தில் மட்டுமல்ல, சாதாரண அன்றாடம் நடக்கக்கூடிய சம்பவங்களில் கூட பிரதிபலிக்கும்.

  இன்று மனிதகுலத்தை தாக்கியிருக்கக் கூடிய கொரோனாவை எதிர்த்துப் போராடுவதிலும் கூட, உடல் ரீதியான தாக்கத்தை காட்டிலும் உளரீதியான பயமே அதிக பாதிப்பை உண்டாக்குகிறது என்பதுதான் மருத்துவ ஆய்வின் முடிவாகும். அதுபோல தான், நாம் செய்யக்கூடிய தொழிலாக இருந்தாலும், சேவையாக இருந்தாலும், கொள்கையை நிறைவேற்றுவதற்குண்டான பாதையாக இருந்தாலும் மனதில் எழும் பயத்தையும், பலவீனத்தையும், குழப்பத்தையும் போக்கி, தெளிந்த சிந்தனையோடு முன்னேறிச் சென்றால் மட்டுமே வெற்றியடைய முடியும்.

  நல்லதையும் கெட்டதையும் ஒன்றாகவோ அல்லது பாலையும் ஃபாலிடாலையும் ஒன்றாகவோ அல்லது சாக்கடையையும், பன்னீரையும் ஒன்றாகவோ கருதி குழம்பி செயல்பட்டால் ஒரு காலமும் விடுதலையும், முன்னேற்றமும், அடையாளமும் கிடைக்காது. எனவே, எதிர்த்து நிற்கக்கூடியவர்கள் சொந்தமா? பந்தமா? என்று பார்க்காதே, அவர்கள் உண்மையானவர்களா? பொய்யானவர்களா? என்று மட்டும் எண்ணிப்பார். நியாயத்திற்காக நிற்கிறார்களா? அநியாயத்திற்காக நிற்கிறார்களா? என கருப்புக்கும் வெள்ளைக்கும் உள்ள வித்தியாசத்தை எண்ணிப்பார்த்து செயல்பட வேண்டும் என்பதே அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் செய்த உபதேசம் ஆகும்.

  எனவே, அன்று கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு செய்த உபதேசம் இன்று ஒவ்வொரு தனி நபருக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமே பொருந்தி வரக்கூடியது. எனவே, பயத்தைப் போக்குங்கள் பலகீனத்தைப் போக்குங்கள், குழப்பத்தைப் போக்குங்கள், நம்மை சூழ்ந்து இருக்கக்கூடிய இருளை அகற்ற ஒளியை ஏற்றுங்கள். நம்மை அச்சத்தாலும், பயத்தாலும், குழப்பத்தாலும் கட்டிப்போட்டு இருக்கக்கூடிய போலியான பாசங்களை அறுத்து எறியுங்கள்;கலக்கம் அடையாதீர்கள், எழுந்து நில்லுங்கள்.

  உங்களுக்கான அடையாளத்தையும், அதிகாரத்தையும், மேன்மையான வாழ்க்கையையும் வென்றெடுக்க, களத்தில் உங்களுடைய உடல், சிந்தனை, செயல் ஆகியவற்றை வெற்றி என்ற ஒற்றை புள்ளியில் குவித்திடுங்கள். சஞ்சலங்கள், சபலங்களை போக்கி முன்னேறிச் செல்லுங்கள். இதுவே கிருஷ்ண ஜெயந்தியினுடைய நற்செய்தியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

  தகாத நிலையில், தகாத இடத்தில் கலங்காதீர்கள்!
  குழப்பமும் சஞ்சலமும் அடையாதீர்கள்!!
  பேடித் தனத்தை காட்டாதீர்கள்!!

  • டாக்டர் க. கிருஷ்ணசாமி MD
   புதிய தமிழகம் கட்சி

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,114FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »