
மேற்கு வங்கத்தின் பஹுயாட்டி பகுதியில் 350 சதுர அடியில் எளிமையான வீட்டில் வசித்து வருபவர் சித்ரலேகா மாலிக். ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கொல்கத்தாவில் வேலை பார்த்தவருக்கு இப்போது மாத ஓய்வு ஊதியமாக மட்டும் 50 ஆயிரம் ரூபாய் வருகிறது. அதற்காக ஆடம்பரமாக வாழ்ந்து விடவில்லை. எங்கு சென்றாலும் பயணிப்பது பேருந்துகளில். அதுவும் இல்லாவிட்டால் நடைப்பயணம்.
வீட்டு வேலைகளைப் பார்க்க வேலையாட்கள் எவரும் கிடையாது. திருமணம் செய்து கொள்ளாததால் தனிமையில்தான் வாழ்கிறார். சிக்கனத்தைத் தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருக்கும் இவருக்குக் கை நிறைய ஓய்வூதியம் கிடைக்கிறது.
அதேநேரத்தில் செலவும் குறைவு. எனவே மாதாமாதம் கணிசமான தொகையை சேமிப்பு செய்கிறார். சேமித்த பணத்தை தானம் செய்கிறார்.
முறையான கல்வி எல்லோரையும் மாற்றும். பொறுப்புமிக்க ஆசிரியரால் எதையும் மாற்ற முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
எனக்கு 80 வயதாகிறது. 2002 முதல் கடந்த 19 ஆண்டுகளாக பல கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்துள்ளேன்.
இதெல்லாம் என் ஓய்வூதிய பணத்தினாலும், அதையும் சிக்கனமாக சேமித்ததாலுமே சாத்தியமாயிற்று” என்கிறார் சித்ரலேகா.
ஏழ்மையான குடும்பத்தில் பள்ளி ஆசிரியரின் மகளாகப் பிறந்தவர் தான் சித்ரலேகா. “பிறருக்குக் கொடுத்துப் பழகு… உனக்கு சந்தோசமும் மனதிருப்தியும் உண்டாவதை நீயே உணர்வாய்…” என்று சிறுவயது முதலே சொல்லிச் சொல்லி வளர்த்து உள்ளார் அவரது தந்தை.
அதனால் சின்னஞ்சிறு வயதிலிருந்தே சக மாணவிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை தன் தேவைகளை குறுக்கிக் கொண்டு வழங்கிவரத் துவங்கினார் சித்ரலேகா.
பின்னர் ஆசிரியையாக கல்விப் பணியில் ஈடுபட்ட போதும் இந்த உதவும் குணம் இவரோடு சேர்ந்தே வந்ததால் திருமணம் பற்றிய சிந்தனையே இல்லாமல் போயிற்று.
ஆசிரியையாக பணியாற்றிய காலத்தில் பல கல்வி நிறுவனங்கள் தங்கள் வசதிகளை மேம்படுத்த நிதி இல்லாமல் தவிப்பதை கண்கூடாகப் பார்த்தவர் சித்ரலேகா.
நன்றாகப் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகள் வசதி இல்லாத காரணத்தால் கல்வியைத் தொடரமுடியாமல் திண்டாடியதையும், ஒரு கட்டத்தில் படிப்பையே நிறுத்தியதையும் கண்டு கண்கலங்கி பல இரவுகள் தூக்கம் இல்லாமலே தவித்திருக்கிறார் சித்ரலேகா.
அப்போது அவர் எடுத்த முடிவு தான்.. ‘வாழ்க்கையில் ஆடம்பரத்தை தவிர்த்து சிக்கனமாக வாழ்ந்தால் நிறைய காசை சேமிக்க முடியும். அதைக்கொண்டு கல்வித் தேவைகளுக்கு உதவி செய்ய முடியும். எனவே வாழ்நாள் முழுவதும் சிக்கனமாக வாழ்ந்து பிறருக்கு உதவி செய்வோமே என்று.’
2018-ஆம் ஆண்டு இவர் படித்த ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு ரூ.56 லட்சம் நன்கொடையாக வழங்கியிருக்கிறார். பணி ஓய்வின் போது கிடைத்த ரூபாய் 31 லட்சத்தை தன்னுடைய பெற்றோரின் நினைவாக ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான இந்திய ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார்.
”ஆடம்பரப் பொருள்களையும் அதிக வசதிகளையும் தவிர்க்கும்படி நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதைப் பின்பற்றி எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்.
என்னுடைய தினசரித் தேவைகளுக்கு அதிகம் செலவாவதில்லை. அதனால் என்னால் கூடுதலாகச் சேமிக்க முடிகிறது.
மாதாமாதம் வரும் 50 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தைக் கொண்டே கல்வி நிறுவனங்களுக்கு, மாணவர்களுக்கு நன்கொடை வழங்குகிறேன்” என்று ஆச்சரியப்படுத்துகிறார் சித்ரலேகா மாலிக்.
இவரின் சிக்கன வாழ்க்கை குறித்து ஒரு சம்பவம்..
இன்றைக்கு இவ்வளவு வசதி வாய்ப்புகளோடு தான் இருப்பதற்குக் காரணமானவர்களில் இவரும் ஒருவர்” என்று தான் படித்த ஆசிரியையுடைய வீடு தேடி வந்தார் இந்நாள் பணக்கார முன்னாள் மாணவர் ஒருவர்.
“டீச்சர் என்னைத் தெரியுதா? நான் உங்ககிட்ட படித்த மாணவன். இப்போ வசதிகளோடு நல்ல நிலைமையோடு இருக்கிறேன். அதற்கு நீங்களும் ஒரு காரணம். என் பையனுக்குத் திருமணம். அழைப்பிதழ் கொடுக்க வந்தேன்.
நீங்கள் அவசியம் வரவேண்டும்” என்றுச் சொல்லி ஆடம்பரமான அழைப்பிதழை மிக எளிமையான தோற்றத்தில் இருக்கும் தன் ஆசிரியையிடம் கொடுக்கிறார் வந்தவர். ஆசிரியை மகிழ்ச்சியோடு அழைப்பிதழை பெற்றுக்கொள்கிறார்.
நீங்க சிரமப்பட வேண்டாம். திருமணத்தன்று உங்களுக்கு என்னுடைய காரை அனுப்பி வைக்கிறேன். அதில் வந்து கலந்துகொண்டு, அதிலேயே திரும்பி வந்து விடலாம்” என்று வந்தவர் சொல்லிக்கொண்டே போக, ஆசிரியை சட்டென்று “ஐயோ அதெல்லாம் வேண்டாம். கண்டிப்பாக திருமணத்துக்கு வந்து விடுகிறேன்” என்கிறார்.
“ஏன் என்னிடம் இப்போது பத்துக்கும் மேற்பட்ட ஆடம்பர கார்கள் இருக்கின்றன. அதில் ஒன்றைத்தான் அனுப்பப் போகிறேன். இதில் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை. தயவுசெய்து மறுக்காதீர்கள்” என்று மன்றாடுகிறார் வந்தவர்.
ஆசிரியையோ “அதற்காக எல்லாம் மறுக்கவில்லை. நான் எந்த இடமாக இருந்தாலும் எளிமையாக பேருந்தில் தான் சென்று வருவது வழக்கம். சிக்கனமாக வாழ்வது தான் எனக்குப் பிடிக்கும். என்னை சங்கடத்திற்கு ஆளாக்காதீர்கள். நான் வந்து சேர்கிறேன்” என்று சொல்கிறார்.
“ஆட்டோ அனுப்பட்டுமா?” என்று கேட்கிறார் வந்தவர். அதற்கும் மறுக்கிறார் ஆசிரியை.”உங்களுக்கு இப்போது வயது 80-க்கும் மேலே இருக்கும்.
மேலும் எந்தத் துணையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறீர்கள். எனவே வாகனத்தில் வருவதுதான் பத்திரமானது” என்று எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார் வந்தவர்.
ஆனால் ஆசிரியையோ விடாப்பிடியாக எல்லாவற்றையுமே மறுத்துப் பேசுகிறார். “இதுவரை நான் எல்லா இடங்களுக்கும் பேருந்திலும் அதுவும் கிடைக்காவிட்டால் நடந்தும் சென்றே வருகிறேன்.
எந்த சங்கடமும் நேர்ந்ததில்லை. இன்றைக்கு நீங்கள் காரோ ஆட்டோவோ அனுப்பி என்னை சொகுசுக்கு உள்ளாக்கினால், நாளை என் உடம்பு அதையே தேடத் துவங்கிவிடும்.
என் லட்சியமான சிக்கனம் என்னை விட்டுப் போய்விடும். எனவே என்னை வற்புறுத்த வேண்டாம். வந்துவிடுகிறேன்” என்று சொல்லிய ஆசிரியை,
அதேபோல அந்தத் திருமணத்திற்குப் பேருந்தில் பயணித்துச் சென்று கலந்து கொண்டு வந்தார். இது அவரின் சிக்கன வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு.