
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் – இரண்டாம் நாள்
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நேற்று, சனிக்கிழமை, இரண்டாம் நாள் அன்று பளு தூக்குதலில் நான்கு பதக்கங்களை இந்திய அணி பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை மீராபாய் சாணு 49 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதலில் பெற்றார்.
இந்தப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றவர் சங்கேத் சர்கார். இவர் 55 கிலோ பிரிவில் பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இதே போட்டியில் 61 கிலோ பிரிவில் குருராஜா பூஜாரி வெண்கலப் பதக்கம் பெற்றார். பெண்கள் 55 கிலோ பிரிவில் பிந்தியாராணி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
டேபிள் டென்னிஸில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி அயர்லாந்தை 3-0 என்ற கணக்கில் வென்று தங்களது பிரிவில் ஒன்றாம் இடத்தில் இருக்கிறது. பெண்கள் பிரிவிலிம் இந்திய அணி கயானா அணியை வென்று தங்களது குரூப்பில் முதலிடம் வகித்தனர். ஆனால் காலிறுதியில் மலேசியா அணியிடம் 5-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினர்.
இது போட்டியின் ஒரு பெரிய அதிர்ச்சித் தோல்வியாகும். ஹாக்கிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி வேல்ஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. குத்துச்சண்டையில் முகம்மது ஹுசம்முத்தீன் மற்றும் லவ்லினா இருவரும் அடுத்தசுற்றிற்கு முன்னேறியுள்ளனர்.
பாட்மிண்டன் போட்டியில் இந்திய கலப்பு அணி இலங்கை அணியை 5-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.