
44ஆவது செஸ் ஒலிம்பியாட், பூஞ்சேரி, மாமல்லபுரம்
– இரண்டாம் நாள் 29.07.2022 –
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –
இந்தியா A ஆண்கள் அணி இன்று 44ஆவது சதுரங்க ஒலிம்பியாடில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் 3.5-0.5 என்ற கணக்கில் மால்டோவாவை வீழ்த்தியது. பெண்டியாலா ஹரிகிருஷ்ணா, எஸ்.எல். நாராயணன், கிருஷ்ணன் சசிகிரண், ஆகியோரின் வெற்றிகளால் அணி மூன்று புள்ளிகளைப் பெற்றது.
அர்ஜுன் எரிகைசி தன்னுடைய ஆட்டத்தை ட்ரா செய்தார்; எனவே அவருக்கு அரைப்புள்ளி மட்டுமே கிடைத்தது.
இந்தியா B இன்னும் சிறப்பாக செயல்பட்டது, எஸ்டோனியா அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியது; டி. குகேஷ், ஆர். பிரக்ஞானந்தா, பி. அதிபன் மற்றும் ரவுனக் சத்வானி ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். எனவே தலா ஒரு புள்ளியினைப் பெற்றனர்.
இந்தியா C அணி மெக்சிகோவை 2.5-1.5 என்ற கணக்கில் தோற்கடித்தது. நான்காவது போர்டில் யூரியல் கபோ விடலை எதிர்த்து கார்த்திகேயன் முரளியின் வெற்றியின் அடிப்படையில் இந்தியா ஒரு புள்ளியையும் சூர்ய சேகர் கங்குலி, எஸ்.பி. சேதுராமன் மற்றும் அபிஜீத் குப்தா ஆகியோர் தங்கள் ஆட்டத்தை டிரா செய்ததால் தலா அரைப் புள்ளி வீதம் இந்தியா C அணி 2.5 புள்ளிகள் பெற்றது.
பெண்கள் பிரிவில், இந்தியா A அணி அர்ஜென்டினா அணியை 3.5-0.5 என்ற கணக்கில் வென்றது. கோனேரு ஹம்பி மூன்றாவது போர்டில் டிராவில் திருப்தி அடைய வேண்டிய நிலையில், ஆர். வைஷாலி, டானியா சச்தேவ் மற்றும் பக்தி குல்கர்னி ஆகியோர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தலா ஒருபுள்ளி பெற்றனர்.
இந்தியா B அணி 3.05-0.5 என்ற கணக்கில் லாட்வியா அணியை வீழ்த்தியது. வந்திகா அகர்வால், சௌமியா சுவாமிநாதன் மற்றும் மேரி ஆன் கோம்ஸ் ஆகியோர் வெற்றியுடன் தலா ஒரு புள்ளி பெற்றனர், பத்மினி ரௌட் இரண்டாவது பலகையில் டிரா செய்தார்.
இந்தியா C அணி சிங்கப்பூரை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. ஈஷா கரவாடே மற்றும் பி.வி. நந்திதா வெற்றியின் சிற்பிகள், முதல் இரண்டு பலகைகளை வென்றனர். பிரத்யுஷா போடா மற்றும் விஷ்வா வஸ்னாவாலா ஆகியோர் டிராவில் முடித்தனர்.