கோவை மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவும்: கல்ராஜ் மிஸ்ரா

கோவை :

கோவை மாவட்டத்தில் குறு, சிறு தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை, மத்திய அரசு செய்துதரும் என சிறு, குறு தொழில்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்தார்.

கோவையில் ஜூலை மாதம் நடைபெற உள்ள அக்ரி இண்டெக்ஸ் 2016 என்ற விவசாய கண்காட்சிக்கான சிற்றேடுகளை மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா வெளியிட்டார். அப்போது பேசிய அவர், இக்காண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும், இதன் மூலம் புதிய தொழில் முதலீடுகள் அமைய வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவித்தார்.

மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்த பின்பு பொருளார வளர்ச்சி மேம்பட்டு வருகிறது. கருப்புப் பணத்துக்கு எதிரான நிலைப்பாடு, விவசாயம் ஊக்குவிப்பு, தொழில் துறை மேம்பாடு, வேலை வாய்ப்பை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கொடுக்கப்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வராக்கடனாக இருக்கிறது. அவற்றை மீட்க குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் குழுக்கள் மூலம் வாராக் கடன்களுக்கான காரணம் கண்டறியப்படும். தொழில் துறையை மேம்படுத்த மேலும் கடன்கள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சிறு தொழில் மேம்பாட்டிற்காக இதுவரை முத்ரா வங்கியின் மூலம் 1 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு தனித்தனியாக 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களை நடுத்தர நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யவும், கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கான தொகையினை தாமதமின்றி தொழில்முனைவோருக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் கல்ராஜ் மிஸ்ரா.

அவரிடம், கோவையில் பொதுத்துறை தொழிற்சாலை அமைக்க வேண்டும், அரசு நிறுவனக்களுக்காக சிறு, குறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் 20 சதவீத பொருள்களை 30 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழில் துறையினர் கோரிக்கை முன்வைத்தனர்.