இந்திய பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் மட்டத்திலான பேச்சுவார்த்தை ரத்து

புது தில்லி:

இந்திய பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் மட்டத்திலான இருதரப்பு பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது; பதான்கோட் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரையில் பேச்சுவார்த்தை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பிரதமர் மோடி ஆப்கானிஸ்தானில் இருந்து தில்லி திரும்பும் வழியில், பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். லாகூர் நகரில் அவர், பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் சந்தித்தார். இதைத்தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை 15 ஆம் தேதி இஸ்லாமபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

 

கடந்த 2 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படைத் தளத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளின் வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்தது.

ஆனால், திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை நடைபெறும் என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆஜிஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வரும் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் இடையேயான வெளியுறவுத்துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்தத் தகவலை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். பதான்கோட் சம்பவத்துக்கு பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது எனவும், பதன்கோட் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கை திருப்தி அளிக்கும் வகையில் அமையாத வரை அமைதி பேச்சுவார்த்தை நடைபெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.