spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்; பாரியான கொடை!

திருப்புகழ் கதைகள்; பாரியான கொடை!

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் பகுதி – 248
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

பாரியான கொடை – பழநி

அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றியெழுபத்தைந்தாவது திருப்புகழ், ‘பாரியான கொடை’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “பழநியப்பா, உலோபிகளைப் பாடாமல் உன்னையே பாட அருள் செய்வாக” என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

பாரி யானகொடைக் கொண்ட லேதிரு
வாழ்வி சாலதொடைத் திண்பு யாஎழு
பாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக …… அபிராம

பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள்
சீல ஞாலவிளக் கின்ப சீவக
பாக சாதனவுத் துங்க மானத …… எனவோதிச்

சீர தாகஎடுத் தொன்று மாகவி
பாடி னாலுமிரக் கஞ்செ யாதுரை
சீறு வார்கடையிற் சென்று தாமயர் …… வுறவீணே

சேய பாவகையைக் கொண்டு போயறி
யாம லேகமரிற் சிந்து வார்சிலர்
சேய னார்மனதிற் சிந்தி யாரரு …… குறலாமோ

ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடு
வாயி னேர்படவுற் றன்று மூலமெ
னார வாரமதத் தந்தி தானுய …… அருள்மாயன்

ஆதி நாராணனற் சங்க பாணிய
னோது வார்களுளத் தன்பன் மாதவ
னான நான்முகனற் றந்தை சீதரன் …… மருகோனே

வீர சேவகவுத் தண்ட தேவகு
மார ஆறிருபொற் செங்கை நாயக
வீசு தோகைமயிற் றுங்க வாகன …… முடையோனே

வீறு காவிரியுட் கொண்ட சேகர
னான சேவகனற் சிந்தை மேவிய
வீரை வாழ்பழநித் துங்க வானவர் …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – நீர் நிறைந்த மடுவில் முதலையின் நீண்டவாயில் அகப்பட்டுக் கொண்டு, அந்நாளில் “மூலமே” என்று பெரும் ஒலியுடன் அழைத்த கஜேந்திரம் என்ற யானை உய்யுமாறு அருள் செய்த மாயேசனும், ஆதிநாராயணரும், பாஞ்சஜன்யம் என்ற நல்ல சங்கினை ஏந்தியவரும், அருட்பாடல்களை ஓதுகின்றவர்களுடைய உள்ளத்தில் உறையும் அன்பரும், மாதவரும், படைப்புக் கர்த்தரான பிரம தேவருக்குப் பிதாவும், மார்பில் மலர்களைத் தரித்தவரும் ஆகிய திருமாலின் திருமருகரே;

வீரமுடைய சேவகரே, உக்ரமுடைய தெய்வத் திருக்குமாரரே, அழகிய சிவந்த பன்னிரு புயங்களையுடைய தலைவரே, கலாபத்தை வீசி நடனமிடும் தூய மயிலை வாகனமாக உடையவரே பெருமை மிகுந்த காவிரி நதியைத் தன்னகத்தே கொண்ட கலிசைச் சேவகனாருடைய உள்ளக் கோயிலிலும், வீரை என்ற பதியிலும், பழநியிலும் வாழ்கின்ற தேவர்கள் போற்றும் பெருமிதமுடையவரே;

பாரி போன்ற கொடைக் குணமுடைய மேகமே; இலக்குமி தேவி வாழ்கின்ற மாலையணிந்த அகன்ற வலிய தோள்களை உடையவனே; அழகனே; பாடவல்ல புலவர்களுடைய சுற்றத்தாருக்கும் என்றும் இனிய வாழ்வுதருஞ் சீலனே; உலக விளக்கே; இன்ப மிகுந்த ஜீவகனே; இந்திரனே; மிக்க பரிசுத்தமான மனிதனே’ என்று சொல்லி, சிறப்பாக எடுத்து ஒப்பற்ற பாடலைப் பாடினாலும், மனம் இரங்காது கோபித்து உரைக்கின்ற உலோபிகளுடைய கடை வாசலிற் சென்று ஒன்றும் பெறாது அயர்ச்சியுறுமாறு, வீணாக செம்மை வாய்ந்த பாமாலைகளைக் கொண்டுபோய் அறிவு இல்லாமல் நிலவெடிப்பில் சிந்தி இறக்கின்றவர்களும் சிலர் இருக்கின்றார்கள்; அறநெறிக்குத் தூரமானவர்களும், தரும சிந்தனையில்லாதவர்களும் ஆகிய மூடர்கள் அருகில் சேரலாமோ? அவ்வாறு சேராமல் இருக்க அருள்புரிவாயாக – என்பதாகும்.

இத்திருப்புகழிலிலும் கஜேந்திரனுக்கு முக்தி அளித்த கதையும், கொடைவள்ளல் பாரி பற்றிய குறிப்பும், உலோபிகளைப் பாடும் புலவர்கள் பற்றியும், பஞ்சாயுதங்களில் ஒன்றான பாஞ்சசன்யம் பற்றிய குறிப்பும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe