spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: மாரீசன் கதை!

திருப்புகழ் கதைகள்: மாரீசன் கதை!

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் பகுதி- 322
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

விடமும் வடிவேலும் – சுவாமி மலைமாரீசன் 1

     எப்போதும் தவறு செய்துகொண்டிருப்பவர்கள் என உலகில் யாருமே கிடையாது. நேரம், சந்தர்ப்பம் தவறு செய்ய வைக்கின்றது; வேறுவழியின்றித் தவறு செய்து சங்கடப்படும்போது, அனுபவம் உணர்த்துகிறது; மனம் நல்வழியைக் காட்டுகின்றது. திருந்துகிறார்கள் அல்லது திருந்தி நல்வழிப்பட முயல்கிறார்கள். அப்போதும் பழைய செயல்களின் வாசனை வந்து தாக்கினால், என்ன விளைவு ஏற்படும் என்பதை விளக்குவது இராமாயணத்தில் வரும் ‘மாரீசன்’ கதாபாத்திரம்.

     தாடகை-சுந்தன் தம்பதியரின் பிள்ளை மாரீசன். அகத்தியருக்குத் தீங்கு செய்து, அவர் சாபத்தால் அரக்கனாக ஆனவன். தாயான தாடகையுடன் சேர்ந்து கொண்டு, முனிவர்களுக்கும் அவர்கள் செய்த யாகங்களுக்கும் பெரிய அளவில் இடையூறு செய்து வந்தவன்.

மாரீசனைப் பற்றி, விசுவாமித்திர முனிவரின் யாகத்தின் போது, விரிவாகச் சொல்லப்படுகிறது. விசுவாமித்திர முனிவர் யாகத்தைத் தொடங்குகிறார்; இராமரும் இலட்சுமணரும் யாகத்தைக் காப்பதற்கான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த வேளையில் மாரீசன், சுபாகு முதலான பல அரக்கர்களுடன் வந்து யாகத்தைக் கெடுக்க முயலுகிறான். இராமர் அம்புகளை ஏவினார். விளைவு என்ன என்பதைக் கம்பர் சொல்கிறார்.

திருமகள் நாயகன் தெய்வ வாளிதான்

வெருவரு தாடகை பயந்த வீரர்கள்

இருவரில் ஒருவனைக் கடலில் இட்டதங்கு

ஒருவனை அந்தகன் புரத்தி னுய்த்ததே

(கம்ப ராமாயணம், பால காண்டம், தாடகை வதைப் படலம்)

     இராமர் எய்த அம்புகளில் ஒன்று, மாரீசனைக் கடலில் கொண்டுபோய்த் தள்ளியது. ஓர் அம்பு, சுபாகுவைக் கொன்றது. மாரீசனைக் கொல்லவில்லை. ஏனெனில் அந்த மாரீசனை வைத்துத்தான் இராமவதாரத்தின் முக்கியமான நிகழ்வு நடந்தாக வேண்டும்.

அதற்காகத்தான் மாரீசனைக் கொல்லாமல் விட்டு வைத்தார் இராமர். இராவணன் சீதையைக் கவர்ந்து கொண்டுபோக, பெரும் துணையாய் – ஒரே துணையாய் இருந்தவன் மாரீசன்.

     சூர்ப்பணகை இராவணனிடம் சீதையைப்பற்றி வர்ணித்து, அவளைத் தூக்கிவரச் சொல்லி விட்டுப் போகிறாள். அதைக் கேட்ட அளவிலேயே இராவணன் சீதையைக் கொண்டுவரத் திட்டமிட்டான். தன் எண்ணத்தை மாரீசன் மூலம் நிறைவேற்றிக்கொள்ளத் திட்டமிட்ட இராவணன் நேரே மாரீசனிடம் சென்றான்.

அங்கே மாரீசன் பொறி புலன்களை அடக்கித் தவம்செய்து கொண்டிருந்தான். தன்னந்தனியனாய்த் தன் இருப்பிடம் தேடி வந்த இராவணனைக் கண்டதும், “இவன் எதற்காக வந்தானோ?” என்று பயந்தான்; இருந்தாலும் அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல், இராவணனை வரவேற்று உபசரித்து, “வந்த காரணம் என்ன?” எனக் கேட்டான்.

     இராவணன் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்லாமல், மாரீசனின் உணர்ச்சியைத் தூண்டி தன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளப் பார்த்தான். “மாரீசா, மானமில்லையா உனக்கு? வலிமையில்லாத மனிதர்கள் வலிமை பெற்றவர்களாக ஆகி, உன் மருமகள் சூர்ப்பணகையின் மூக்கை அறுத்து விட்டார்கள். அதை அறிந்து எதிர்த்த கரன் முதலான உன் உறவினர்களை எல்லாம் கொன்று விட்டார்கள்.

இது உன் குலத்திற்கும் என் குலத்திற்கும் பழியை அல்லவா உண்டாக்கி விட்டது. அதற்கெல்லாம் சேர்த்துப் பழிக்குப்பழி வாங்க வேண்டிய நீ, கைகளைத் தலைக்குமேல் சுமந்துகொண்டு தவம் செய்கிறாயே. அவமானத்தாலும் கோபத்தாலும் என் மனம் கொதிக்கிறது. இருந்தாலும் அந்த மனிதர்களோடு, நான் போர் செய்வது தகாது என்று, உன் உதவியை நாடி வந்தேன். அவர்களோடு இருக்கும் பெண்ணைத் (சீதையை) தூக்கி வரவேண்டும். உன் மருமகளான சூர்ப்பணகையின் மானபங்கத்திற்கு எதிர் மானபங்கம் செய்து, அவர்களைப் பழிக்குப்பழி வாங்க வேண்டும்” என்று விரிவாகப்பேசி, மாரீசனின் உணர்ச்சியைத் தூண்டிவிட முயன்றான் இராவணன்.

     இராவணனின் வார்த்தைகளைக் கேட்டதும் மாரீசனுக்கு உடம்பெல்லாம் எரிவதைப்போல இருந்தது. கைகளால் காதுகளைப் பொத்திக்கொண்டு, “சிச்சீ, என்ன சொன்னாய்?” என்று பயத்தை விட்டு, சிந்தையைத் தெளிவு படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினான்.

“மன்னர் மன்னா, அறிவை இழந்து வாழ்வைக்கெடுத்துக் கொள்ளத் தொடங்கி விட்டாய். ஆயினும் இது உன் செயலல்ல; விதி உன்னைச் செலுத்துகிறது. உன் கோபத்தால் எனக்கு மரணமே வந்தாலும் சரி, நான் பயப்படவில்லை. உனக்கு நல்லதைச் சொல்கிறேன். கேள்.

பெருந்தவம் செய்து, யாரும் பெறமுடியாத உயர்ந்த வாழ்வைப் பெற்றிருக்கிறாய். தர்மவழிப்படி சம்பாதித்ததை, அதர்ம வழியில் செலவழித்து அழிந்து போகாதே. நட்பு பாராட்டும் அரசர்களின் நாட்டைக் கவர்ந்து கொள்வது, குடிமக்களைக் கசக்கிப்பிழிந்து வரி வசூலிப்பது, அடுத்தவன் மனைவி மீது ஆசைப்படுவது ஆகியவற்றைச் செய்பவர்களைத் தண்டிக்க ஆளில்லா விட்டாலும், தர்மதேவதை தண்டிப்பது நிச்சயம்.

இதுவரை, தீயவர்கள் யார் வாழ்ந்தார்கள்? உன் பேச்சைக்கேட்டு நடக்கும், அழகிய மனைவியர் பலர் இருக்க, அயலான் மனைவி மீது ஏன் மோகம் கொள்கிறாய்? சீதையை நீ தூக்கிக்கொண்டு வந்தாலும், அவளை உன்னால் அடைய முடியாது; பழியைத்தான் அடைவாய். என் தாய் தாடகை முதல், கரன் முதலான பலரையும் கொன்ற இராமனின் அம்பால், உன் குலத்தோடு நீ மாண்டு போவாய்.

சொல்வதைக் கேள். தீய எண்ணத்தை விடு. சீரும் செல்வமுமாக இதுவரை வாழ்ந்ததைப்போல, இனிமேலும் சந்தோஷமாக வாழும் வழியைப்பார்” என்று இராவணனுக்கு அறவுரை-அறிவுரை சொன்னான் மாரீசன்.

     இராவணன் கேட்கவில்லை. அப்படியானால் என்ன நடந்தது? நாளை காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe