தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
வங்காளத்தில் மடங்களின் மீதான தாக்குதல் வரம்பை மீறிய செயல், எச்சரிக்கிறார் மோதிஜி
நண்பர்களே, வங்காளத்திலே, உங்கள் நம்பிக்கைகளின் மீது தாக்குதலைக் கட்டவிழ்க்கும் பாவச்செயலை, டி எம் சி அரசாங்கம் செய்கிறது. டிஎம்சியின் தலைவர்கள் கூறுகிறார்கள், நம் இராமர் ஆலயம் பவித்திரத்தன்மை இல்லாததாம்.
இராமர் ஆலயம் பவித்திரமானது கிடையாதா? இராமர் ஆலயம் பவித்திரமானது இல்லையா? டிஎம்சியின் நோக்கங்கள் தூய்மையானதா சொல்லுங்கள்? அட டிஎம்சி அரசாங்கமே, ராமநவமி கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து ஆணை பிறப்பிக்கிறதே!!
டி எம்சி குண்டர்கள், ராமநவமி ஊர்வலங்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றார்களே!! இப்போது இங்கிருக்கும் முதலமைச்சரோ, தானே, இந்துத் துறவிகளுக்கு மிரட்டலா விடுக்கிறார்?
இராமகிருஷ்ணா மிஷன், இஸ்கான், பாரத் சேவா சன்ஸ்தான், இவை நம்முடைய வங்காளத்தினுடைய, ஆன்மீக அடையாளங்கள்.
இந்த மாநிலத்தின் முதல்வர், மேடையிலேயே, இந்த மகத்தான அமைப்புக்களுக்கு மிரட்டல் விடுக்கிறார். இந்த மிரட்டல் தான், டிஎம்சியின் குண்டர்களுக்கு தைரியத்தை அளித்திருக்கிறது.
என்ன தெரிய வந்திருக்கிறது என்றால், ஜல்பைகுடியிலே, இராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்திலே, நேற்று இரவு காலித்தனம் செய்யப்பட்டிருக்கிறது. ஆசிரமத்திலே பணியாற்றுகின்ற பணியாளர்களை, அடித்துப் போட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. நம் வங்காளத்தை இப்போது, எந்தத் திசையில் கொண்டு செல்கிறது டிஎம்சி அரசாங்கம்?
ஒருகாலத்தில் வங்காளத்திலே, இராமகிருஷ்ண மிஷனுக்கு மிரட்டல் விடப்படும், ஆசிரமத்தில் காலித்தனம் நடக்கும் என்று, நாட்டுமக்கள் எப்போதாவது நினைத்திருப்பார்களா?
ஆனால், தன்னுடைய வாக்குவங்கியை குஷிப்படுத்த வேண்டி, டி எம் சி அரசாங்கம், வரம்பை மீறிக் கொண்டிருக்கிறது.
இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.