முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
முதல் அரையிறுதி ஆட்டம்
கொல்கொத்தா vs சன்ரைசர்ஸ் – 21.05.2024
இன்று முதல் அரையிறுதி ஆட்டம் அகமதபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.
ஹைதராபாத் அணியை (19.3 ஓவரில் 159, ராகுல் திரிபாதி 55, கிளாசன் 32, பாட் கம்மின்ஸ் 30, மிட்சல் ஸ்டார்க் 3/34, வருண் சக்ரவர்த்தி 2/26) கொல்கொத்தா அணி (13.4 ஓவரில் 164/2, ஷ்ரேயாஸ் ஐயர் 58, வெங்கடேஷ் ஐயர் 51, ரஹ்மானுல்லா குர்பாஸ் 23, சுனில் நரேன் 21) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (பூஜ்யம் ரன்), மற்றும் அபிஷேக் ஷர்மா (3 ரன்)அதிர்ச்சித் தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய ராகுல் திரிபாதி (35 பந்துகளில் 55 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) சற்று நிலைத்து ஆடினார். ஆனால் நிதீஷ் குமார் ரெட்டி (9 ரன்), ஷபாஸ் அகமது (பூஜ்யம் ரன்) இருவரும் விரைவில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஆடவந்த கிளாசன் (21பந்துகளில் 32 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), அப்துல் சமது (16 ரன்) அணிக்கு ரன் சேர்க்க முயன்றனர்.
ஆனால் அதற்குள் ஆட்டம் கொல்கொத்தா அணியின் கைக்குள் வந்துவிட்டது. சன்வீர் சிங் (பூஜ்யம் ரன்), புவனேஷ் குமார் (பூஜ்யம் ரன்), விஜய்ஸ்கந்த் (7 ரன்) ஆகியோரால் குறைவான் ரன்னே எடுக்க முடிந்தது. எனினும் பேட் கம்மின்ஸ் (24 பந்துகளில் 30 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) அதிரடியால் ஹைதராபாத் அணி 19.3 ஓவரில் 159 ரன் எடுத்து ஆட்டமிழந்தது.
160 ரன் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கொத்தா அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் (23 ரன்), மற்றும் சுனில் நரேன் (16 பந்துகளில் 21 ரன், 4 ஃபோர்) சிறப்பாக ஆடினார்கள்.
இவர்களுக்குப் பின்னர் ஆடவந்த வெங்கடேஷ் ஐயர் (28 பந்துகளில் 51 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (24 பந்துகளில் 58 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் இணைந்து ஆடி, வேகமாக ரன் சேர்த்து 13.4 ஓவரில் தேவையான் ரன் (164/2) எடுத்து, அந்த அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தனர்.
கொல்கொத்தா அணியின் மிட்சல் ஸ்டார்க் தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கொல்கொத்தா அணி இறுதி ஆட்டத்தில் நுழையும் முதல் அணியாகிறது.
நாளை அகமதாபாத்தில் ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியுடன் ஹைதராபாத் அணி 24.05.2024 அன்று சென்னையில் விளையாடும்.