— ஆர். வி. ஆர்
ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவுக்கு அவசியமா? அது தேவை என்று பாஜக-வை எதிர்க்கும் 26 கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு வருடம் முன்பு கோரிக்கை வைத்தன. அந்தக் கோரிக்கை குப்பையானது. அதற்கான வாதங்கள் சப்பையானவை.
அண்மையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்மொழிய, தமிழக சட்டசபையும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் அவசியம் என்று குறிப்பிட்டு, அந்தப் பணியை மத்திய அரசு செய்துதர வேண்டும் என்று வலியுறுத்துகிறது அந்தத் தீர்மானம். அது அர்த்தமற்றது. தீர்மானத்தின் முக்கியப் பகுதி இங்கே:
இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமை, சம வாய்ப்பை உறுதிசெய்யும் வகையில், திட்டங்கள் தீட்டி சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய, ஜாதிரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்.
ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தை திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இப்போது திமுக ஆட்சி. ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசு மாநிலத்தில் இட்ட அடித்தளத்தின் தொடர் பயனையும், காலம் தானாகத் தரும் வளர்ச்சியை மட்டும் தமிழகம் கண்டிருக்கிறது. சாதாரண மக்கள் வேறு பெரிய முன்னேற்றத்தைப் பார்க்கவில்லை. என்ன காரணம்?
மாநிலத்தில் என்ன ஜாதியில் எத்தனை மக்கள் இருக்கிறார்கள் என்ற விவரம் அரசிடம் இல்லை என்பதால்தான், ஸ்டாலின் ஆசைப்படுகிற முன்னேற்றத்தைத் தமிழக மக்கள் இதுவரை அடையவில்லையா? அவர் முன்மொழிந்த சட்டசபைத் தீர்மானம், அதைத்தானே சொல்ல வருகிறது?
சட்டசபைத் தீர்மானம் குறிப்பிடும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, ஆகிய மூன்று விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
“ஆறிலிருந்து பதினான்கு வயதுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் ராஜ்ஜியம் கட்டாய இலவசக் கல்வியை அளிக்கவேண்டும், அதற்கு வழிமுறையான சட்டத்தை இயற்ற வேண்டும்” என்று நமது அரசியல் சட்டம் விதிக்கிறது. இதற்கான சட்ட திருத்தம் 2010-ஆம் வருடம் அமலுக்கு வந்தது.
குழந்தைகளுக்கான கட்டாய இலவசக் கல்வி என்பது எல்லா ஜாதி மத மக்களுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும், அது ராஜ்ஜியத்தின் பொறுப்பு, என்று அரசியல் சட்டம் சொல்கிறது. காலம் காலமாகப் பள்ளிக் கல்வியை மாநில அரசு நிர்வகிக்கிறது, மேற்பார்வை பார்க்கிறது. ஆகையால் தமிழகக் குழந்தைகளின் பதினான்கு வயது வரையிலான பள்ளிக் கல்வி, தமிழக அரசின் கடமை.
பதினான்கு வயது என்பதோடு நிறுத்தாமல், மாநிலத்திலுள்ள சிறுவர்களின் பத்தாம் வகுப்பு முடியும்வரை – ஏன் பன்னிரெண்டாம் வகுப்பு முடியும் வரை கூட – தமிழக அரசு எல்லா ஜாதி மதத்தவருக்கும் தரமான கட்டாய இலவசக் கல்வியை அளிக்கலாம். அரசியல் சட்டம் நிர்பந்திக்காமல் கூட ஒரு அரசு இப்படியான கட்டாய இலவசக் கல்வியை அளிக்க முடியும்.
தமிழகத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் பதினான்கு வயது வரையிலாவது தரமான கட்டாய இலவசக் கல்வி கிடைத்தால் என்னாகும்? சட்டசபைத் தீர்மானத்தில் சொல்லப்பட்ட கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என்ற மூன்று நோக்கங்களும் அடுத்தடுத்து மக்கள் வாழ்வில் தாமாகப் பெரிதளவு நிறைவேறுமே? இதைச் செய்து முடிக்க ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வேண்டாம். முதலமைச்சரிடம் முனைப்பு இருந்தால் போதும்.
ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்தால், அரசு “திட்டங்கள் தீட்டி சட்டங்கள் இயற்றும்” என்கிறது சட்டசபைத் தீர்மானம். தனக்கு ஏற்கனவே அரசியல் சட்டம் அதிகாரங்கள் தரும் விஷயங்களில், தமிழக அரசு – அதுவும் திமுக அரசு – திட்டங்கள் தீட்டி மக்களுக்கான சேவைகளைக் குறை இல்லாமல் அளித்திருக்கிறதா?
அரசியல் சட்டத்தின் கீழ், ஆதியிலிருந்து ஒரு மாநில அரசின் தனியான கட்டுப்பாட்டிலும் பொறுப்பிலும் இருக்கும் சில துறைகள் இவை: சட்டம் ஒழுங்கு, பொது சுகாதாரம், ஆஸ்பத்திரிகள், சாலைகள், நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்தல், பாதாள சாக்கடைகள், நிலம், நில அளவை, பட்டா போன்ற நில ரிகார்டுகள். இவை மாநிலத்தின் அனைத்து மக்களின் வாழ்வோடு, பெரிதும் அன்றாட வாழ்வோடு, தொடர்புடையவை.
மேலே சொன்ன துறைகள் ஏதாவது ஒன்றின் செயல்பாட்டில், தமிழக அரசுக்கு – ஒரு திராவிடக் கட்சியின் ஆட்சிக்கு – நாம் பாஸ் மார்க்காவது தர முடியுமா? சட்டம் ஒழுங்கு பல இடங்களில் பல்லைக் காட்டுகிறது. சாலைகள் வாய் பிளக்கின்றன. அரசு ஆஸ்பத்திரிகள் அழுகின்றன. குடிநீர் நமக்குத் தண்ணி காட்டுகிறது. பாதாள சாக்கடை நீர் சந்திக்கு வருகிறது. பட்டா கேட்டால் பர்ஸைப் பிடுங்குகிறார்கள்.
அரசு நடத்தும் திமுக-வுக்கு, அரசியல் சட்டம் ஏற்கனவே கொடுத்திருக்கும் அதிகாரங்களை மக்கள் நலனில் பிரயோகித்து அவர்களுக்கு நல்லது செய்ய வக்கில்லை. இந்த லட்சணத்தில், மத்திய அரசு ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுத்துக் கொடுத்தால், அதன் பிறகு ஸ்டாலின் அரசு திட்டங்கள் தீட்டுமா? சட்டங்கள் இயற்றுமா? அதன் வழியே “மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமை, சம வாய்ப்பை” உறுதி செய்யுமா? வெற்று வார்த்தைகள்.
இன்னொன்று. மாநிலத்தில் யார் என்ன ஜாதி என்று அரசு தெரிந்துக்கொண்ட பின், சட்டசபைத் தீர்மானத்தின் படி மக்களுக்கு “சம உரிமை, சம வாய்ப்பை” அரசு உறுதி செய்யுமா – வேலைவாய்ப்பு உட்பட? அதாவது, தமிழகத்தில் தனியார் துறையில் தொழில்வளமும் வேலைவாய்ப்பும் விரைவாகப் பெருகாமல் பார்த்துக் கொண்டு, சொற்ப அரசுப் பணி இடங்களுக்காகப் பல லட்சம் மக்களை ஜாதி அடிப்படையில் ஏங்க வைத்துக் கொண்டே இருக்குமா மாநில அரசு? எல்லா ஜாதி மக்களுக்கும் இது எப்போதும் துரோகம் அல்லவா?
அரசியலை ஜாதி ரீதியாக, ஒரு ஜம்பத்துக்காக, வருமானம் பார்க்கும் ஒரு தொழிலாக, செய்யும் சில ஜாதித் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் சங்கதியை அந்தந்த ஜாதிகளில் சிலர் உணர்வார்கள், பலர் உணரமாட்டார்கள். அந்த மாதிரித் தலைவர்களைத் தங்கள் கையில் போட்டுக் கொண்டு, அவர்களோடு பேரம் செய்துகொண்டு, தங்களின் வளத்தை, தங்கள் குடும்பத்தின் செழிப்பை, தங்கள் கட்சியின் நலனை, பாதுகாக்கும் பெரிய கட்சித் தலைவர்கள் உண்டு.
அரசியல் விளையாட்டுக்கள் மூலம் கொழிக்கும் சில பெரிய கட்சிகளின் தலைவர்களுக்கும், அவர்களுடன் அணி சேர்ந்து பயன் பெறும் சில சிறிய கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு லாபம் தரும். மற்றபடி, அரசுமுறையாக இப்படி ஒரு கணக்கெடுப்பு நடந்து அதன் விவரங்கள் வெளியானால், அதன் மூலம் தமிழக மக்கள் – அல்லது தேச அளவில் எல்லா மக்களும் – ஒன்றுபட மாட்டார்கள். மாறாக, அரசியல்வாதிகளின் குயுக்தியால் மக்கள் மேலும் பிளவுபடலாம்.
ஸ்டாலினிடம், அவருடன் உடன்படும் பிற அரசியல்வாதிகளிடம், நாம் கேட்டுக் கொள்ளலாம்: ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்து, நீங்கள் “திட்டங்கள் தீட்ட” வேண்டாம். பாவம் மக்கள். முடிந்தவரை அவர்கள் நலமாக இருக்கட்டுமே!
Author: R Veera Raghavan, Advocate, Chennai ([email protected])
https://rvr-india.blogspot.com