spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்இளம் எழுத்தாளர்களுக்கு... மூத்த எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் கொடுக்கும் ‘டிப்ஸ்’!

இளம் எழுத்தாளர்களுக்கு… மூத்த எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் கொடுக்கும் ‘டிப்ஸ்’!

- Advertisement -

முன்னோடிச் சாதனையாளர்கள் பலர் தமிழில் சாதித்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். அவர்களின் வாரிசுகள் தற்போது என்ன செய்கிறார்கள்?

1. அவர்களைப் பின்பற்றித் தாமும் எழுத்துலகில் பிரவேசித்து எழுதுகிறார்களா?

2. அவர்கள் மேல் மரியாதையோடு இருக்கிறார்களா?

இவ்விரண்டும் தனித்தனிக் கேள்விகள். என்றாலும் இந்தக் கேள்விகளிடையே ஓர் ஒற்றுமையும் இருக்கிறது.

தம் தந்தையைப் பின்பற்றி எழுதுபவர்கள் தந்தையை மதிக்கிறவர்களாகவும் எழுத்தை நேசிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

தந்தையைப் பின்பற்றி எழுத்துலகிற்கு வராதவர்கள் ஏராளம் உண்டு. எழுத்தாற்றல் இல்லாததால் வராதவர்கள் பலர். ஆனால் எழுத்தாற்றல் இருந்தும் எழுத்துத் துறையையே மனம்கசந்து நிராகரித்தவர்களும் பற்பலர்.

அப்படி அவர்கள் `எழுத்துத் துறை தம் தந்தையோடு போகட்டும். தங்களுக்கு வேண்டாம்!` என நிராகரிக்க என்ன காரணம்?

தந்தையின் பொருளாதாரச் சிக்கலை உணர்ந்து, தந்தையின் வாழ்க்கை பற்றி அவர்கள் கொண்ட சலிப்பு ஒரு காரணம். (பாரதி காலம் தொட்டே எழுத்தாளர்களைப் பொருளாதார ரீதியாகப் பாதுகாக்காத, இப்போதும் அவ்விதம் பாதுகாக்க முன்வராத தமிழ்ச் சமூகம் நிரந்தரக் குற்றமுடையது.)

இன்னொரு காரணமும் உண்டு. அதிர்ச்சி தரும் காரணம்தான். ஆனாலும் அதுவே உண்மை. குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்ட தங்கள் தந்தையால் தங்களின் தாயார் பட்ட அவஸ்தையை எழுத்தாளர்களின் வாரிசுகள் உணர்ந்திருப்பதும் ஒரு முக்கிய காரணம்.

விருந்துகளில் அளவோடு குடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அது உடல்நலத்திற்குப் பெரிய கெடுதலை விளைவிக்கப் போவதில்லை என்பதான கருத்து உள்ளது.

ஆனால் அளவோடு குடிப்பது என்பதில் தான் எல்லாமே தொடங்குகிறது. மொடாக் குடியர்களாகி, வீட்டைக் கவனிக்காமல், தன் நண்பர்களில் எவன் குடிக்கக் கடன் தருவான் என்று ஓரக்கண்ணால் பார்த்து, பல பொய்களைக் கூறிக் கடன் என்ற பெயரில் யாசிக்கும் இழிவான நிலைக்கு ஓர் எழுத்தாளரைத் தள்ளுவது, முதலில் அந்த நபர் குடித்த விருந்துக் குடியில் தான் ஆரம்பமாகிறது.

மன உறுதியோடு விருந்துகளில் மட்டுமே குடிக்கும் எழுத்தாளர்களும் சிலர் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் சொற்ப எண்ணிக்கையினரே. எப்போதுமே குடிக்காத எழுத்தாளர்களும் மிகச் சிலர் இருக்கிறார்கள்.

எழுத்தை முழுநேரத் தொழிலாகக் கொள்ளாமல் வேறு நல்ல வேலையில் இருந்துகொண்டு எழுதுபவர்கள் குடித்தால், அதனால் குடும்பம் அதிகம் சிரமப்படுவதில்லை. ஆனால் எழுத்து, பத்திரிகை போன்ற தொழில்களில் மட்டுமே ஈடுபட்டிருப்பவர்கள் குடிகாரர்களாகி, தங்கள் சொற்ப வருவாயையும் குடியில் அழிக்கிறபோது குடும்பம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டதுபோல் பொருளாதார வளமின்றி நடுநடுங்குகிறது.

குடிகார எழுத்தாளர்களுக்குத் திருமணம் செய்துகொள்ள என்ன உரிமை இருக்கிறது? அவர்கள் திருமணமாகாதவர்களாக இருந்தால் அவர்களின் குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் அவர்களோடு போகும். அவர்களின் மோசமான பழக்கத்திற்கு அவரவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் என்ற அளவில் அது நின்றுவிடும்.

ஆனால் குடிக்கிற எழுத்தாளர்களைக் கட்டிக்கொண்ட மனைவி படுகிற பாடு சொல்லும் தரமுடையது அல்ல. மானமிழந்து மதிகெட்டு என்கிறார்களே, அப்படி எல்லா வகையான அவமானங்களையும் அந்த மனைவியும் குழந்தைகளும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

கொஞ்ச காலம் முன்னால் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியவர் எனக்கு நன்கு தெரிந்த ஒரு சகோதரி. ஓர் எழுத்தாளரின் மனைவி.

பிரச்னை இதுதான். அந்த எழுத்தாளர் அதற்கு முந்திய தினம் இரவு குடித்துவிட்டு அவர் வீட்டு முன்னால் உள்ள சாக்கடையில் விழுந்து கிடந்தாராம். அக்கம் பக்கத்தில் பெரிய அவமானமாகிவிட்டது என்று அந்த சகோதரி கண்ணீரில் கரைந்தபோது என்ன சொல்வது என்று அறியாமல் திகைத்தேன். `நீங்கள் அவருக்கு எடுத்துச் சொல்ல முடியுமா` என்று அந்தச் சகோதரி கேட்டார். குறிப்பிட்ட எழுத்தாளரிடம் எடுத்துச் சொன்னேன். ஆனால் எந்த நல்ல விளைவும் ஏற்படவில்லை. நான் நல்ல புத்தி சொன்ன அந்தத் தருணத்திலும் குடிப்பதற்கு என்னிடம் பணம் கேட்டார் அவர்!

அந்தச் சகோதரி வேலைக்குப் போகிற பெண்மணி என்பதால் வீட்டில் பெரிய பொருளாதாரப் பிரச்னை இல்லை. ஆனால் எப்போதும் இத்தகைய கெளரவப் பிரச்னைகள் ஓயாமல் தொடர்ந்தன. பிறகு சகோதரி இந்த எழுத்தாளரின் குடி இம்சை தாங்க இயலாமல் தன் வேலையை வேறு ஊருக்கு மாற்றிக்கொண்டு தன் குழந்தைகளோடு நிரந்தரமாகக் கணவரை விட்டு விலகிவிட்டார்.

மூதறிஞர் ராஜாஜியின் `விமோசனம்` என்ற பத்திரிகை மதுவிலக்குப் பிரசாரத்திற்காகவே நடத்தப்பட்டது. அதன் உள்ளடக்கம் முழுவதும் மதுவிலக்குத்தான். மதுவிலக்கு தொடர்பான கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று எடுத்த பக்கமெல்லாம் அதே கருத்தோட்டம். ராஜாஜியே `சுக்குட்டிக்குப் புத்தி வந்தது!` என்பதுபோன்ற சில அருமையான சிறுகதைகளை மதுவிலக்குக் கண்ணோட்டத்தில் எழுதியிருக்கிறார். டாக்டர் ம.ரா.அரசுவின் மனைவி திருமதி திரிபுரசுந்தரி ராஜாஜியின் `விமோசனம்` பத்திரிகை குறித்து ஆய்வுசெய்து டாக்டரேட் வாங்கியிருக்கிறார்.

அதுபோன்ற ஒரு பத்திரிகை இன்று தேவைப்படுகிறது. எழுத்துலகைப் பொறுத்தவரை அன்றை விட இன்று அது அதிகம் தேவைப்படுகிறது. மதுவை நாம் எதிர்ப்பது ஒழுக்கக் கண்ணோட்டத்தில் அல்ல. உடல்நலக் கண்ணோட்டத்திலும் சமூகக் கண்ணோட்டத்திலும் பொருளாதாரக் கண்ணோட்டத்திலும் தான்.

திருப்பூர் கிருஷ்ணன்

ஆனால் இன்று எழுத்துலகின் நிலைமை என்ன? சில சிறுபத்திரிகைகளில் மது அருந்துவது தமிழர் பண்பாடு என்றும் அதியமான் கொடுத்து அவ்வையார் மது அருந்தினார் என்றும் மதுக் குடித்தலுக்கு ஆதரவான வாதங்கள் பேசப்படுகின்றன. எழுத்தாளர்களுக்கோ அவர்களின் குடும்பத்திற்கோ நலம் செய்யும் வாதமா இதெல்லாம்?

மது குடிப்பது ஒரு கொண்டாட்டம் என்று வாதிடுகிறார்கள் சிலர். கொண்டாட்டம் தான். ஓர் அளவோடு நில்லாவிட்டால் அந்த எழுத்தாளர்களின் குடும்பத்திற்கு நிரந்தரத் திண்டாட்டம் அது.

டிடிகே மருத்துவமனை போன்ற போதை எதிர்ப்பு நிலையங்கள் புகழ்பெற்று விளங்குகின்றன. சமூகத்திற்கு அரிய சேவை செய்துவருகின்றன. மதுவால் பாதிக்கப்பட்டு அதிலேயே ஆழ்ந்திருக்கும் இளம் எழுத்தாளர்கள் உடனடியாக இதுபோன்ற மருத்துவமனைகளையோ சமூகசேவை மையங்களையோ அணுகித் தங்கள் பழக்கத்திலிருந்து முற்றாக விடுபடுவது அவர்களுக்கும் நல்லது. அவர்கள் குடும்பத்திற்கும் நல்லது.

ஒருவன் நல்ல எழுத்தாளனாக இருப்பது முக்கியம் தான். ஆனால் அதை விட முக்கியம் அந்த எழுத்தாளன் தன் மனைவிக்கு நல்ல கணவனாகவும் தன் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாகவும் இருப்பது. அது இயலாதபோது சொந்தக் குடும்பத்திற்கும் தன் உடல் நலத்திற்கும் அநியாயமாகத் துரோகம் செய்து எழுதப்படும் அந்த எழுத்தால் யாருக்கு என்ன லாபம்?

மனைவியின், குழந்தைகளின் நிரந்தர சாபத்தைச் செத்த பின்னும் ஓர் எழுத்தாளர் பெறுவார் என்றால் அது `குடிப்பது தமிழர் பண்பாடு` என்ற வாதத்தோடு ஆதரிக்கப்பட வேண்டிய விஷயமா என்பதைக் குடிக்காக வாதிடும் எழுத்தாளர்கள் சிந்திக்கட்டும்.

  • திருப்பூர் கிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe