
கட்டுரை: பச்சையப்பன்
இந்தப் பழரசம் காலத்தால் பதனிடப்பட்டு எதிர்காலத்தில் உயர்ந்ததொரு மதுவாக மாறும் என்று லியோடால்ஸ்டாயின் தொடக்ககால எழுத்துகளை வாசித்தபோது விமர்சகர் ஒருவர் எழுதினார்.
கல்கி அவர்களின் ஓ மாம்பழமே கட்டுரைத் தொகுப்பை வாசித்த பின்பு ரசிகமணி டி.கே.சி அவர்கள் மாம்பழத்தின் சுவையில் சொக்கிப்போய் எதிர்காலத்தில் கல்கி மகத்தான எழுத்தாளராக மலர்வது திண்ணம் என்று மதிப்பிட்டார். அதிர்ஷ்டவசமாக கல்கியை, டால்ஸ்டாயைப் போல் மதுவிற்கு ஒப்பிடவில்லை. வாழ்நாளெல்லாம் மதுவுக்கு எதிராக எழுதிய கல்கி அதனை ஏற்றிருக்க மாட்டார்.
எனினும், டி.கே.சி அவர்கள் சொன்னது உண்மையாயிற்று. இன்றும் புத்தகக்காட்சி தமிழகத்தில் எங்கு நடந்தாலும் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவல் புத்தக விற்பனையில் முதல் பத்து இடங்களில் ஏதேனும் ஓரிடத்தை தொடர்ந்து வசிக்கிறது. மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுகிறது.
1899ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் புத்தமங்கலத்தில் பிறந்தவர் (கல்கி) கிருஷ்ணமூர்த்தி அவர்கள். 1921ல் திருச்சியில் மேற்படிப்பைத் தொடர்ந்தபோது, பள்ளிப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக படிப்பைத் துறந்தவர், பெரிய கல்விப்புலம் இல்லை எனினும் ராஜாஜி முதல் சத்யமூர்த்தி வரை கற்றறிந்த மிகப்பெரிய ஆளுமைகளுடன் சமதளத்தில் பழகி, உரையாடி எந்த தாழ்வு மனப்பான்மையுமற்ற மிகப்பெரும் ஆளுமையாக கல்கி திகழ்ந்தார்.
கல்வியைத் தொடராமல் இடையில் விட்டுவிட்டார். எனினும், இளம் வயது முதலே இருந்த வாசிப்பு வழக்கத்தைக் கைவிடவில்லை. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் அவர்காலத்தில் வெளியான நாவல்கள் , சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள் என சகலத்தையும் வாசித்து தீர்த்தார். தீராத வாசிப்பு தாகம் அவரை எழுதத்தூண்டிற்று. திரு.வி.க.வின் நவசக்தி இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். 1923 முதல் 1928 வரை நவசக்தியில் பணியாற்றிய ஐந்து ஆண்டுகள். கல்கியை புடம்போட்ட தங்கமாக மாற்றின. பண்டிதர்களே அஞ்சும் வண்ணம் கொடுந்தமிழில் இருந்த தமிழ் இதழுலகை தம் எழுத்தால் பாமரரும் வாசிக்கும் வண்ணம் மாற்றிய திரு.வி.க. அவர்களைப் பின்பற்றி கல்கி அmவர்கள் எழுதிய நகைச்சுவை கலந்த கட்டுரைகளை வாசித்த சீனுவாசன் என்ற நபர், கல்கியைப் பாராட்டி கடிதம் எழுதினார். அந்த சீனுவாசன்தான், எஸ்.எ.வாசன் ஆனந்த விகடனின் பதிப்பாளர்.
ராஜாஜி அவர்களின் திருச்செங்கோடு ஆசிரமத்தில் அவருடைய விமோசனம் இதழுக்காக எழுதிக்கொண்டு இருந்தார் கல்கி. அவருடைய எழுத்தால் கவரப்பட்ட எஸ்.எஸ்.வாசன் கல்கியின் எழுத்தை விகடனுக்கு அனுப்ப அஞ்சல்தலை ஒட்டப்பட்ட கவரை முன்னதமாகவே அனுப்புவாராம். கல்கியின் எழுத்திற்கு மதிப்பூதியமும் முன்னதாகவே அனுப்பினார்.
பிரசுரமாகாத எழுத்தை திரும்ப பத்திரிகைகளிடமிருந்து பெற எழுத்தாளர்கள் தம் படைப்புகளுடன் அஞ்சல்தலை வைத்து அனுப்புவதுதான் வழக்கம். ஆனால், இதழின் பதிப்பாளர் எழுத்தாளருக்கு அஞ்சல்தலைகளை அனுப்பிய வரலாற்றை கல்கியின் எழுத்துவன்மை சாதித்தது.
1931ம் ஆண்டு ஆனந்த விகடனின் ஆசிரியரானார் கல்கி. விகடனில் அவர் எழுதிய தியாக பூமி தொடர் அக்காலத்தில் மிகப்பெரும் புரட்சிகரமான நாவலாக கருதப்பட்டது. விவாகரத்து செய்யும் கணவனுக்கு மனைவி ஜிவனாம்சம் தரவிரும்புவதாக கதையை கொண்டு செலுத்தினால் கல்கி. விகடன் இதழ் வெளியாகும் நாள்களில் விடியற்காலைப் பொழுதில் இரயில் நிலையத்திலேயே காத்திருந்து இதழ்களைப் பெற்றுக் செல்வார்கள். வீடுகளில் யார் முதலில் தியாகபூமியை வாசிப்பது என சுவாரஸ்யமான சண்டைகள் நடக்குமாம்.