பிரிட்டனின் மகாராணியாக சுமார் 70 ஆண்டுகள் இருந்த 96 வயதான மகாராணி 2-ம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் நேற்றைய தினம் உடல் நலக்குறைவால் காலமானார். கிங் ஜார்ஜ் VI இறந்த பின், அவரது மகள் எலிசபெத் அலெக்சாந்திரா மேரி என்ற இயர் பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் பிப்ரவரி 6, 1952 இல் பதவியேற்றார். 16 மாதங்களுக்குப் பிறகு, அவரது முடிசூட்டு விழா ஜூன் 2, 1953 அன்று நடந்தது.
ஏப்ரல் 21, 1926 மேஃபெயாரில் பிறந்த ராணி எலிசபெத் நேற்று வரை ஆன்டிகுவா மற்றும் பார்புடா, ஆஸ்திரேலியா, பஹாமாஸ், பெலிஸ், கனடா, கிரெனடா, ஜமைக்கா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சாலமன் தீவுகள், துவாலு மற்றும் பிரிட்டன் முதலிய 14 நாடுகளுக்கு ராணியாக இருந்தார்.
ராணி எலிசபெத்தின் மூத்த மகனும் தற்போதைய இளவரசுருமான சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் (73) இன்று காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் புதிய மன்னராக பதவியேற்பார்.
அவருடைய இரண்டாவது மனைவி கேமில்லா தற்போது ராணியாகிறார். புதிய மன்னர் சார்லஸ் தன்னுடைய தாயாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இங்கிலாந்து, எடின்பர்க், பெல்ஃபாஸ்ட் மற்றும் கார்டிஃப் ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தனது தாயாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். ராணி இறந்த 4 நாட்களுக்குப் பிறகு, பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு ஊர்வலம் நடத்தப்படும். அங்கு அவரது உடல் வைக்கப்படும். முக்கியமான நபர்கள் முதலில் அஞ்சலி செலுத்துவர். அதனையடுத்து, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.
இதையடுத்து, ஒன்பதாம் நாள், பிரிட்டன் அரசு மரியாதையுடன் ராணி எலிசபெத்தின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்படும். இறுதிச் சடங்கிற்குப் பிறகு, ராணி உடல் விண்ட்சர் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்படும்., அங்கு அவர் தனது கணவர் இளவரசர் பிலிப் மற்றும் அவரது தந்தை கிங் ஜார்ஜ் VI ஆகியோருக்கு அருகில் அடக்கம் செய்யப்படுவார்.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசெபத் மறைவு குறித்து பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ‛பிரிட்டன் ராணி நம் காலத்தில் வாழ்ந்த மிகுந்த மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். தனது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தலை சிறந்த ராணியாக பொறுப்பேற்றிருந்தார். பொது வாழ்க்கையில் கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைப்பிடித்து வந்தார். அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கும் , இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிரேறன்’ இவ்வாறு மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.