நான் பயின்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ் பாடப் பிரிவில் நாவல் ஒன்று கொடுக்கப் பட்டிருந்தது. அது, அகிலன் எழுதிய “பால்மரக் காட்டினிலே” … வகுப்பில் வாசித்துக் காட்டி விளக்கினார் தமிழ்ப் பேராசிரியர் சுபாஷ் சந்திரபோஸ் சார்.
கடனே என்று படித்து வைத்தேன். பின்னாளில் கலைமகள் பத்ரிகை அலுவலகத்தில் பணியில் இருந்த போதுதான், கி.வா.ஜ.,வுக்கும் அகிலனுக்கும் இருந்த தொடர்பு, மலேசியா செல்லும் முன் அகிலனிடம் ஒரு நாவலுடன் வரவும் என கிவாஜ., விடுத்த வேண்டுகோளின் படி, அவர் “பால்மரக் காட்டினிலே” எழுதிய விதம்… இவற்றையெல்லாம் அறிய நேர்ந்தது.
மலேசிய ரப்பர் தோட்டங்களில் கூலித் தொழிலாளராகச் சென்ற தமிழரின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டதுதான் இந்த நாவல்…
அதுபோல்… நெல்லை பத்தமடையில் தோன்றி ஹிமாலயத்தின் ரிஷிகேசத்தில் கரைந்த ஜோதி சுவாமி சிவானந்தர், ஒரு மருத்துவராக மலேசியாவில் இதே ரப்பர் காடுகளில் பெரும் சிரமங்களைச் சந்தித்த தமிழர்களுக்கு எத்தகைய உணர்வுபூர்வமான உதவிகளைச் செய்தார் என்பதைப் படித்த போது, கண்களில் நீர் பெருக்கெடுத்தது..!
கடந்த ஒன்றாம் தேதி, என் ஊர் செங்கோட்டைக்கு வந்திருந்த கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சார், பதிப்பாளர் பி.டி.ராஜன் ஆகியோரை செங்கோட்டையில் இருந்து தென்மலை, குளத்துப்புழா, நெடுமங்காடு வழியாக காரில் திருவனந்தபுரத்துக்கு மலைப்பாதையில் அழைத்துச் சென்றேன். ஆரியங்காவு கடந்து விட்டால், அருமையான சாலை. அதுவரை பொறுமை மிகத் தேவை. அப்போது மலையில் இருபுறமும் இருந்த ரப்பர் மரங்களைப் பார்த்து ரசித்தபடியே மேற்படி “பால்மரக் காட்டினிலே” படித்த அனுபவத்தை கீழாம்பூர் சாரிடம் சொல்லிக் கொண்டே வந்தேன். கலைமகளில் நாவலாக வந்த பின்னணியை அவர் சொன்னார்.
தற்போது, அச்சன்கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு. மதியம் 12 மணி உச்சி தரிசனம் முடிந்து, அருகே இருந்த ஆற்றில் கொஞ்சம் கால் நனைத்து வருவோமே என்று கீழே இறங்கினேன். ஆற்றை ஒட்டி அமைந்திருந்த ரப்பர் மரங்களைக் கண்டதும் இந்த நினைவுகள் தான் ஒட்டிக் கொண்டிருந்தது. ரப்பர் பால் சொட்டுச் சொட்டாக அந்தக் கொட்டாங்குச்சியில் சேர்ந்து கொண்டிருந்தது! இது ரப்பராகி வந்தாலும் அதன் நினைவுகளை அழிப்பது சிரமம் தான்!