spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்கட்டுரைகள்பாரதி-100: மன்னர் குலத்திடைப் பிறந்தவளை..!

பாரதி-100: மன்னர் குலத்திடைப் பிறந்தவளை..!

- Advertisement -
subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு பகுதி – 40
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கண்ணம்மா என் காதலி – 4
மன்னர் குலத்திடைப் பிறந்தவளை
(நாணிக் கண் புதைத்தல்)

நாணிக் கண் புதைத்தல் என்பது ஓர் அகத்திணைத் துறை. வெட்கிக் கண்களைப் பொத்திக் கொள்ளுதல் என்பது இதன் பொருள். காதலி வெட்கத்தால் கண்களை மூடிக் கொள்ளுகின்றாள். ஏன் இப்படி? வேண்டாம் இது; கண்களைத் திற” எனக் காதலன் கூறும் கூற்றே நாணிக் கண் புதைத்தலாகும். “ஒரு துறைக் கோவை” என்ற நூலில் 400 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் நாணிக் கண்புதைத்தல் என்பது பற்றி எழுதப்படுள்ளது. முழுதும் நாணிக் கண்புதைத்தல் என்ற ஒரே துறைபற்றிய பாடல்களே. எடுத்துக்காட்டாக:

திருக்கோவையாரில் இடம்பெறும் ‘நாணிக் கண் புதைத்தல்’ துறைசார்ந்த இரண்டு பாடல்களைப் பார்க்கலாம்.

அகலிடம் தாவிய வானோன் அறிந்திறைஞ்(சு) அம்பலத்தின்
இகலிடம் தாவிடை ஈசன் தொழாரின்இன் னற்கிடமாய்
உகலிடம் தான்சென்(று) எனதுயிர் நையா வகையதுங்கப்
புகலிடம் தாபொழில் வாய்எழில் வாய்தரு பூங்கொடியே.
கொளு
ஆயிடைத் தனிநின்(று) ஆற்றா(து) அழிந்து
வேயுடைத் தோளியோர் மென்கொடி மறைந்தது.

தாழச்செய் தார்முடி தன்னடிக் கீழ்வைத் தவரைவிண்ணோர்
சூழச்செய் தான்அம் பலங்கை தொழாரின்உள் ளந்துளங்கப்
போழச்செய் யாமல்வை வேற்கண் புதைத்துப்பொன் னேஎன்னைநீ
வாழச்செய் தாய்கற்று முற்றும் புதைநின்னை வாணுதலே.
கொளு
வேல்தருங் கண்ணினை மிளிர்வன அன்றுநின்
கூற்றரு மேனியே கூற்றெனக்(கு) என்றது.

இந்தத் துறையில் பாரதியார் இப்பாடலைப் பாடியுள்ளார். இனிப்பாடலைக் காணலாம்.

மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை – இவன்
மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?
சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ? – இங்கு
செய்யத் தகாதசெய்கை செய்தவ ருண்டோ?
வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன் – நின்றன்
மதங்கண்டு துகிலினை வரிதுரிந்தேன்.
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? – எனக்
கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா!

கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? – கன்னங்
கன்றிச் சிவக்கமுத்த மிட்ட தில்லையோ!
அன்னிய மாகநம்முள் எண்ணுவதில்லை – இரண்
டாவியுமொன் றாகுமெனக் கொண்ட தில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? – துகில்
பறித்தவள் கைப்பறிக்கப் பயங்கொள்வனோ?
என்னைப் புறமெனவுங் கருதுவதோ? – கண்கள்
இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ?

நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும் – சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் – தம்முள்
பன்னி உபசரணை பேசுவ துண்டோ?
நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே – விண்ணை
நின்று புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகிளையச் சோதி கவ்வுங்கால் – அவை
முன்னுப சாரவகை மொழிந்திடுமோ?

சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திடேன்; – அவர்
சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில் வந்த உறவன்றடீ! – மிக
நெடும்பண்டைக் காலமுதற் சேர்ந்து வந்ததாம்.
போற்றுமி ராமனென முன்புதத்தனை, – அங்கு
பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்;
ஊற்றுமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோன்- கண்ணன்
உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்கு நான்.

முன்னை மிகப்பழமை இரணியனாம் – எந்தை
மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ;
பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன் – ஒளிப்
பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்.
சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர்காண்; – அவர்
சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை;
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; – இதில்
ஏதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே?

என்னைக் கண்டு ஏன் நானிக் கண் புதைக்கிறாய்? எனக் கேட்கும் போது இராமன்-சீதை (ஜனகன், மிதிலை), இரணியன்-நரசிம்ம அவதாரம், புத்தர்-யசோதரா என இந்தியாவின் வரலாற்றைச் சேர்த்துப் பாடுகிறார் பாரதியார். இதன் விளக்கத்தை நாளை காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe