
“அப்படியென்றால் உலகம் என்று நாம் பார்ப்பது மாயையா? இந்த உபன்யாசம் என்பது உண்மையில்லையா? நாங்கள் கேட்பது உண்மையில்லையா?” என்று பல கேள்விகள் எழும்.
அதற்கு, “அப்படியில்லை, ப்ரஹ்ம ஸத்யம் ஜகன்மித்யா என்றால் அதை ‘பிரஹ்மம் உண்மை, உலகம் உண்மையில்லை’ என்று பொருள் கொள்ளக் கூடாது” என்பதே பதில்.
ஒரு பொருளின் இயல்பை ஸத், அஸத் என இரண்டு வகையாக வர்ணிக்கலாம். ஸத் என்றால் எக்காலத்திலும் இருப்பது. அது மாறுதலுக்குட்பட்டதென்று, நிச்சயமாக உலகம் அப்படிப்பட்டது இல்லை.
அதனால் நாம் பார்க்கும் இவ்வுலகத்தை “ஸத்” என்று சொல்ல முடியாது. எது எக்காலத்திலும் இருந்ததில்லையோ, அது “அஸத்” எனப்படும். உதாரணமாக, முயல் கொம்பை எவனாவது பார்த்திருக்க முடியுமா? முடியாது.
ஏனெனில், அது என்றுமே இருந்ததில்லை. எனவே, முயல் கொம்பு உண்மையில்லை. அதைப் போன்றே இந்த உலகமும் உண்மையில்லையா என்றால், அப்படி இல்லை. நாம் உலகத்தை கண்களால் பார்க்கிறோம்.
அவ்வாறே எல்லா உயிர்களும் பிறக்கின்றன. பின்பு இறக்கின்றன. இந்த ஒரு காரணத்தால், உலகம் நிலையானது மற்றும் அழிவில்லாதது என்று சொல்லிவிட முடியாது.
அதனாலே உலகம் உண்மையோ பொய்யோ அல்ல. அப்படியானால் அவை இரண்டும் சேர்ந்தது எனலாமா? அதுவும் முடியாது. ஒன்றுக்கொன்று முரணான இரண்டு பொருட்கள் ஒரே இடத்தில் இருக்க முடியாது.
உதாரணமாக, வெளிச்சமும் இருட்டும் ஒரே இடத்தில் சேர்ந்திருக்காது. எனவே, இவ்வுலகத்தை “இப்படித்தான் உள்ளது” என்று அறுதியிட்டு உறுதியாக விவரிக்க முடியாது.
அது உண்மையோ பொய்யோ அல்ல. அதை மித்யை என்றே கூறுகின்றனர். மித்யை என்றால் அநிர்வசனீயம் (விவரிக்க முடியாதது) என்று பொருள்.
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்