
~ கட்டுரை: ராஜி ரகுநாதன் ~
யோகி வேமனா என்று அன்போடு அழைக்கப்படும் சித்தர் வேமனா தெலுங்கு மொழியின் பட்டினத்தார் எனலாம்.
யோகியாகவும், தத்துவ ஞானியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், இரும்பை தங்கமாக மாற்றும் ஆற்றல் பெற்ற ரசவாதியாகவும், மூலிகை வைத்தியம் செய்த மருத்துவராகவும், ஆசுகவியாகவும், நம் அருணகிரிநாதரை போல் விலைமகள் மோகத்திலிருந்து தடுத்தாட்கொள்ளப்பட்ட பக்தராகவும் மக்கள் வேமனாவைப் போற்றுகின்றனர்
இவருடைய காலம் குறித்த சரியான தகவல் இல்லாவிடினும் 17ஆம் நூற்றாண்டில் ‘கொண்டவீடு ரெட்டி’ வம்சத்தைச் சேர்ந்த முக்கியத்துவம் பெற்ற சிற்றரசராக வேமனாவின் அண்ணன் இருந்ததாகவும் இவர்கள் ஜங்கம சைவ பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஆய்வாளர்கள் அங்கீகரிக்கின்றனர்.
சார்லஸ் பிலிப் ப்ரௌன் என்ற ஆங்கிலேயர் நம் உ வே சாமிநாத ஐயரைப் போல பல தெலுங்கு இலக்கியங்களை தேடிப் பதிப்பித்தவராக மக்களால் போற்றப்படுகிறார். சார்லஸ் பி ப்ரௌன் மூலம்தான் கவி வேமனாவின் பாடல்கள் நமக்கு கிடைக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேமனாவின் செய்யுட்கள் சிபி ப்ரௌனால் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
வேமனாவின் செய்யுட்கள் மிக எளிய பேச்சுத் தெலுங்கில் சமூக, தார்மீக, நையாண்டி வகையைச் சேர்ந்தவையாக உள்ளன. இவை ‘ஆட்டவெலதி’ என்னும் (நடனப் பெண்) பா வகையைச் சேர்ந்தவை.
வேமனாவின் செய்யுட்கள் அனைத்தும் ‘விஶ்வதாபிராம வினுர வேம’ என்ற ஈற்றடியை மகுடமாக கொண்டுள்ளன. இதற்கான பொருள் பல வகையாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவருடைய வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் இவை நிலை நிறுத்தப்படுகின்றன.
விஸ்வதா என்ற பெண் வேமனாவின் காதலி என்றும் அவள் பலமுறை எடுத்துக் கூறியும் வேமனா தன் நடத்தையை மாற்றிக் கொள்ளவில்லை என்றும் அபிராமா என்ற பொற்கொல்லர் மூலம் குருவை அடைந்து வேமனா பீஜாட்சரம் பெற்று ஞானமடைந்தார் என்றும் அதனால் அவர்கள் பேச்சை ‘கேள் வேமா’ என்னும் பொருளுடைய வினுர வேமா என்று தன் செய்யுளின் இறுதியில் சேர்த்திருப்பதாகவும் பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வரலாறு உள்ளது.

கவி வேமனா கவிதைகளில் சிலவற்றையாவது அறியாத ஒருவர்கூட தெலுங்கில் இருக்க மாட்டார் என்பது உண்மை. மக்களின் பேச்சு எழுத்து, உரையாடல், சொற்பொழிவு என்று அனைத்து விதத்திலும் ‘வேமனா பத்யம்’ எனப்படும் செய்யுள் மேற்கோள் காட்டப்படுகிறது.
தெலுங்கு மொழி கற்கும் மாணவர்களுக்கு முதலில் கற்பிக்கப் படுவது வேமனா செய்யுளே என்பது இதன் புகழை வெளிப் படுத்துகிறது.
யோகி வேமனா அனந்தபூர் மாவட்டம் கடாருபல்லி என்ற கிராமத்தில் இயற்கை எய்தினார் என்று நம்பப்படுகிறது. அங்கு இவருடைய சமாதி தென்படுகிறது. வேமனா செய்யுட்கள் ஐயாயிரத்துக்கு மேல் சேகரிக்கப் பட்டிருந்தாலும் ‘சதகம்’ எனப்படும் நூறு பாடல்களைத் தேர்ந்தெடுத்து ‘வேமன சதகம்’ என்பதாக வழக்கத்தில் உள்ளது.

1972ல் இந்திய தபால் துறை வேமனாவை கௌரவித்து தபால் தலை வெளியிட்டது. ஹைதராபாத் டாங்க்பண்ட் பாலத்தின் மீது வேமனா சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கதிரி வெங்கட் ரெட்டி இயக்கிய யோகி வேமனா என்ற தெலுங்கு திரைப்படம் வி நாகையா நடிப்பில் 1947 இல் வெளியாகி மக்களின் பேராதரவைப் பெற்றது. மீண்டும் 1986ல் சிஎஸ் ராவ் இயக்கத்தில் விஜய்சந்தர், அர்ச்சனா நடிப்பில் யோகி வேமனா திரைப்படம் உருவாகி வெளி வந்தது.