spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்துளசி விவாகம்: பூஜித்தால் கைமேல் பலன்!

துளசி விவாகம்: பூஜித்தால் கைமேல் பலன்!

tulasi
tulasi

1.துளசியின் இலைபூ ஒன்றைத் தோகைஓர் பாகற் கேற்றின்
வளமலி மால்ப தத்தின் மருவவே வாழ்ந்தி ருந்தே
இளமதி அணிந்தோன் பாங்கர் எழில்புனை சாரூ பத்தில்
உளமகிழ் ஞானம் மேவி உயர்பர முத்தி சேர்வார்.

உரை:-

துளசியினது இலைகளிலாயினும், பூக்களிலாயினும் ஒன்றைச் சிவபெருமானுக்குச் சாத்தினால், திருமாலினுடைய வைகுந்தத்தில் வாழ்ந்து, பின்பு சிவலோகத்தில் சாரூப பதவியைப் பெற்றிருந்து, பின் ஞானத்தை அடைந்து, பரமுத்தியைப் பெறுவார்கள்.

குறிப்பு:- துளசியின் பூவை ‘கதிர்’ என்பர்.

2.கருந்துழாய் மாலுக் கேற்றின் கலகவேல் விழியார் போகம்
அருந்தி நான் முகனே யாகி அளவகல் போகம் ஆர்ந்தே
இருந்துபின் வைகுந் தத்தில் இசைந்துமால் போலும் ரூபம் பொருந்திஆ யிரங்கற் பங்கள் போனபின் புகழ்மால் ஆவார்.

உரை:-

கருந்துளசியைத் திருமாலுக்குச் சாத்தினால் மகளிர் போகத்துடன் மற்றைய போகங்களையும் நிரம்பத் துய்த்துப் பின் வைகுந்தத்தை அடைந்து திருமாலின் சாரூபத்தைப் பெற்று ஆயிரகற்பங்கள் இருந்து, அதன்பின் திருமாலாகி அப்பதவியில் வாழ்வார்கள்.

குறிப்பு:- ‘கலகம்’ என்றது காதலை.

3.திங்கள்முன் ஓணம் வெள்ளி செவ்வாய் ஆ தித்தன் வாரம்
மங்கிராக் காலை மாலை மன்அப ராணம் எட்டும் தங்குபன் னிரண்டீ ரேழும் சாற்றும்ஈ ருவாவி னோடும் புங்கமார் விதிபா தந்தான் புகழ்துழாய் கொய்ய லாகா.

உரை:-

ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், திருவோண நட்சத்திரத்திலும், அட்டமி , துவாதசி, சதுர்த்தசி பெளர்ணமை, அமாவாசை என்னும் திதிகளிலும் (*விதிபாத யோகத்திலும் இரவு, வைகறை, மாலை, பிற்பகல் என்னும் காலங்களிலும் துளசியைச் செடியிலிருந்து எடுத்தலாகாது).

குறிப்பு:- ‘காலை’ என்றது வைகறையை. அபராணம் – பிற்பகல் * ‘சத்தமி’ திதியிலும் துளசி எடுத்தல் கூடாது என்பர்.

4.துளபநீள் கதிருள் மன்னும் தூயபூ அலர்ந்த காலைக்
கிளரும்நாள் ஓரா தென்றும் கெழுமிய இலை இரண்டே
அளவிய கதிர்எ டுத்தே அரன்றனக் கணிய லாகும்;
களிமதக் கரிமு கத்துக் கடவுளுக் காகா தன்றே.

உரை:-

துளசிக் கதிருள் பொருந்தியுள்ள பூக்கள் மலர்ந்தபின் கீழே இரண்டு இலைகளை மட்டும் உடையதாயிருந்தால் அவற்றை இன்ன நாள் என்பதைப் பாராமல் எந்த நாளிலும் எடுத்துச் சிவபெருமானுக்குச் சாத்தலாம். துளசி விநாயகருக்கு ஆகாது.

5.துளபம்ஏழ் வாரங் காறும் துலங்கவே சாத்த லாகும்;
துளபம்ஓர் வருடங் காறும் தூள்செய்து சாத்த லாகும்;
கிளரும்முக் கிளைவில் வத்தைக் கெழுமவைத் துலர்த்தித் தூள் செய்து அளவில்கா லங்க ளெல்லாம் அரன்றனக் கணிய லாகும்.

உரை:-

ஒருநாள் எடுத்துவைத்த துளசியை ஏழுவாரம் வரையில்
வைத்திருந்து சாத்தலாம். அதை உலர்த்தித் தூள் செய்து வைத்தால், ஓர் ஆண்டு வரையில் சாத்தலாகும். மூன்று கிளைகளையுடைய வில்வத்தை உலர்த்தித் தூள் செய்தால், எத்தனைக் காலமும் சாத்தலாம்.

குறிப்பு:- தூள்களைச் சாத்துதல், அட்சதை எள் இவற்றைச் சாத்துதல் போலவாம்.

துளசியின் நிழலும் முக்தியைத் தரும்
யமனை ஓதுக்கி விடும்.
ஜட வாழ்க்கையின் துயரங்களை நீக்கும்
துளசியின் நிழல் எங்கெல்லாம் உள்ளதோ, அங்கெல்லாம் இறப்பில் இருந்து முக்தி கிடைக்கும்.
எந்த தானத்தாலும் இத்தகைய முக்தியை அடைவது அரிது.
துளசி வளர்க்கப்படும் வீடு, புனித நீராடும் ஸ்தலம் போல் புனிதமாகிறது.
அங்கு யம தூதர்கள் வருவதில்லை.
ஆயிரம் பாவங்கள் கொண்டவனாக இருந்தாலும், துளசியைக் கையில் வைத்திருந்தவாறு உயிரை விடுபவனை யமனால் காண இயலாது.

1.ஏகாதசி விரதம்
2.பகவத் கீதை
3.கங்கை நீர்
4.துளசியை வாயில் இடல்
5.சராணாமிருதம்
6.ஹரி நாமம்
இந்த ஆறும் இறப்போருக்கு முக்தியை அளிக்கும்.

( கருட புராணம் ஸ்தோத்திரம் 9.6-8, 9.26)

    பெருமாள், கிருஷ்ணர், ராமர், லட்சுமி, அனுமன் மாதிரியான வைணவ கடவுள் கோவிலுக்கு செல்லும்போது துளசி மாலையை சார்த்தி வழிபடுவது வழக்கம். 

தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலை கடைந்து அதிலிருந்து அமிர்தத்தைப் பெற முயன்றனர். அப்போது பாற்கடலிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன், சங்கு ஆகியவை வெளிவந்தது.
ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அக்கலசத்தின்றும் பச்சை நிற மேனியுடன் ஸ்ரீ துளசி மகாதேவி தோன்றினாள். மகாவிஷ்ணு துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகாவிஷ்ணு வைத்துக்கொண்டு ஏனையவற்றைத் தேவர்களுக்கு வழங்கி விட்டார்.

துளசி துண்டில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் ஆகியோர் வசிக்கின்றனர். இலையின் நுனியில் பிரம்மன், மத்தியில் மாயோன் மற்றும் லட்சுமி சரஸ்வதி, காயத்ரி, பார்வதி முதலானோர் வசிக்கின்றனர். துளசியை நினைத்தால் பாவம் போகும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான்.

துளசியை வழிபட்டால் ஆயுள் பலம், புகழ், செல்வம், மக்கட்பேறு முதலியன பெருகும். துளசி காஷ்ட (கட்டை) மாலையைக் கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும். துளசி தீர்த்தத்தைப் பருகினவர் பரமபதம் செல்வர்.

சகல சௌபாக்கியம் பெற!*
துளசி வழிபாடு
சகல தோஷங்களையும், துயரங்களையும் விரட்டும் வல்லமை வாய்ந்தது துளசி. புராணங்களும் ஞானநூல்கள் பலவும் இதன் மகிமைகள் குறித்து விவரிக்கின்றன.*

இந்த உலகில் ஓரிடத்தில் வகை வகையாக மலர்ச் செடிகள் செழித்து வளர்ந்திருந்தாலும் அங்கு துளசிச் செடி இல்லையெனில், அந்த இடத்தை நந்தவனமாக ஏற்க இயலாது .

துளசி படர்ந்த இடத்தை ‘பிருந்தாவனம்’ என்பர். துளசிக்கு ‘பிருந்தா’ என்றும் ஒரு திருப்பெயர் உண்டு.

வாழ்நாளின் அந்திமத்தில் துளசி தீர்த்தம் உட்கொள்பவர், மகா விஷ்ணுவுடன் ஐக்கியமாகி விடுவார்கள்

பூஜைக்காக துளசியைப் பறிக்கும்போது, அதிகாலை வேளையி லும், விரல் நகம் படாமல் விஷ்ணுவின் பெயரை உச்சரித்தவாறும் துளசியைப் பறிப்பதே முறை.

துளசியைப் பறித்து மூன்று நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம்.

தனித்தனி இலையாகப் பறிக்காமல் நான்கு இதழ், ஆறு இதழ்களாகப் பறிக்கலாம்.

முன்னோர் திதிநாள்,
விரத நாள்,
தெய்வப் பிரதிஷ்டை தினம்,
மகாவிஷ்ணுவை வழிபடும் வேளை,
தானம் கொடுக்கும் நேரங்களில் துளசியை உபயோகிப்பதால், பன்மடங்கு பலன் கிடைக்கும்.

சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒரே இடத்தில் பூஜை செய்பவர்களுக்கு, முக்காலத்தையும் உணரும் சக்தி ஏற்படும் என்பது சாஸ்திரக் கருத்து.

ஒரு துளசி தளத்தில் 33 கோடி தேவர்களும், பன்னிரு சூரியர்களும், அஷ்ட வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கின்றனர்.

அதன் நுனிப்பகுதியில் பிரம்மனும்,
நடுவில் மகாவிஷ்ணுவும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரீ, பார்வதி ஆகியோரும் வசிக்கின்றனர்.

துளசியை வளர்த்து வழிபடுபவதால் ஆயுள் பலம், புகழ், செல்வம், குழந்தைப்பேறு ஆகியன கிட்டும். துளசி காஷ்டம் என்ற மணிமாலையைக் கழுத்தில் அணிபவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் விலகும்; மற்ற பாபங்களும் அகன்று விடும்.

எந்த இடத்தில் துளசிச் செடி உள்ளதோ அங்கே அகால மரணம் ஏற்படாது. துளசியை பூஜை செய்து வந்ததன் பலனாகவே சீதாதேவி ராமபிரானைக் கணவராக அடைந்ததாக துளசி ராமாயணம் கூறுகிறது.

சிலர், கருந்துளசியைப் பயன்படுத்தக் கூடாது என்பார்கள். இது தவறு. கருந்துளசிக்குக் ‘கிருஷ்ண துளசி’ என்ற பெயர் உண்டு. இதை, கிருஷ்ணருக்கு மட்டுமல்ல, எல்லா தெய்வங்களுக்குமே பயன்படுத்தலாம். விநாயகர், சக்திதேவி, சிவனுக்குப் போடாமல் தவிர்க்கலாம். பச்சையும், சிறிது வெண்மையும் கலந்ததே வெண் துளசி. இதை ராமபிரானுக்கும் அனுமனுக்கும் சூட்டலாம். இவை தவிர, செந்துளசி என்றும் வகையும் அரிதாகக் கிடைக்கிறது.

துளசியில் 9 வகைகள்.

 1. கரியமால் துளசி
 2. கருந்துளசி
 3. கற்பூரத் துளசி
 4. செந்துளசி
 5. காட்டுத்துளசி
 6. சிவ துளசி
 7. நீலத்துளசி
 8. பெருந்துளசி
 9. நாய்த்துளசி இந்த துளஸி தளத்தை எடுக்கப் போகிறேன். அவ்வாறு எடுக்கும்போது உனக்கு நோகும். உன்னை ஹிம்ஸை பண்ணுகிறேன். யாருக்காக….? எனக்காக அல்ல… கேசவனுக்காக. ⁃ இதைச் சொன்னவுடனே துளசிக்கு அவ்வளவு சந்தோஷமாம்! “கேசவனின் பொருட்டா? இதோ என்னை அர்ப்பணம் பண்ணுகிறேன்…” என்று ஆனந்தமாய் துளசி கையில் வந்து உட்காருகிறாளாம்!

மூன்று தளங்கள் உடையதாய், அழகான அந்த கிருஷ்ண துளசியை (கருந்துளசி), மேலேயுள்ள குமுசத்தோடு பறித்து பகவானுக்கு அர்ச்சனை பண்ணினால் அவன் மிகுந்த சந்தோஷப் படுவான். கட்டை விரலையும், பவித்திர விரலையும் உபயோகித்து, நகம் படாமல் சதை மட்டும் படும்படியாகத் துளசியைப் பறிக்க வேண்டும். நகம் பட்டாலோ, உருவி எடுத்தாலோ பகவான் அதை ஏற்க மாட்டான். இதனால் இரண்டுவித அபசாரங்கள் ஏற்பட்டுப் போகும் – துளசியினிடமும் அபசாரம், பகவானிடமும் அபசாரம்.

எனவே, ரொம்ப ஜாக்கிரதையாக எடுத்து துளசியை அவன் திருவடியிலே அர்ப்பணம் பண்ண வேண்டும்.

புஷ்பத்தையோ, துளசியையோ எடுத்து ஹ்ருதயத்துக்கு நேரே வைத்து, இந்த என் ஹ்ருதயம் அமிர்த மயமானது. இந்த ஹ்ருதயத்தை உனக்குச் சமர்ப்பிக்கிறேன்; என்னையே உனக்குச் சமர்ப்பிக்கிறேன் என்று அர்ப்பணிக்க வேண்டும்.

ஹ்ருதய சமர்ப்பணம் என்பது “தடாலென்று” நிகழ்ந்து விட முடியுமா…? “இப்படி ஹ்ருதய ஸ்தானத்தில் புஷ்பத்தை வைத்து சமர்ப்பிக்கிறேன். என் ஹ்ருதயத்தை ஏற்றுக் கொள்” என்று புஷ்பார்ச்சனை மூலமாக நிகழ்கிறது.

நெஞ்சமெல்லாம் கொள்ளை கொண்ட பெருமான்; நெஞ்சில் நிறைந்தவன் அவன்!
!‌ “நெஞ்சு நிறைய வந்து புகுந்தாய்” என்கிறார் ஆழ்வார்.!”
“இனிமேல் இந்த நெஞ்சுக்குள்ளே நுழைய வேறு எதற்கும் இடம் இருக்கிறதா…? நீயே நிரம்பி வழிகிறாயே…!” – ஹ்ருதயம் பூர்த்தியாக நிரம்பி வழியும்படியான இந்த நிலையில் புஷ்பத்தை எடுத்து பகவானுடைய திருவடியிலே அப்படி அர்ச்சனை பண்ண வேண்டும்.

துளசியைப் பற்றி பத்ம புராணம் .

எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்றுப் பட்டாலே பாவங்களும் ரோகங்களும் விலகி விடும். துளசி இலையைத் தெய்வப் பிரசாதமாக உண்பவர்க்கு சகல பாவங்களும் தொலையும்.

எவரது இல்லத்தில் துளசிச்செடிகள் நிறைய இருக்கிறதோ அந்த இடம் புண்ணியமான திருத்தலம். அங்கு அகால மரணம், வியாதி முதலியன
ஏற்படாது. துளசிச் செடிகளைத் திருமாலின் அம்சமாக மதித்துப் பூஜை செய்யவேண்டும். துளசி தளத்தால் திருமாலை அர்ஜனை செய்து பூசிப்பவருக்கு மறுபிறவி கிடையாது.

அனுமார் இலங்கையில் சீதா தேவியைத் தேடி அலைந்தபோது ஒரு
மாளிகையில் துளசி மாடத்தையும் நிறைய துளசிச் செடிகளையும் கண்டு இங்கு
யாரோ ஒரு விஷ்ணு பக்தர் இருக்கிறாரென்று ஊகித்தாராம். அங்கு இறங்கி விசாரித்தபோது அது விபீஷணரின் மாளிகை என்று தெரிய வந்ததாம்.

சீதை துளசியை பூஜை செய்ததின் பயனாக அவளுக்கு ராமபிரான்
கணவராக கிடைத்தாரென்று துளசி ராமாயணம் கூறுகிறது.

விஷ்ணு பூஜைக்குப் பிறகு சந்தன தீர்த்தத்துடன் துளசி தளத்தைப்
பிரசாதமாகப் பெறுவது பக்தர்கட்கு உவப்பானதாகும். இதைச் சரணாமிர்தம்,
தீர்த்த பிரஸாதம், பெருமாள் தீர்த்தம் என்றெல்லாம் சிறப்பித்துக் கூறுவர்.
இதைப்பற்றி ஆகமநூல்,

அகால மிருத்யு ஹரணம் ஸர்வ வியாதி விநாசனம்*
விஷ்ணோ பாதோதகம் பீத்வா புனர் ஜன்ம ந வித்யதே

மாங்கல்ய பலம் நீட்டிக்கும் துளசி வழிபாடு.

முக்தியை வேண்டுவோர்க்கு முக்தியையும்,போகத்தையும் தரவல்ல காமதேனுவாம் கற்பக விருட்சம் துளசி. துளசி செடி உள்ள இடத்தை நீரால் கழுவி, கோலமிட்டு, துளசிச்செடிக்கு நீரூற்றி, செடியின் இலைகளில் மஞ்சள், குங்குமம் வைத்து, பூ வைத்து, விளக்கேற்றி வைத்து துளசி ஸ்தோத்திரத்தை பதினெட்டு முறைகள் சொல்லி வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். மாங்கல்ய பலம் நீடிக்கும். முடிவில் துளசி செடியின் நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்.

யன்மூல ஸர்வ தீர்த்தாளி யன் மத்யே ஸர்வ தேவதா|
யதக்ரே ஸர்வ வேதாச்ச துளஸீம் தம் நமாம்யஹம்||

ஓங்கார பூர்விகே தேவி ஸர்வதேவ ஸ்வரூபிணி|
ஸர்வ தேவமயே தேவி சௌமாங்கல்யம் ப்ரயச்சமே||

கணவன் நலமுடன் வாழ இந்த ஸ்லோகத்தை 1008 முறைகள் சொன்னால் நல்ல பலன் கிடைக்கும்.

துளசியை வழிபட மந்திரம்

துளசி மாடத்தை மூன்று முறை வலம் வந்து கீழ்க்கண்ட மந்திரத்தை கூறினால் ஸ்ரீமஹாலட்சுமி கடாக்ஷம் உண்டாகும்.

நமஸ் துளசி கல்யாணி, நமோ விஷ்ணுப்ரியே சுபே

நமோ மோக்ஷப்ரதே தேவி: ஸம்பத் ப்ரதாயிகே.

எத்தனை வகைப்பூக்கள் இருந்தாலும், துளசி செடி இல்லாவிட்டால் அது நந்தவனம் ஆகாது.

1) துளசி மட்டுமிருந்தால் கூட அது சிறந்த நந்தவனமாகிவிடும்.

2) துளசி படர்ந்த இடம் பிருந்தாவனமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை.

3) துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு, 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

4) மரண காலத்தில் துளசி தீர்த்தம் அருந்துபவர்களை பெருமாள் தன்னுடன் சேர்த்து கொள்கிறார்.

5) வீட்டில் துளசிச் செடி இருந்தால் இடி, மின்னல் தாக்காது என்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் வளர்ப்பது நல்லது

6) துளசிக் கஷாயம் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணி.

7) பவுர்ணமி, அமாவாசை, சஷ்டி, தீட்டு காலங்கள், துவாதசி, மாதப்பிறப்பு, உச்சி வேளை, இரவு வேளை, எண்ணை தேய்த்து கொண்டு துளசி பறிக்க கூடாது.

8) அதிகாலைப்பொழுதும், சனிக்கிழமைகளிலும் விரல் நகம் படாமல் விஷ்ணு பெயரை உச்சரித்து கொண்டு துளசி பறிக்க வேண்டும்.

9) துளசி பறித்த 3 நாள் வரை உபயோகப்படுத்தலாம்.

10) விரதநாள், மூதாதையரின் திதி நாள், தெய்வ பிரதிஷ்டை நாள், இறைவனை வணங்கும் வேளை, தானம் செய்யும் போது ஆகிய இடங்களில் துளசி பயன்படுத்துவதால் அந்த செயல் பரிபூரண பலன் கொடுக்கும்.

கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார். இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள். அத்துடன் கிருஷ்ணனை தன் மனதில் வைத்து எப்போதும் பூஜித்து வந்தாள்.

ஆனால் பாமாவோ, விஷ்ணு தன்னை மார்பில் சுமந்திருப்பதாலும், கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்ததாலும், தனது திருமணத்தின் போது ஏராளமான செல்வம் கொண்டு வந்தாலும் நாரதரின் உதவியோடு கண்ணனை தனக்கே உரிமையாக்கிகொள்ள நினைத்தாள்.

இதற்காக கண்ணனை, துலாபார தராசு தட்டின் ஒரு புறமும், மற்றொரு தட்டில் தனது செல்வம் முழுவதையும் வைத்தாள். ஆனால் தராசு சமமாகவில்லை. அப்போது அங்கு வந்த ருக்மணி, கண்ணனுக்காக கொடுக்க தன்னிடம் ஒன்றுமில்லையே என வருந்தி, கண்ணனுக்கு பிடித்த துளசி இலை ஒன்றை தராசு தட்டில் வைத்த போது தராசு சமமாகியது.

கண்ணன் புன்முறுவலுடன், நான் இப்போது யாருக்கு சொந்தமானவன் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். நான், எனது என்ற அகந்தையை ஒழித்து, உண்மையான பக்தியுடன் என்னை சரணடைபவருக்கே நான் சொந்தம் என்றார்.

தனது அகந்தை நீங்கிய நிலையில் கண்ணனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்டாள் பாமா, அந்த துளசி இலையை தன் தலையில் சூடிக்கொண்டாள்.

அமாவாசை அன்று யாக்ஞவல்கியரின் மனையாளான காத்யாயினி சக்தியை துளசியால் வழிபட்டால், பிரிந்த தம்பதியர் மீண்டும் இணையும் பாக்கியம் கிடைக்கும்.

ஸ்தோத்திரம்

தனது வேரின் அடியில் சகல தீர்த்தங்களையும், நடுவில் சர்வ தேவதைகளையும், நுனியில் சர்வ வேதங்களையும் கொண்ட ஸ்ரீதுளசியை நமஸ்கரிக்கிறேன்.

thulasi
thulasi

தன்னை தரிசிப்போரது சகல பாவங்களையும் போக்குபவள். தன்னை ஸ்பரிசிப்போரது மேனியைத் தூய்மைப்படுத்துபவள். தன்னை வணங்குவோரது சகல நோய்களையும் தீர்ப்பவள். தனக்கு நீர் வார்ப்போரைக் கண்டு எமனும் நடுங்குமாறு செய்பவள்(எம பயத்தைப் போக்குபவள்). தன்னை விதிப்படி பிரதிஷ்டை செய்பவர்களை(பூஜிப்பவர்களை), ஸ்ரீகிருஷ்ணரது அன்புக்குரியவர்களாகச் செய்பவள். தன்னை பூஜித்தால் மோக்ஷத்தை நல்குபவள். அத்தகைய மகிமை பொருந்திய ஸ்ரீதுளசியை வணங்குகிறேன்.

ஸ்ரீ துளசி, பவித்ரமானவள், பூஜிக்கத் தகுந்தவள், பிருந்தாவனத்தை வாசஸ்தலமாகக் கொண்டவள், ஞானம் நல்குபவள், ஞானமயமானவள், எவ்விதக் களங்கமும் அற்றவள், எல்லோராலும் பூஜிக்கப்படுபவள்.

ஸ்ரீ துளசியானவள், கற்புக்கரசி, பதிவிரதை. பிருந்தா என்ற ரூபமுடையவள். பாற்கடலைக் கடைந்த போது தோன்றியவள், (கறுப்பு, பச்சை, வெள்ளை) ஆகிய மூன்று வித வண்ணங்களை உடையவள். எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவள்.

ஸ்ரீ துளசி தேவி, ஸ்ரீதேவியின் தோழி. எப்போதும் சுத்தமானவள். (பறித்துப் பல நாட்கள் இருந்தாலும் சுவாமிக்கு அர்ச்சனை செய்திருந்தாலும் மற்ற புஷ்பம் போல் நிர்மால்யம் என்ற தோஷமில்லாதவள்), அழகிய பற்கள் உடையவள், பூமியைப் புனிதமாக்குபவள், எப்போதும் ஸ்ரீஹரியையே தியானிப்பவள், பகவானது பாதத்தையே தன் இருப்பிடமாகக் கொண்டவள்.

ஸ்ரீ துளசி, புனிதத்தின் திருவுருவமானவள். மிகச் சிறந்தவள், நல்ல வாசனையுள்ளவள், அமிர்தத்தோடு கூடவே தோன்றியவள், நல்ல தோற்றத்தையும், ஆரோக்கியத்தையும் தருபவள், மகிழ்ச்சியானவள், மூன்று சக்திகளின் (துர்கா, லக்ஷ்மீ, சரஸ்வதி) திருவடிவானவள்.

ஸ்ரீ துளசி தேவி மிகப் பிரகாசமானவள், தேவர்களாலும் முனிவர்களாலும் துதிக்கப்படுபவள், அழகிய திருவுருவம் உடையவள், ஸ்ரீவிஷ்ணுவின் மனதிற்குப் பிரியமானவள், பூதம், வேதாளம் முதலியவற்றால் உண்டாகும் பயத்தை நீக்குபவள், மஹா பாபங்களைப் போக்குபவள்.

விருப்பங்களை நிறைவேற்றுபவள், ஸ்ரீ துளசி தேவி. மேதா (மேதைத் தன்மை, நுண்ணறிவு) வடிவமானவள், ஒளி ரூபமானவள், வெற்றியை அளிப்பவள், சங்கு, சக்கரம், கதை, தாமரை இவற்றைத் தரித்திருப்பவள், தன் விருப்பத்திற்கேற்ற ரூபத்தை எடுக்கும் சக்தியுடையவள்.

மோட்சத்தைத் தருபவள், ஸ்யாம (கரும்பச்சை) வர்ணம் உள்ளவள் (என்றும் இளமையானவள்), மெல்லிய இடை உடையவள், அழகான கேசமுள்ளவள், வைகுண்டத்தை வாசஸ்தலமாக உடையவள், ஆனந்தத்தை அளிப்பவள், கோவைப்பழம் போன்ற உதடுகள் உள்ளவள், குயில் போன்ற குரல் உடையவள்.

பொன்னிறமானவள் (கபிலா என்ற பசு வடிவமானவள்), (கண்டகி) நதி உண்டாகக் காரணமானவள் (கண்டகீ என்ற நதி துளசீ தேவியின் உடலிலிருந்தும் துளசிச் செடி அவளது கேசத்திலிருந்தும் உண்டானதாக புராணம்), ஆயுள் விருத்தியைத் தருபவள் (பெண்கள் துளசியைத் தினமும் பூஜை செய்தால் கணவனின் ஆயுள் விருத்தியாகும்), வன(காடு) ரூபமானவள் (துளசி ஒரே செடியானாலும் புதர் போல் வளரும் என்பதால்), துக்கத்தை நசிப்பவள், மாறுதல் இல்லாத, இறைவனைப் போன்றவள், நான்கு திருக்கரங்களை உடையவள்.

கருடனை வாகனமாக உடையவள், சாந்தமானவள், புலனடக்கம் நிரம்பியவள், துன்பங்களைப் போக்குபவள், ஸ்ரீவிஷ்ணு மூலிகையாக உள்ளவள். (விஷ்ணுவுக்கு வேர் போன்றவள் – துளசிக்கு விஷ்ணு மூலிகா என்று பெயர்), நன்கு வளர்ந்த தேகமுடையவள், தர்ம, அர்த்த காம பலன்களைத் தன்னை உபாசித்தவர்களுக்கு அளிப்பவள்.

மூன்று சக்திகளுக்கும் மேலான சக்தியானவள். மஹாமாயையின் ஸ்வரூபமானவள், லக்ஷ்மீயாலும், சரஸ்வதியாலும் பூஜிக்கப்படுகின்ற‌வள், சுமங்கலிகளைப் பூஜித்தால் சந்தோஷமடைபவள். சகல மங்கலங்களையும் விருத்தி செய்பவள்.

thulasi 1
thulasi 1

சாதுர்மாஸ்ய உத்சவ காலத்தில் விசேஷமாகப் பூஜிக்கத் தக்கவள். சாதுர்மாஸ்யத்தில் தன்னை பூஜிக்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ மகாவிஷ்ணுவின் சந்நிதானமான வைகுண்டத்தை அடையும் பாக்கியம் அளிப்பவள், உத்தான துவாதசியில் விசேஷமாகப் பூஜிக்கத்தக்கவ‌ள். (சயன ஏகாதசி – சுவாமி சயனிக்கும் நாள், பரிவர்த்தன ஏகாதசி – புரளும் நாள், உத்தான ஏகாதசி -‍சயன நிலையிலிருந்து எழுந்திருக்கும் நாள்), சகல தேவர்களாலும் பூஜிக்கப்படுகின்றவள்.

கோபியர்களுக்கும் அவர்கள் ப்ரேமை கொண்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணருக்கும் இடையில் அன்பு பாலமாக இருப்பவள். அழிவற்றவள், முக்குணங்களுக்கப்பாற்பட்டவள் (நிர்க்குணா), பார்வதி தேவிக்குப் பிரியமானவள், அபமிருத்யுவைப் போக்குபவள் (துளசிவனம் உள்ள இடத்தில் அகால மரணம் ஏற்படாது), ராதா தேவிக்கு மிகவும் பிரியமானவள், மான் போன்ற விழிகளை உடைய‌வள்.

வாடாத ரூபமுள்ளவள், அன்னம் போன்ற நடையழகை உடையவ‌ள், கமலாசனத்தில் வீற்றிருக்கும் பிரம்ம தேவரால் வணங்கப்படுகின்றவ‌ள், பூலோகத்தில் வாசம் செய்பவ‌ள், சுத்தமானவள், ராமகிருஷ்ணாதிகளால் பூஜிக்கப்பட்டவள்.

சீதா தேவியால் பூஜிக்கப்பட்டவள், ஸ்ரீராமனது மனதிற்குப் பிரியமானவள், ஸ்வர்க்கத்தை அடைவிப்பவளாக இருப்பவள் (நந்தன ஸம்ஸ்திதா), சகல புண்ணிய தீர்த்த மயமானவள், மோட்ச வடிவானவள், உலகை சிருஷ்டிப்பவள்.

காலையில் தரிசிக்கத்தக்கவள், உடல் மற்றும் மனதின் களைப்பை அகற்றுபவள்,

ஸ்ரீவிஷ்ணுவின் பத்தினியாக விளங்குபவள், சகல சித்திகளையும் தருபவள், நாராயண ஸ்வரூபமானவள் (நாராயணீ), சந்ததியை நல்குபவள், தன் வேரின் மண்ணை பக்தியுடன் அணிபவரைப் புனிதப்படுத்துபவள்.

அசோகவனத்தில் உள்ளவள், சீதையால் தியானம் செய்யப்பட்டவள், தானே தனக்குப் புகலிடமானவள், கோமதீ, சரயூ ஆகிய புண்ணிய நதிகளின் கரையில் தோன்றி வளர்பவள். சுருண்ட கூந்தலை உடையவ‌ள்.

தகாதவர் உணவைப் புசித்த பாவத்தைப் போக்குபவள், தானம் செய்யும் போது விடும் நீரைச் சுத்தமாக்குபவள் (தானம் செய்யும் போது, துளசி தீர்த்தம் விட்டு தானம் செய்தாலே, தானத்தின் பலன் கிடைக்கும்). (துளசி தளத்தை) பிரசாதமாகக் காதில் அணிந்தால் மிக்க சந்தோஷம் அடைபவள், மங்களமானவள், விரும்பிய எல்லாம் அனைவருக்கும் அளிப்பவள். அத்தகைய மகிமை பொருந்திய துளசி தேவியை வணங்குகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe