அமரர் ச.வே.சுப்ரமணியம்: நினைவலைகள்

முனைவர் ச.வே.சுப்ரமணியம். நெல்லைக்காரர். ஊத்துமலை ஜமீனைச் சேர்ந்த வீரகேரளம்புதூரைச் சேர்ந்தவர். எனக்கு சிறுவயதில் பழக்கமான முகம்! தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் பள்ளிப்பருவத்தில் சந்தித்தேன். தமிழ் இலக்கியங்கள், பிரபந்தம், கம்பராமாயணம் குறித்தான எனது இளம் பருவத்தின் துளிர்ப் பேச்சுகளைக் கேட்டு மகிழ்ந்தவர், அதே திருவள்ளுவர் கழகத்தில் இருந்த அவர் எழுதிய இரு புத்தகங்களை கையெழுத்திட்டு அன்பளிப்பாகக் கொடுத்தார். ‘கம்பனும் இளங்கோவும்’ என்ற ஒப்பீட்டு நூல். சிறுவயதில் ரசித்துப் படித்தேன். அதன் பின்னர் அவரை சுமார் 15 வருடங்கள் கழித்தே சந்திக்க முடிந்தது.

2005ம் வருடம் மே மாதம். என் தந்தையார் வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அது அவர் பிறந்து வளர்ந்து பள்ளிப் படிப்பும் முடித்த ஊர்தான். ஊத்துமலை ஜமீன் வீடும் தாலுகா அலுவலகமும் அருகருகே இருக்கும்! அருகிலேயே நவநீதகிருஷ்ணன் ஸ்வாமி கோயில்!

என் தந்தையார் பணி ஓய்வு பெறும் நாளில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் மீண்டும் ச.வே.சுப்ரமணியத்தைச் சந்தித்தேன். அப்போது அவர் பணி ஓய்வு பெற்று, ஆலங்குளத்தை அடுத்த பகுதியில் தனக்கென, தன் நூலாராய்ச்சிகளுக்கென ஒரு ஊரையே தமிழூர் என உருவாக்கியிருந்தார். ஆலங்குளத்தில் இருந்து நெல்லை செல்லும் வழியில் வலப்புறம் தமிழூர் எனும் பெயர்ப்பலகையைக் காணலாம்!
அந்த நிகழ்ச்சியில் அவர் வந்திருந்த காரணம்… அதே நாளில் அதே அலுவலகத்தில் பணியாற்றிய ச.வே.சு.,வின் மருமகனும் பணி ஓய்வு பெற்றிருந்தார். அதற்காகவே அவர் வந்திருந்தார். அப்போதே உடல் சற்று தளர்ந்திருந்தது. காது கேட்புத் திறனில் மந்தம்! அருகே சென்று சப்தமாகப் பேச வேண்டும்!

அந்த நேரத்தில் நான் மஞ்சரி இதழாசிரியராக இருந்தேன். அதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் வீ.கே.புதூர் சென்று அங்கே இருந்த விநாயகம்பிள்ளை என்பவரைச் சந்தித்து, ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்… ஊத்துமலை ஜமீன் குறித்தும், ஜமீனில் ஆஸ்தானகவியாக இருந்த அண்ணாமலை ரெட்டியாரைக் குறித்தும், அவரின் சிலேடைப் பாக்கள் குறித்தும்! அப்போது, வீ.கே.புதூரில் கோயில் கொண்ட நவநீதகிருஷ்ண ஸ்வாமியைக் குறித்தும் எழுதியிருந்தேன்.

இந்த விவரத்தைச் சொன்னதும் மகிழ்ந்தவர், வேறு ஒருவர் எழுதியிருந்த ‘நவநீதகிருட்டிணன் கலம்பகம்’ என்ற நூலை யாரிடமிருந்தோ கேட்டு வரவழைத்து எனக்கு அளித்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஒருமுறை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திருவாளர் கிருட்டிணமூர்த்தி இயக்குனராக இருந்தபோது, நானும், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூராரும் தரமணியில் உள்ள அந்நிறுவனத்துக்குச் சென்றிருந்தோம். அன்று கிருட்டிணமூர்த்தியுடன் ச.வே.சு.,வும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது பழைய தென்காசி திருவள்ளுவர் கழக நினைவுகள், சொந்த ஊர் குறித்த பேச்சு என்று ஏதோ சில நிமிடங்கள் அவருடன் கரைந்தது. அவருக்கு ஆன்மிகம், வழிபாடு இவை குறித்தெல்லாம் அதிகம் ஈடுபாடு இருந்ததில்லை. தமிழ் தமிழ் தமிழ்! இதுவே அவரை தெய்வத் தமிழ் பால் ஈர்த்திருந்தது! அதோடு சரி!

அண்மையில் ஏதோ விபத்தில் பாதிக்கப்பட்டு, மீள இயலாமல் ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தவாறு இன்று உயிரிழந்தார் என கூறினார்கள். வருத்தம்தான்! தமிழாய்வாளர், தமிழார்வலர், தமிழ்த்தொண்டர் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்… கிட்டத்தட்ட 200 நூல்கள் அவர் பெயரை வெகுநாட்கள் வாழவைத்துக் கொண்டிருக்கும்! என் மண்ணின் மைந்தர் நெல்லைச் சீமைக்காரரான அவருக்கு அந்த நவநீதகிருஷ்ணன் நற்கதி அருள்வாராக!

***

ச.வே.சுப்பிரமணியன்: வாழ்க்கைக் குறிப்பு!

l நெல்லை மாவட்டம் வீரகேரளம் புதூரில் பிறந்தவர் (1929). விக்ரம சிங்கபுரம் புனித இருதய மேல்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டமும் கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

l தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 1953 முதல் மூன்றாண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக வழிநடத்தினார்.

l சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி அரிய ஆய்வு நூல்களை வெளியிட்டார். சிலப்பதி காரத்தில் விசேஷ ஈடுபாடு கொண்ட இவர், சிலப்பதிகாரத்தை இசையுடன் பாடியே பாடம் நடத்துவார்.

l இவரது மாணவர்களில் பலர் இன்று புகழ்பெற்ற தமிழறிஞர்களாக உள்ளனர். படைப்பாற்றல் மிக்க இவர், தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் எழுதும் திறன் பெற்றவர்.

l இலக்கிய நினைவுகள், மாந்தர் சிறப்பு, ஒன்று நன்று, கம்பன் கற்பனை, இளங்கோவின் இலக்கிய உத்திகள், தமிழ் இலக்கிய வரலாறு, சிலப்பதிகாரம் மூலம், சிலம்பும் சிந்தாமணியும், பாரதியார் வாழ்க்கைக் கொள்கைகள், தமிழ் நிகண்டுகள் உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

l நாட்டுப்புறக் கலை, தத்துவம், தாவரவியல், மண் அமைப்பு ஆகியவை குறித்தும் எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட தமிழின் தொன்மையான பல படைப்புகளை ஆங்கிலத்தில் பல தொகுதிகளாக மொழிபெயர்த்து வெளியிட்டார். சாகித்திய அகாடமி கமிட்டியின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். பேச்சாற்றல் மிக்கவர்.

l 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். வானொலியில் 100-க்கும் மேற்பட்ட உரைகளை நிகழ்த்தியுள்ளார். இலங்கை, மொரீசியஸ், ஜெர்மனி, போலந்து, செக்கோஸ்லவேகியா, ஜப்பான், பாரீஸ், லண்டன், கெய்ரோ உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பயணம் சென்று கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ளார்.

l 1969-ல் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் திருவள்ளுவர் கல்லூரியை தொடங்கினார். இவரது மேற்பார்வையில் 44 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். 1985-ல் நெல்லை மாவட்டத் தில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் ‘தமிழூர்’ என்ற ஊரை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருகிறார். இவரது வீட்டின் பெயரே ‘தமிழகம்’.

l ராஜா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளை வென்றுள்ளார். இந்திய சாகித்திய அகாடமியின் ‘பாஷா சம்மான்’ விருது பெற்ற முதல் தமிழறிஞர் என்ற பெருமைக்குரியவர், ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி விருது, நல் அறிஞர் விருது, அவ்வைத் தமிழ் அருளாளர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

l ‘Tholkappiyam is the first Universal grammar in the Universe’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூலை 2015 ஜுன் மாதம் வெளியிட்டுள்ளார். ‘தமிழ் ஞாயிறு’, ‘சாதனைச் செம்மல் ச.வே.சு.’ ஆகிய தலைப்புகளில் இவருடைய வாழ்க்கை வரலாறு நூல்கள் வெளிவந்துள்ளன.