
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பஸ் நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள வீரன் வாஞ்சிநாதன் சிலைக்கு அவரது 113வது நினைவு தினத்தை முன்னிட்டு, தேசிய சிந்தனைப் பேரவை (தென்காசி) சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது
செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் 113-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பஸ் நிலையம் அருகே உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது சிலைக்கு வாஞ்சிநாதனின் தம்பி மகன் ஹரிஹரசுப்பிரமணியன், அவரது மகன் வாஞ்சி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் தியாகிகள் வாரிசுகள் ஓட்டபிடாரம் மாடசாமி வாரிசு உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, நகராட்சி மேலாளர் கண்ணன் மற்றும் நகராட்சி சுகாதார மேற்பார்வை யாளர்கள், பணியாளர்கள், கோதையம்மாள் தியாகி வாரிசு கைலாசநாதன், சாவடி சொக்கலிங்கம்பிள்ளை வாரிசு செண்பக குற்றாலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் நகர்மன்ற தலைவர் ராமலெட்சுமி, தலைமை நிலைய பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.ரஹீம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் அவர் என் கணேசன், மாவட்ட பிரிவு நிர்வாகிகள் ஞானராஜ், ஜாகீர் உசேன், கவுன்சிலர்கள் முத்துபாண்டி, ஜெகன் உள்பட பலர் கலந்த கொண்ட னர்.
பா.ஜனதா சார்பில் நகர தலைவர் வேம்புராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் ராமர் தலைமையில் மரியாதை செலுத்தப் பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் நகர தலைவர் ஜோதிலிங்கம், ஆதிமூலம், ராஜீவ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் மகளிரணியினர் உள்பட பலர் ஊர்வலமாக வந்து, வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதேபோல் தேசிய சிந்தனை பேரவை, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து சிரத்தாஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, நாள் முழுதும் வாஞ்சி சிலைக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சார்பில் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆளுநரின் அஞ்சலி
தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி வாஞ்சிநாதனின் தியாகம் குறித்து தமது சமூகத் தளப் பதிவில் குறிப்பிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். அவரது பதிவில், மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் திரு வாஞ்சிநாதனை அவர் உயிர் நீத்த நாளில் தேசம் ஆழ்ந்த நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகூர்கிறது. சொந்த ஊர் மக்களுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் சொல்லொணா அட்டூழியங்களை தன்னால் தாங்க முடியாதபோது, வாஞ்சிநாதன் காலனித்துவ சக்திக்கு சவால் விடுத்து, திருநெல்வேலியின் அடக்குமுறை மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷை படுகொலை செய்தார். எதிரி படைகளால் சூழப்பட்டபோது, ஆங்கிலேயர்கள் தன்னை பிடித்து காவலில் எடுத்து விடாதபடி தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது தனியாத துணிச்சல், தேச சுதந்திரம் மீதான காதல் மற்றும் நாட்டுக்கான அவரது உச்சபட்ச தியாகம் ஆகியவை ஏராளமான இளைஞர்களை சுதந்திரத்துக்கான போராட்டத்தில் சேரத் தூண்டி, இறுதியில் நமது சுதந்திரத்துக்கும் வழிவகுத்தது – என்று குறிப்பிட்டிருந்தார்.





