spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைசெங்கோட்டை ஜனார்த்தனன் சாருடனான என் நினைவலைகள்...

செங்கோட்டை ஜனார்த்தனன் சாருடனான என் நினைவலைகள்…

janarthanan

கிட்டத்தட்ட 50 ஆண்டுகள்… ஆகிவிட்டது…. இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டு!
5 வருடங்களுக்கு முன்னர் குற்றாலம் – ஐந்தருவி அருகே உள்ள சங்கராஸ்ரமத்திற்குச் சென்ற போது நான் இந்தப் புகைப்படம் சுவரில் மாட்டப்பட்டிருப்பதைக் கண்டு கேமராவில் க்ளிக்கிக் கொண்டேன். இந்தப் படத்தின் வரலாற்றுப் பெருமை என்னவென்று எனக்குத் தெரியாது. எல்லோருக்கும் நடுவே சுவாமி சங்கரானந்தர் அமர்ந்திருக்கிறார். அவ்வளவுதான் தெரியும்.
பெரும்பாலும் இது போன்ற பழைய படங்கள் எங்காவது கண்ணில் பட்டால் அதை உடனே சுட்டு வைத்துக் கொள்வது என் கைப்பழக்கம். அப்படித்தான் கேமராவை எடுத்துக் கொண்டுவந்து இந்த ஆஸ்ரமத்துடனும், சுவாமி சங்கரானந்தருடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த செங்கோட்டை வி.ஜனார்த்தனன் ஐயாவிடம் காண்பித்தேன்.
அப்போதுதான் கவனித்தேன்… இந்தப் படத்தில் ஜனார்த்தனன் சாரும் வலது ஓரமாக கையை பின்னால் கட்டியபடி நின்றிருக்கிறார் என்பதை!
1965 பிப்.16ம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படம், செங்கோட்டை காந்தி மன்றத்தில் அப்போதைய செங்கோட்டை நீதிமன்ற உதவி நீதிபதி ஏ.சோமசுந்தரம் என்பவருக்கு வழங்கப்பட்ட பிரிவுபசார நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் உள்ள மற்றவர்கள் குறித்து பெரிதாக எனக்கு எதுவும் தெரியாது. அப்போது ஜனார்த்தனன் சார் சிலர் குறித்து தகவல் சொன்னார். ஆனால் இப்போது அது என் நினைவில் இல்லை. 
இந்தப் படத்தில், வழக்குரைஞர்கள் எஸ்.சங்கர நாராயணன், இசக்கி தாஸ், எம்.கோபாலகிருஷ்ண முதலியார், ஏ.ஆர்.கரையாளர்- தலைவர் (அனேகமாக காந்தி மன்றமாக இருக்கலாம்…), சுவாமி சங்கரானந்தர், ஏ.சோமசுந்தரம், டாக்டர் சன்ஸார் சந்த் பட், எம்.எஸ்.முத்துசாமி கரையாளர், கே.ஏ.கணபதி முதலியார், என்.சுப்ரமணிய ஆசாரி.. ஆகியோர் அமர்ந்திருக்க,
ஷேக், கேகே.ராமசாமி ராஜா, ஏ.சுப்பையா, கேஎஸ்பி ஆறுமுகம், டாக்டர் ராமசுப்பு, என்.ஏ.முத்தையா, எஸ்.மாடமுத்து, வி.ஜனார்த்தனன் (தலைமை ஆசிரியர்) ஆகியோர் நின்றிருக்கிறார்கள்.
இந்தப் புகைப்படத்தின் பின்னணியை அறிய ஆவல் இருந்தாலும், பின்னணியாக உள்ள இயற்கைக் காட்சி மிக அழகு. இதில் இருக்கும் இன்னும் சில நபர்களைப் பற்றி அறிய ஆவல்தான். ஜனார்த்தனன் சார் இருந்தால், இப்போது அவரிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்தான்.. ஆனால்… அவரைப் போல் இன்னொரு நபரை நான் தேட வேண்டுமே!
எத்தனை இரவுகள்… நிசப்தமாய்  இருக்கும் தெரு. பின்னே ஆற்றங்கரை ஓரம் என்பதால், வண்டுகளின் ரீங்காரம், பூச்சிகளின் சலசல சத்தம் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருக்கும். அந்த அர்த்தராத்திரியிலும், 12 மணி தாண்டியும் நீளும் பேச்சுக் குரல். அவர் வயதோ அப்போது 70க்கு மேல்.. நானோ 20ல் நின்ற இளைஞன். என் அம்மா அவ்வப்போது வந்து காது கொடுத்துச் செல்வார்… அப்படி என்னதாண்டா பேசிக்கறேள்..! என்று முணுமுணுத்தபடி…..
எல்லாம் ஞானப் பொக்கிஷங்கள். மலையாள இலக்கியத்தை எனக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார். மோகினிக் கதைகள் சொல்வார். பிவி.தம்பியின் நாவல்களை அடுக்குவார். எழுத்தச்சனை பிரித்து மேய்வார். மலையாள இலக்கியம் எப்போது தோன்றியது… அதன் அடிப்படை, அது வளர்ந்த விதம் எல்லாம் அவர் வாய்மொழியால் என் நெஞ்சில் உரமாய்ப் பாய்ந்தது. அந்தப் பேச்சில் குமாரனாசான் அவ்வப்போது தலைக்காட்டுவார். மாத்ருபூமி இதழ்களில் படித்த படைப்புகளை கோடிட்டுக் காட்டுவார். இதில் என்ன சுவாரஸ்யம் தெரியுமா என்று கேட்டு எனக்குள் ஒரு சுவாரஸ்யத்தைத் தூண்டுவார்.
கம்பன் கழகங்களில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், ராமாயண பாத்திரங்களின் படைப்புகள், அவற்றில் அவர் கண்ட ரஸம்.. எல்லாம் அலுக்காமல் கேட்டுக் கொண்டிருப்பேன். நான் ஆரம்பப் பள்ளி முடித்த காலத்தில் அவர் அனேகமாக பணி ஓய்வு பெற்றிருக்கக் கூடும். எனவே அவர் எனக்கு ஆசிரியராக இருந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. அவர் வகுப்புகளை நான் கேட்டதில்லை. அப்படியே கேட்டிருந்தாலும் ஒன்றும் மண்டையில் ஏறியிருக்கப் போவதில்லை. ஆனால், கல்லூரி படிப்பு முடித்து வெளிவந்த புதிதில் எனக்குக் கிடைத்த இந்த அனுபவப் பாடங்கள் நன்றாகவே மனதில் ஏறியிருந்தன.
மலையாள அட்சரங்களுக்கும் கிரந்த லிபிக்கும் இடையே உள்ள சின்னச் சின்ன வேறுபாடு… எப்படி இவை புழக்கத்துக்குள் வந்திருக்கும்.. என்றெல்லாம் என் கேள்விக் கணைகள் பாயும். பெரிய அளவில் எனக்கு பத்திரிகை அறிவோ, அதைப் பற்றிய புரிதலோ ஏதும் அப்போது இல்லைதான். அத்தகைய நிலையில் இதழியல் கலாசாரத்தை சுவை குன்றாமல் எனக்குள் திணித்தார் ஜனார்த்தனன் சார். அப்போது நான் மருந்து விற்பனைப் பிரதிநிதியாக மார்க்கெடிங் பணியில் இருந்தேன். ஊர் சுற்றி இரவு வீடு வந்து சேர்ந்ததும் சாப்பிட்டவுடன் அடுத்த வேலை… சாருடன் வீட்டுத் திண்ணையில் அமர்வதுதான்.
அமர்ந்து பேசுவதற்காகவே அக்ரஹாரத்து வீடுகளின் திண்ணைகள் விசாலமாகவே இருக்கும். எங்கள் தெரு வழியே வயக்காட்டு வேலைக்குப் போவோராயினும், காய்கறிக் கூடைகளை தலையில் சுமந்து சந்தைக்குச் செல்வோராயினும்… யாராயினும் சரி… தலைச் சுமை இறக்கி வைத்து சற்றே இளைப்பாறிச் செல்ல பரந்த மனதுடன் திறந்து வைத்த திண்ணைக் கலாசாரம்… ஆச்சி… குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டுட்டு வாங்க… தாகமா இருக்கு… – குரல் கேட்ட அடுத்த நொடி என் அம்மை நீர்ச் செம்போடு வாசலில் நிற்பார். அங்கே கதைகள் பரிமாறப்படும். இரு வேறு கலாசாரங்களின் பின்னணியில் இருப்போரிடையே சிநேகம் துளிர்விட்டு மரமாய்க் கிளைத்தெழுந்திருக்கும்!
அப்படித்தான் எங்களுக்குள்ளும் சிநேகம் கிளைத்தது. மலையாள இலக்கியத்தில் கம்யூனிஸ சித்தாந்தங்களின் தாக்கம் இழையோடும். அவற்றின் பின்னணியும் உள்ளர்த்தமும் அவரிடம் இருந்து நான் உள்வாங்கிக் கொண்டேன். சிறு வயதில் வெறும் பக்தி இலக்கியங்களை மட்டுமே படித்து வந்த எனக்கு இவையெல்லாம் புதிய அனுபவமாகவே இருந்தன.
காசு கொடுத்து வகுப்புக்குப் போய் முறையாகப் படித்துக் கற்றுக் கொண்டதை விட, இப்படி அனுபவப் பெரியவர்களின் வாய்மொழியே கற்றது நிறைய!
வாஞ்சிநாதன் கதை, பாரதமாதா சங்கம், தென்காசி-செங்கோட்டை-புனலூரில் நிகழ்ந்த புரட்சிச் சிந்தனை, நெல்லையில் வாஞ்சியின் பணி, வாஞ்சி உயிர்த்தியாகம் செய்த பின்னே பாரத மாதா சங்கத்துக்கு நேர்ந்த கதி, ஆங்கிலேயரின் தேடுதல் வேட்டை, செங்கோட்டையில் ஹரிஹர ஐயர் என்ற பெயருடைய பல இருக்க, சங்கத்தின் ஒரே ஒரு குறிப்பை வைத்துக் கொண்டு ஹரிஹரன் என்ற பெயர் உள்ள எல்லோரையும் ஆங்கிலேயர் சல்லடை போட்டுத் தேடியது,  பயத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது… இப்படியாக ஒரு நாள் கதை போனதென்றால், கணித மேதை எஸ்.எஸ். பிள்ளை எனப்பட்ட செங்கோட்டை சிவசங்கர நாராயணப் பிள்ளை ஒருநாள் தலைக்காட்டுவார். எஸ்.ஜி.கிட்டப்பா என்ற செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா வாழ்ந்த வீட்டின் நேர் எதிர் வீடுதான் என்பதால், அந்த வீட்டின் திண்ணையைப் பார்த்தபடியே ஜனார்த்தனன் சாரிடம் என் கற்பனைகளை விரிய விடுவேன். சார்… இங்கே எத்தனை இரவுகள் கிட்டப்பா தன் நண்பர்கள் சூழ பாட்டுப் பாடியிருப்பார்… என்று!
அப்போது கிட்டப்பா பற்றிய பேச்சுகள் காத்துவாக்கில் ஓடும். சரக்கு என்ற அந்தச் சாராயத்தின் வீரியத்தால் ஒரு மாபெரும் கலைஞன் முப்பதைத் தாண்டுவதற்குள் கருகிய செடியாய் உதிர்ந்து போன கதையைக் கேட்கும்பொதெல்லாம்… கூடா நட்பின் கேடு என் மனத்தில் ஓங்கி உரைக்கும்.
அதே தெருவில், எங்கள் வீட்டு வரிசையில் கடையில் இருக்கும் மண்டபத்தை ஒட்டிய வீட்டில்தான் செங்கோட்டை ஆவுடையக்காள் என்ற அந்த பிரும்ம ஞானி இருந்தாள் என்ற கதையைச் சொன்னபோது, பாரதியின் முன்னோடியாமே இவர் என்று ஆச்சரியம் தென்படும். கிளிப்பாட்டும் குயில்பாடும் அங்கே ஒன்று கலக்கும். ஆவுடையக்காளின் அத்வைதப் பாடல்கள் குறித்த செய்திகள் அப்போதுதான் எனக்கு அறிமுகமாயின. ஏதோ சில பாடல்களை சிறுவயதில் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு மாமிகள் சிலர் பாடியதைக் கேட்டிருந்தேன் என்றாலும், அவற்றை ஏற்கத் தயாராயிருந்த அறிவுநிலை எட்டிய இந்த வயதில் அவை எனக்கு பிரமாண்டமாகவே பட்டன. அவற்றை ஜனார்த்தனன் சார் சொல்லும் அழகே தனி. பின்னாளில் ஞானானந்த தபோவனத்தில் இருந்து நித்யானந்தகிரி சுவாமிகளின் மேற்பார்வையில் செங்கோட்டை ஆவுடையக்காள் புத்தகம் தொகுக்கப்பட்டது.
அவருடைய நண்பர் வட்டம் பெரிது. அவ்வை நடராஜன் பற்றிச் சொல்வார். கம்பன் கழகம், திருக்கோவிலூர் கபிலர் விழா பற்றிச் சொல்வார். அவர் கலந்து கொண்ட அனுபவங்களைச் சொல்வார்.
தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் வருடந்தவறாமல் அவர் சொற்பொழிவு இருக்கும். திருக்குறள் விளக்க நூல்களை எழுதியுள்ளார் ஜனார்த்தனன். அவருடைய நண்பர்களான தீப.நடராஜன் (ரசிகமணி டி.கே.சியின் பேரன்), தி.க.சி., கி.ரா., என ஒரு வட்டம் ஓடும்.
பின்னாளில் பத்திரிகையுலகுக்குள் நுழைந்து, மிகச் சிறு வயதில் (27) நான் மஞ்சரி டைஜஸ்ட் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்ற போது, எனக்கு வழிகாட்டியாய் அமைந்தது, அந்தச் சிறுவயதில் நான் அனுபவ பூர்வமாய் ஜனார்த்தனன் சாரிடம் கேட்ட இலக்கிய சுவாசமே! எத்தனை மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் அவரிடம் இருந்து வற்புறுத்திக் கேட்டுப் பெற்று வெளியிட்டிருப்பேன். நான் ரசித்த அந்த இலக்கிய சுவாசத்தை வாசகர் அறியட்டுமே என்ற உந்துதல். அவருக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்ட போதும், அவ்வப்போது ஊருக்குச் சென்று அவர் வீட்டில் சற்று நேரமேனும் அமர்ந்து பேசி, எதையாவது விஷயத்தை எழுதி வாங்கிக் கறந்துவந்து விடுவேன்…
2006ம் வருட மஞ்சரி தீபாவளி மலரில் எழுத்தாளர்களின் புகைப்படத்துடன் கட்டுரைகளை வெளியிட்டிருந்தேன். அதற்காக ஒரு கட்டுரை கேட்டுப் பெற்றேன் ஜனார்த்தனன் சாரிடம். அதற்காக சார் உங்களை ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டேன்… இல்லை வேண்டாம். என் முகம் சரியாயில்லை.. கண் சற்று பிரச்னை. நான் வேறு படம் தருகிறேன் என்றார். அப்படியே தள்ளிப் போனது… அவரைப் படம் எடுத்து சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற என் ஆசை… பின்னர் அந்த நேரம் அமையவேயில்லை!  
பின்னாளில் ஒரு முறை அவரை அழைத்து வந்து சென்னையில் ரசிகமணி டி.கே.சி. குறித்த ஒரு நிகழ்ச்சியை நடத்தினேன். அதற்காக 10 வருடங்களுக்கு முன்னர் அவரை பத்திரமாக அழைத்து வந்து, என் வீட்டில் தங்க வைத்து, பணிவிடை செய்த பேறு எனக்குக் கிட்டியது. 
நிமிர வைத்த நெல்லை என நெல்லைக்காரர்கள் குறித்த தொகுப்பு நூல்களைக் கொண்டுவந்த வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் நானும் எப்போது சந்தித்தாலும், பேசிக் கொண்டாலும், உடனே அவர் விசாரிப்பது… என்ன சிர்ராம் சார்… ஜனார்த்தனன் சார் எப்படி இருக்கிறார். ஊருக்குப் போனீங்களா.. பாத்தீங்களா? என்பதுதான்.
செங்கோட்டை ஆற்றங்கரைத் தெரு அக்ரஹாரத் தெருவில் சிறு வயதில் நான் ஓடி விளையாடிய அந்த வீட்டைத்தான் பின்னாளில் ஜனார்த்தனன் சார் விலைக்கு வாங்கி எடுத்துக் கட்டி நவீனப் படுத்தியிருந்தார்.
அதனால் எனக்கு விவரம் தெரிந்த வயதில் அந்த வீட்டுக்குள் செல்லும் போதெல்லாம், செங்கல் தளம் பாவிய தரையில் 3ம் வகுப்பு படித்த நாளில் ஆத்திச்சூடியும், திருக்குறளும் கொன்றை வேந்தனுமாக நானும் என் தங்கையும்  போட்டி போட்டு இடத்தைப் பிரித்துக் கோடு போட்டு, வரப்பு தாண்டாமல் சுண்ணக் கட்டியால் எழுதி எழுதிக் குவித்து நீர் விட்டு அழித்த நாட்களை மனதில் அசைபோட்டுக் கொள்வேன்.
இப்போது அந்த வீட்டில் ஜனார்த்தனன் சாரும் இல்லை. இனி அவர் அங்கே இருக்கப் போவதுமில்லை… அழியாத கோலங்களாய் சாக்பீஸால் வரப்பு கட்டி ஆத்திசூடி எழுதிப் பழகிய அந்தச் செங்கல் தரைத் தளமும் இப்போது இல்லை…  சண்டை போட்டு வரப்பு பிரித்த என் தங்கையும் என்னுடன் இல்லை. அவர்கள் அமரர் உலகில்… நினைவுகள் மட்டும் என் உள்ளத்தில்!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe