பள்ளி மாணவர்கள் தொடர்பாக சந்துரு அறிக்கை: அவர் இந்த உலகில் இருக்கிறாரா?
— ஆர். வி. ஆர்
ஓய்வு பெற்ற ஹைகோர்ட் நீதிபதி சந்துரு, பள்ளி மாணவர்களிடையே ஜாதிய நல்லிணக்கம் நிலவ தமிழக அரசுக்குச் சில பரிந்துரைகள் செய்திருக்கிறார். அவைகள் சிலவற்றில் அவர் சிந்தனை தவறு.
சந்துருவின் தவறான சில பரிந்துரைகள் இவை:
மாணவர்கள் தங்கள் கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றியில் திலகம் அணியத் தடை விதிக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளுக்கு ஜாதிப் பெயர்கள் இருந்தால், அவற்றில் ஜாதியைக் குறிக்கும் சொற்களை நீக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பள்ளிகள் பெயரில் ஜாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது. அதற்கான உறுதிமொழி பெற்ற பின்னரே புதிய பள்ளி துவங்க அனுமதி அளிக்க வேண்டும்.
சந்துரு பரிந்துரைகளின் பின்னணி இது: சென்ற ஆண்டு, நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஒரு வன்முறை சம்பவம் நிகழ்ந்தது. 17 வயதுள்ள அரசுப் பள்ளி மாணவன் ஒருவனை, வேறு ஜாதியைச் சார்ந்த சக மாணவர்கள் சிலர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டினர். பலத்த காயங்களுடன் அந்த மாணவன் உயிர் பிழைத்தான்.
இந்த சம்பவத்தை அடுத்து, பள்ளிகளில் ஜாதி மோதல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு-நபர் குழு ஒன்றைத் தமிழக அரசு அமைத்தது. அவர் தனது ஆய்வின் முடிவில் அரசுக்கு அளித்திருக்கும் பரிந்துரைகளில் சில, மேலே காண்பவவை. அவரது சில பரிந்துரைகள், ஜாதி என்பதைத் தாண்டி ஹிந்து மத சுதந்திரத்தில் அனாவசியமாகத் தலையிடுகின்றன.
சந்துருவின் அணுகுமுறையில் உள்ள பொதுவான தவறை இந்தக் கேள்விகளும் அவற்றுக்கான சரியான பதில்களும் தெளிவாக்கும்.
மக்களிடையே ஜாதி ஒற்றுமையும் நல்லிணக்கமும் சட்டத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டுமா, அல்லது சாதாரண மக்களின் மனதிலிருந்து தொடங்க வேண்டுமா? இரண்டில் எது நிச்சயம் பயன் தரும்?
வீட்டிலும் வெளியிலும் உள்ள சமூகப் பெரியவர்கள் தமது பேச்சாலும் செயலாலும், அறிந்தோ அறியாமலோ, ஜாதி வேற்றுமைகளை வலியுறுத்தவும் ஜாதி உரசல்களை மேற்கொள்ளவும் தமது இளைஞர்களுக்கு வழி காட்டுகிறார்களா? ஆம் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் என்ன? தீர்வுக்கு வழி உண்டா?
எல்லா ஜாதிகளும் அந்தந்த ஜாதி மக்களிடையே ஒரு இயற்கையான நட்பை, பிணைப்பை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் ஜாதிகள் நல்லது செய்கின்றன.
தலைமுறை தலைமுறையாக ஒரு வம்சத்தினர் இன்ன ஜாதி என்று சொல்லி வளர்க்கப் படும்போது, அந்த மனிதர்களுக்குத் தங்கள் ஜாதியின் மீதான பிடிப்பு இயற்கையாக, ஒரு உள்ளுணர்வாகத் தங்குகிறது. அவர்கள் வேறு மாநிலத்துக்குப் போய் வசித்தாலும், வேறு நாட்டுக்கே குடி பெயர்ந்து வாழ்ந்தாலும், அவர்களின் ஜாதிச் சார்பும் உணர்வும் தொடர்கின்றன – சற்று வலுக் குறைந்தாலும்.
ஜாதி என்பது அந்தந்த மக்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவது போல், வேறு வேறு ஜாதி மக்களிடையே சிறிது வேற்றுமை உணர்வை ஏற்படுத்தத்தான் செய்யும். இதுவும் இயற்கை. ஆனால் அந்த வேற்றுமை உணர்வை ஒரு பகை உணர்வாகப் பார்க்காமல், அந்த வேற்றுமையை நமது வாழ்க்கையின் அம்சமாகப் புரிந்துகொண்டு, மற்ற ஜாதி மக்களையும் சினேக பாவத்துடன் நம்மால் ஏற்க முடியும். அது எப்போது சாத்தியம்? மனிதப் பண்புள்ள கண்ணோட்டம் நம்மிடையே இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
நம் ஒவ்வொருவரிலும் ஒரு பகுதி, நாம் ஒரு தேசத்தவர் என்கிற உணர்வு. நம்மில் இன்னொரு பகுதி, நாம் ஒரு மதத்தவர் என்கிற உணர்வு. இன்னொரு பகுதியில், நாம் ஒரு மொழியினர் என்கிற உணர்வு. இன்னொரு முக்கிய பகுதியில், நாம் ஒரு ஜாதியினர் என்கிற பெருமை. இந்த அடையாளங்கள் நமக்குப் பிறப்பிலேயே கற்றுக் கொடுக்கப் படுகின்றன.
இந்த அடையாளங்கள் மட்டும் நம்மை வழி நடத்தினால், நம்மைக் கட்டுப் படுத்தினால், நாம் எல்லா இடங்களிலும் எல்லா மனிதர்களிடமும் நியாயமாக நடந்துகொள்ள முடியாது. அப்போது பகையும் உரசல்களும் வரும். இது நாங்குநேரியில் நடந்தது. இதைத் தவிர்க்க, நம் மனதுக்குள் இன்னொரு அடையாளம் ஏற்படுவதும் நமக்கு முக்கியம்.
அந்த இன்னொரு அடையாளம், “நான் கட்டுகளுக்குள் சிக்காத மனிதன்” என்ற உணர்வு. அந்த உணர்வால், “நான் ஒரு தேசத்தவன், ஒரு மதத்தவன், ஒரு ஜாதிக்காரன், இன்ன தாய்மொழியைக் கொண்டவன், என்ற எனது அடையாளங்களை ஒரு லகானில் பிடித்து வைத்திருக்க முடியும். அதன் விளைவாக, மாறான அடையாளங்கள் கொண்ட மற்ற மக்களிடமும் வெறுப்பில்லாமல் சினேகமாக நான் பழக முடியும். இந்தப் பண்பான உணர்வு இரண்டு புறத்திலும் அவசியம்தான். ஆனால் “நான் மனிதன்” என்ற நல்ல உணர்விலிருந்து நானே முதலில் விலகி இருக்க வேண்டாமே?
“நான் மனிதன்” என்ற நல்ல உணர்வுக்குப் பெரிதும் வித்திடுவது நல்ல கல்வி. சிறுவர்களுக்கு நல்ல கல்வியைப் புகட்ட நல்ல பாடத் திட்டங்கள், தரமான கல்விக் கூடங்கள், சிறப்பான ஆசிரியர்கள் எல்லாம் அவசியம். அப்படியான நல்ல கல்வி, நமக்கு வாழ்க்கையின் மீது ஆச்சரியத்தையும் நமக்குள்ளே பணிவையும் ஏற்படுத்தி, “நான் மனிதன்” என்ற பிரதான உணர்வையும் நமக்குத் தரும்.
தமிழக மக்கள் அனைவருக்கும் நல்ல கல்வியை அளிக்க முனைபவர்களா மாநிலத்தின் திராவிடக் கட்சிகள்? இல்லை. இதற்கும் காரணம் உண்டு.
நல்ல கல்வி, மக்களின் அறிவுக் கண்களையும் திறக்க உதவும். தமிழகத்தில் சாதாரண மக்களின் அறிவுக் கண்கள் திறந்திருந்தால், எப்படி அந்த மக்களின் முதுகில் அரசியல்வாதிகள் சவாரி செய்வது, எப்படி அரசியல்வாதிகள் அனைத்து மக்களின் ஓட்டுக்களை அரசாங்க இலவசங்கள் வழியாக வாங்குவது, எப்படிக் கொழிப்பது?
ஜாதி உணர்வுகள் மக்களுக்கு மேலோங்கி இருந்தால், அந்தந்த ஜாதி மக்களின் சில பிரமுகர்களைத் தம்மோடு சேர்த்துக் கொண்டு, அந்தப் பிரமுகர்களுக்குப் பதவிகளும் சில வாய்ப்புகளும் கொடுத்து, அவர்கள் மூலமாக அவர்கள் சார்ந்த ஜாதி மக்களின் ஓட்டுக்களை எளிதில் தொடர்ந்து அறுவடை செய்வது, ஒரு அரசியல் கட்சிக்கு சுலபம். என்ன — ஜாதி மோதல்கள் மிகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அவை ஏற்பட்டால், ஏதாவது கமிட்டி போட்டு விஷயத்தை ஆறப் போட வேண்டும். பிறகு அடுத்த அறுவடையைக் கவனிக்கலாம்.
தனக்கு ஏதோ தோன்றியதைச் சந்துரு சில பரிந்துரைகளாகச் சொல்லி வைத்திருக்கிறார். தாங்கள் திட்டமிடுவதை ஆளும் அரசியல்வாதிகள் செய்து கொள்கிறார்கள். இதைத் தவிர்த்து, சாதாரண மக்கள் நிஜமாகவே நலமும் வளமும் பெற நீங்களும் நானும் பிரார்த்திக்கலாம். வேறென்ன சொல்லுங்கள்?
Author: R Veera Raghavan, Advocate, Chennai
([email protected])
https://rvr-india.blogspot.com