
காரமடை அருகே குழந்தைங்கள நல்லா படிக்க வைங்க என கடிதம் எழுதி வைத்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காரமடை கண்ணார்பாளையம் சாலையில் உள்ள நேருநகரைச் சேர்ந்தவர் வினோத் குமார். ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவருக்கு ஷர்மிளா என்ற மனைவியும், 6 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவும் இருவருக்கிடையேயும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவசர அழைப்பு காரணமாக நேற்று காலை பணிக்கு வினோத் சென்று வீடு திரும்பியபோது, ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதன்பின் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த காரமடை காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் சடலத்தைப் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் வீட்டை சோதனையிட்டதில், தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. அந்தக் கடிதத்தில், “நான் போகிறேன் பிள்ளைங்கள நல்லா பாத்துக்கோங்க, நல்லா படிக்க வைங்க, திட்டாதீங்க. இதுதான் என்னோட கடைசி ஆசை வீட்டில் இருக்கிற எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தைக் கைப்பற்றிய காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.