வழக்குரைஞர், திரு ஜெகன்னாதன் அவர்கள் எழுதியுள்ள “First Native voice of Madras – Gazulu Lakshminarasu Chetty” என்ற நூலின் வெளியீட்டு விழா
இன்று 17.06.2024 மாலை சரியாக ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சி என்றால் என்ன என யோசிக்கிறீர்களா? நமது நண்பர் வழக்குரைஞர், திரு ஜெகன்னாதன் அவர்கள் எழுதியுள்ள “First Native voice of Madras – Gazulu Lakshminarasu Chetty” என்ற நூலின் வெளியீட்டு விழாவைத்தான் சொல்கிறேன்.
எனக்கும் அழைப்பு வந்திருந்தது. எனவே நானும் சென்றிருந்த்டேன். இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என ஜெகன்னாத் கேட்டிருந்தார். எனவே நான் அதனை தமிழில் மொழி பெயர்த்திருந்தேன். அதனால்தான் எனக்கும் அழைப்பு வந்திருந்தது என நினைத்தேன்.
காஜுலு பற்றிய வீடியோ
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் SMaRT நிறுவனத்திலிருந்து ஒருவர் இன்று வெளியாக உள்ள நூலுக்கும் அவர்கள் நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிப் பேசினார். அதன் பின்னர் காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி அவர்கள் பற்றிய ஆங்கில வீடியோ ஒன்று ஒலிபரப்பப்பட்டது. இதன் தமிழ் வெர்சனும் தயாரித்தால் நல்லது. நான் அதனை மொழிபெயர்த்துத்து, டப்பிங் செய்து தருகிறேன். (ஜெகன்னத் மற்றும் குமரேசன் இருவரும் கவனிக்க)
வரவேற்புரையும் ஜெகன்னாத் அவர்களின் உரையும்
சரியாக மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. CSIS-இன் (Centre for South Indian Studies – CSIS) திரு குமரேசன் அவர்கள் வந்தோரை வரவேற்றார். அவருக்குப் பின்னர் விருந்தினர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு ஜெகன்னாத் ஆங்கிலத்தில் உரையாற்றினார். பிறகு மேகலாயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் எஸ்.வைத்யநாதன் அவர்கள் பேசினார். அவரது உரையின் முதல் பகுதி நூல்கள் படிக்கவேண்டியதன் அவசியம் பற்றி இருந்தது. வழக்குரைஞர் ஜெகன்னாத் அவர்களின் நூலுக்கு நீதியரசர் ஒரு அழகான முன்னுரையையும் எழுதியிருக்கிறார்.
நான்கு நூலகள் வெளியீடு
இதன் பின்னர் நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன. மூன்று நூல்கள் சுமார் 160 பக்க அளவிலானவை. காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி அவர்களைப் பற்றிய வழக்குரைஞரி ஜெகன்னாத் எழுதிய ஆங்கில நூல், மற்ற இரண்டு நூலகள் இந்த நூலின் தெலுகு மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள். நான்காவது நூல் அளவில் பெரியது. திரு ஜெகன்னாத் அவர்கள் திரட்டிய பல்வேறு ஆவணங்கள் அடங்கியது. அதன் பின்னர் ஆளுநர் திரு ரவி அவர்கள் பேசினார்.
ஆளுநர் உரை
இந்த நூலின் பொருளடக்கம், ஆளுநருக்கு மிகவும் பிடித்தமானது. நேற்றுதான் ஆளுநர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் “ஜம்பூத்வீபப் பிரகடனம்” பற்றிய நிகழ்ச்சியை நடத்தவேண்டும் எனச் சொல்லியிருந்தார். இன்று அவரது உரை வாஞ்சிநாதனை நினைவுபடுத்துவதோடு தொடங்கியது. தமிழகப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் தமிழகத்தின் சுதந்திரப்போர் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது என்பதை மிகவும் ஆணித்தரமாகச் சொன்னார்.
கம்பனி ஆட்சியில் இந்தியாவில் கல்வியின் நிலை
திரு ஜெகன்னாத் இந்த நூலை மிகவும் சுருக்கமாக எழுதியிருப்பதாக நினைக்கிறேன் என ஆளுநர் சொன்னார். பள்ளிக்கூடத்திற்கே போகாத இராபர்ட் கால்டுவெல் எவ்வாறு டாக்டர் பட்டம் வாங்கினார் என எனக்குப் புரியவில்லை எனச்சொன்னார். ஆங்கிலேயர்களின் கல்வி முறை மெட்ராஸ் பிரசிடென்சியில் அறிமுகப் படுத்தப்படுவதற்கு முன்னர் தமிழகத்தில் ஏராளமான பள்ளிகள் இருந்தனர்; அதில் படிக்கும் மாணவர்களுக்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது; ஆசிரியர்களுக்கும் எந்த விதமான சம்பளமும் கிடையாது; ஆசிரியர்களின் வாழ்க்கைக்குத் தேவையானவாற்றை சமூகம் பார்த்துக்கொள்ளும். அதற்கென 30% நிலங்கள் நிலவரியின்றி ஒதுக்கப்பட்டிருந்தன. அதனை 5% எனக் குறைத்தது அன்றைய கம்பனி அரசு; இதனால் நமது பள்ளிகள் குறைந்து ஆங்கிலேயர்கள் தொடங்கிய கல்வி நிறுவனங்கள் வேர்விடத் தொடங்கின – என ஆளுநர் சொன்னார்.
தென் ஆற்காடு மாவட்டத்தில் மட்டும் 6000க்கும் மேல் பள்ளிகளும் 69 உயர் கல்வி நிறுவங்களும் இருந்தன. அதில் சுமார் 1000 பிராமணர்களும் 4500 சூத்திரர்களும் படித்தனர் – என்ற தகவலியயும் சொன்னார். இந்தத் தகவல்கள் எல்லாம் நமது ஆவணக் காப்பகத்தில் உள்ளன எனவும் சொன்னார்.
பிராமண எதிர்ப்பு ஏன்?
இந்திய வழி கல்வியை அழிக்கவேண்டுமானால் அதனைப் போதிக்கும் பிராமணர்களை ஒழிக்கவேண்டும் என ஆங்கிலேயர்கள் நினைத்தார்கள். அதே சிந்தனை 20ஆம் நூற்றாண்டில் திராவிட இயக்கங்ககளால் வேறு விதத்தில் சொல்லப்பட்டது – எனவும் ஆளுநர் சொன்னார்.
இவ்வாறு ஆளுநர் மீண்டும் ஒரு முறை உண்மையைச் சொல்லி, உள்ளதைச் சொல்லி ஆளும், திராவிட மாடல் எனச் சொல்லிக்கொள்ளும் அரசுக்கு இன்றைய நிகழ்ச்சியில் ஒரு சவால் விடுத்திருக்கிறார்.
இனி நூலைப் பற்றி
இந்த நூல் சுமார் இரண்டு ஆண்டுகள் ஆய்விற்குப் பின்னர் எழுதப்பட்டிருக்கிறது. தமிழக ஆவணக்காப்பகம், கன்னிமாரா நூலகம், இங்கிலாந்து தலைமை நூலகம் போன்ற பல நூலகங்களில் இருந்து ஆவணங்கள் திரட்டப்பட்டு நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு வரலாற்று நூல். 1885ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, இங்கிலாந்து பாராளுமன்றம் மூலமாக நமது உரிமைகளைப் பெற வேண்டும் என நினைத்ததாகக் கூறுவார்கள். அதற்காக அவர்கள் பல மனுக்களை அனுப்பியதாகக் கூறுவார்கள். அனேகமாக அவர்களுக்கு இவ்வாறு செய்து உரிமைகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி வர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து ஏற்பட்டிருக்கவேண்டும். உங்களுக்கு நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள். விலை ரூ 200/-.