spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்தைப்பூச விழாவில் உவரி சுயம்புலிங்க சுவாமி தேர்!

தைப்பூச விழாவில் உவரி சுயம்புலிங்க சுவாமி தேர்!

- Advertisement -

நெல்லை மாவட்டம், உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் தைப் பூசத்தை முன்னிட்டு இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

உவரி சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலில் சிறப்பம்சம், சந்தனத்தால் நோய் தீர்க்கும் தன்மைதான்! கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள புண்ணியத் தலம், உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்.

இந்த கோயிலின் தலவரலாற்றுப் படி, உவரி, மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்தது. கடம்பக் கொடிகள் அதிகமாக வளர்ந்து இருந்ததால் ‘கடம்பவனம்’ எனப்பட்டது. இந்தப்பகுதியில் வாழ்ந்த ஆயர்குல பெண் ஒருவர் பால் வியாபாரத்திற்காக சென்ற போது, கடம்பக்கொடி காலில் பட்டு பால் சிந்தியது. இவ்வாறு பலநாட்கள் ஒரே இடத்தில் பால் சிந்தியது. இதை அறிந்த அந்தப் பெண்ணின் கணவர் ஆவேசப்பட்டு கடம்பக் கொடியை புதர் என நினைத்து வெட்டினார். அப்போது அதிசயமாக கடம்பக்கொடியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.

இதனால் செய்வதறியாது திகைத்த அவர், இதுபற்றி ஊர் பெரியவரிடம் கூற, மக்கள் கூட்டம், கூட்டமாக அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர்.அப்போது சுவாமியின் அருளால் ஒரு பெரியவர் அருள்வாக்கு கூறினார்.

ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை அரைத்துப் பூசினால் ரத்தம் வடிவது நின்று விடும் என்றார். அந்த வனப்பகுதியில் சந்தனமரம் இருக்கும் இடத்தின் அடையாளத்தையும் கூறினார்.

அவர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்ற மக்கள், அங்கு சந்தன மரம் இருப்பது கண்டு வியப்படைந்தனர். சந்தன மரத்தின் கொம்பை எடுத்து அரைத்து அதை ரத்தம் வந்த இடத்தில் பூசியதும் ரத்தக் கசிவு நின்றது. அப்போது, பரமேஸ்வரன் அங்கே லிங்க வடிவில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். மக்கள் ஓலையால் கூரை வேய்ந்து கோவில் எழுப்பினார்கள். சுயம்புலிங்க சுவாமிக்கு பால் அபிஷேகமும், நான்கு வேளை பூஜையும் செய்து வணங்கினர். சுவாமியின் அற்புத லீலைகளால் சுவாமியின் பெருமை நாடெங்கும் பரவியது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்தது.

உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சந்தனத்தை பூசி ரத்தத்தை நிறுத்திய காரணத்தால் அவரை வழிபட வரும் பக்தர்களுக்கும் சந்தனத்தை மேனி எங்கும் பூசுவதற்கு கொடுக்கின்றனர். சுவாமியின் திருமேனியில் தினமும் சந்தனத்தை அரைத்து பூசுகின்றனர். தீராத நோய் உள்ளவர்களும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் சந்தனத்தை மருந்தாக்கி நலம் பெறுகின்றனர். சந்தனம், விபூதியை தண்ணீரில் கலந்து அருந்துகிறார்கள்.

இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், தைப்பூச விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. தைப்பூச உத்ஸவம், 10 நாள் பிரம்மோற்சவமாக சிறப்பாக நடைபெறுகிறது.

சுவாமியின் உடனுறை சக்தி பிரம்மசக்தி ஆவார். கோவில் வளாகத்தில் பரிவார தேவதைகளான முன்னோடி சுவாமி, இசக்கி அம்மன், பேச்சி அம்மன், மாடசாமி ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. விநாயகர் கோவிலுக்கு மேற்கு பகுதியில் பிரசித்திப் பெற்ற வன்னிய சாஸ்தா கோவில் உள்ளது.

உவரி கோவிலில் காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்டம், பகல் 11.30 மணிக்கு உச்சிக் காலம், இரவு 7 மணிக்கு சாயரட்சை, 8.30 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும். மார்கழி மாதத்தில் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படும்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கிழக்கே 25 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 35 கிலோ மீட்டர் தொலைவிலும் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலின் தை பூசத் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. பெருவாரியான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe