photo click and interview ©senkottai sriram…
எழுத்தாளர் பாலகுமாரன் உங்களுடன் பேசுகிறார்…. இப்படி.
இது முழுக்க முழுக்க எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் பேச்சு நடையே…
விகடன் பிரசுத்தின் வெளியீடுகளை விளம்பரப்படுத்தி, வாசகர்களின் சுவைக்காக பேட்டிகள், கட்டுரைகள், டிப்ஸ் போன்றவை தாங்கி, விகடன் புக்ஸ் என்ற இலவச பிரதியை விகடன் நிறுவனம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதற்காக ஒரு நாள் எழுத்தாளர் பாலகுமாரனை சந்தித்து அவருடைய எண்ணங்களை வாசகர்களுக்காக எழுதினால் என்ன என்று தோன்றியது.
ஏற்கெனவே பல முறை அவரை சந்தித்திருந்தாலும், ஒரு சந்திப்பு என்னால் மறக்கமுடியாது. பாலகுமாரனின் உடையார் நாவலைப் படித்துவிட்டு, டாக்டர் ஒருவர் எப்படியாவது அவரை சந்தித்தே ஆகவேண்டும் என்றார். அவர் மலேசியாவில் புகழ்பெற்ற டாக்டர் ராமச்சந்திரன் என்பவர். அவருக்கு வரலாற்று புதினங்களில் ஆர்வம் அதிகம். அதனால் ஒரு முறை கலைமகள் நிறுவனத்துக்கு வந்திருந்தபோது, கலைமகள் பத்திரிகையில் போட்டி ஒன்றை அறிவிக்கச் செய்து பரிசுப் பணத்தையும் கொடுத்தார். அப்படியே கலைமகளில் 2004ல் சரித்திர நாவல் போட்டி நடத்தப்பட்டது.
அப்படி ஒரு வரலாற்றுப் புதினப் பித்தரான டாக்டர் ராமச்சந்திரனுக்கு உடையார் நாவல் உசுப்பேற்றியதில் வியப்பு ஒன்றும் இல்லையே. அதனால் நான், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர், டாக்டர் ராமச்சந்திரன் மூவரும் பாலகுமாரன் அவர்களின் இல்லத்துக்கு ஒருநாள் சென்றிருந்தோம். மதிய வேளை அவருடைய இல்லத்தில் சாப்பாட்டோடு, வரலாற்று இலக்கியச் சாப்பாடும் நடந்தது.
அவருடன் நேர்காணல் நடந்தது. அதன் சுருக்கப்பட்ட பகுதி விகடன் புக்ஸ்ஸில் மார்ச் மாத இதழில் வெளியானது. ஆனால் அவருடைய ஒரு மணிநேர முழு பேட்டியிலும் அவர் சொன்ன விஷயங்கள் மிகப் பெரிது. அதை என் பிளாக்கில் இப்போது நெட் வாசகர்களுக்காகத் தந்திருக்கிறேன்.)
———————————————————————————
(எழுத்துலகுக்கு வரவேண்டும் என்றால் நிகழ்வுகளை, சமூகத்தை உற்று கவனித்தல் என்பது மிக முக்கியமாச்சே என்று சொல்லிவிட்டு, நீங்கள் உற்று கவனித்த விஷயம் என்ன என்று கேட்டதற்கு அவரிடம் இருந்து வெளிவந்த சரளமான பதில் இது…)
என்னுடைய ஊர் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ள பழமறநேரி. எங்கப்பாவுக்கு மருவூர். அருகில் உள்ள கிராமம்தான். இரண்டுமே மிகச் செழிப்பான கிராமங்கள். ஆனால் நான் கிராமத்தில் வளரவில்லை. இளவயதிலேயே பட்டணத்துக்கு வந்துவிட்டேன். முன்னர் சுஜாதா ஒரு வெண்பாவில் எழுதியதுபோல், நான் ராயப்பேட்டை பாலு. வசித்தது பட்டணமாயிருந்தாலும், கிராமத்து அந்தணக் குடும்பத்துக்குரிய ஆசார ஒழுக்க வகைகள் என்னிடம் இருந்தன. இந்த முரண்பாடு ஒரு குறிப்பிட்ட வயதுவரை அதிகமாக இருந்தது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணாமல் பழகும் எல்லா இடத்திலும் அந்தண மொழியே பேசிக்கொண்டிருத்தல்….
பலர் கேலி செய்தபோதும்கூட, அதை மாற்றிக்கொள்ளமுடியாமல் தவித்தேன்.
ஒரு பொதுவான தமிழுக்கு வர எனக்கு 20 வயது பிடித்தது. இப்படி கிராமத்து நகரத்து வேறுபாடுகளுக்கிடையில் வளர்ந்துவந்த எனக்குள் இந்த முரண்பாடு அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தின. இது என்ன பெரிய விஷயம் என்று தோன்றலாம். ஆனால் மக்களை உற்று கவனிக்க இது முக்கியமாக இருந்தது. என் இள வயதில் பிராமண எதிர்ப்பு அதிகம் இருந்தது. டேய் குடுமி, பாப்பான் என்று கேலி பேசுகின்ற அந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டுதான் வளர்ந்தேன். இப்படிச் சொல்கிறார்களே, நாம் எப்படி நடந்துகொள்வது என்ற குழப்பம் என்னுள் இருந்தது.
இதுதான் என்னை அந்த வயதில் உற்றுப் பார்க்க வைத்தது. மற்றவர்களையும் உற்றுப் பார்க்க வைத்தது.
என்னுடைய கிராமத்தில் அந்த மாதிரியான எதிர்ப்பு இல்லாததால் எல்லோரும் ஒன்று என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. ஆனால் நகரத்துக்கு வந்தபின்பு அந்த எதிர்ப்புகளுக்கிடையே வாழ வேண்டியிருந்ததால், அதுவே என்னை விழிக்கச் செய்து இந்த உலகத்தைப் பார்க்க வைத்தது.
பின்னாளில் உலகத்தைப் புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தபோது, இந்தப் பிரிவுகள் எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று எனக்குப் புரிந்தது. இந்தத் தெளிவு என்னுள் பிறந்த போது, நான் எழுதத்தொடங்கினேன். என்னுடைய அறிவுரைகள்… குழம்புங்கள். குழம்பியதுதான் தெளியும். அர்ஜுனனுக்கு பெரிய கலக்கம் வந்தது. எதிரே குருமார்கள். உறவினர்கள். சகோதரர்கள். எல்லோரையும் வெட்டி எறியவேண்டும், கொல்லவேண்டும் என்கின்ற நிலை. இது எப்படி சாத்தியம் என்று அவன் குழம்பினான். அப்போது அவனைத் தெளிவித்ததுதான் கீதை. அவனுக்கு அதில் தெளிவு அறிவுறுத்தப்பட்டது.
இது விஷாத யோகம். குழம்பியபின் அடையும் தெளிவு. என்னுடைய இளவயதில் பல்வேறு விஷயங்களால் கலங்கிய படி இருந்ததால். பெண்கள் நடத்தப் படுகின்ற விதம். ஆனால் பெண்களைப் பற்றி உயர்வாகப் பேசுகின்ற அலட்டல்…பெண்களை அடிமைகளாக முட்டாள்களாக ஆண்கள் வைத்திருப்பதும், புத்திசாலிப் பெண்கள் மருகித் தவிப்பதும் நான் நிறையப் பார்த்திருக்கிறேன். இந்தத் தாக்கமும் என்னுள் அதிகம் இருந்தது.
அதேபோல அடுத்த கட்டத்துக்கு நான் வந்தபோது, மூத்த தலைமுறையினர் காட்டிய கடும் எதிர்ப்பு… என் தந்தை பேண்ட் போட்டுக் கொண்ட போது கடுமையாக கேலி செய்திருக்கிறது. குடுமியை எடுத்துக் கொண்டபோது, கடுமையாக எச்சரித்திருக்கிறது. அதேபோல் நான் சினிமாவுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டபோது என் தந்தையார் என்னை கடுமையாக எச்சரித்தார். சினிமா ஒரு மனிதனை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடும்; சினிமாவுக்குப் போகக்கூடாது என்று தடுத்தார். அதனால் ஒரு வருடத்துக்கு ஒரு சினிமாவோ ரெண்டு சினிமாவோ பயந்து பயந்து பார்த்திருக்கிறேன். சினிமாவின் பரிச்சயமே இல்லாமல் இருப்பவனே உத்தமமான இளைஞன் என்ற கருத்தைக் கொண்டிருந்தவர் அவர். இன்னொரு கருத்து என் நண்பர்களிடையே இருந்தது. அதாவது, கதை புத்தகம் படித்தால் கெட்டுப் போய்விடுவார்கள் என்ற கருத்து.
பொதுவாக புத்தகமே படிக்கக்கூடாது; அப்படியே படித்தாலும் திருக்குறள் பகவத்கீதை என்றுதான் படிக்கணும். பாடப்புத்தகம் தவிர படிக்கிறதுக்கு என்ன இருக்கு என்று கேட்கிற நண்பர்கள் இருந்தார்கள். இப்படி மழுங்கிய மனிதர்கள் என்னைச் சுற்றி இருந்ததைப் பார்த்து, நம் வாழ்க்கை வீணாகிவிடக்கூடாதே என்று கவலைப்பட்டேன்.
இந்தத் தெளிவு எனக்கு என் தாயார்மூலம் பிறந்தது. அவர் என்னிடம் கதைப்புத்தகம் படி என்று சொன்னார்கள். பொன்னியின் செல்வன் வாங்கிக் கொடுத்தார்கள். காமிக்ஸ் என்ற ஆங்கில சித்திரக் கதைகள் நிறையப் படித்தேன்.அந்தப் படிப்புத்தான் என்னை உற்றுப்பார்க்க வைத்தது. கற்பனை வளர்த்தெடுக்கத் தூண்டியது. இது ஒரு சந்தோஷமான மாற்றம். தான் துணையாக இருக்க முடியாத நிலையில் எனக்குத் துணையாக புத்தகங்களை அனுப்பினார். என் தந்தையின் சொற்படி நான் சினிமா அதிகம் பார்க்கவில்லை. எம்.ஜி.ஆரா சிவாஜியா என்று நண்பர்கள் மத்தியில் பேச்சு வந்தபோது நான் சிவாஜிகட்சிதான்! இதுபோன்ற சின்னச்சின்ன விஷயங்களின் தொகுப்பாக வளர்ந்தவன் தான் இந்த பாலகுமாரன்.
————————————————————–
(இப்போது பழுத்த ஆன்மீகவாதியாகத் தோற்றமளிக்கும் உங்களுக்கு உள்ளுக்குள்ளே ஆன்மீகத் தேடல் எப்போது ஏற்பட்டது என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் இது…)
இதே காலகட்டத்தில்தான் எனக்குள் ஆன்மிகத் தேடலும் ஏற்படத் தொடங்கியது. பத்திரிகைகள் படிக்கத் தொடங்கியிருந்தேன். மஞ்சரியில் தொடராக வந்த ரமணரின் வாழ்வும் வாக்கும் என்ற ஆன்மிகத் தொடரை தொடர்ந்து படித்து வந்தேன். அந்தத் தொகுப்புகளைத் திரட்டி வைத்தேன். ரமணரைப் பற்றி படித்தபோது எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது. அந்த மாற்றம் ஒரு தேடலை எனக்குள் ஏற்படுத்தியது. தேடலின் ஆரம்பம் என்ன? வைராக்கியம். வைராக்கியம் எப்போது வரும்? ஜபம் செய்தால் வரும். ஜபத்துக்கு மூலம் எது? குரு? குருவுக்கு எங்கே போக…?
அப்போது அருகில் இருந்த கௌடியா மடத்துக்குப் போனேன். அந்த மடத்தில் சேர்ந்து ஒருமாதம் ஆகியிருந்த ஒரு பிரமசாரி ஸ்வாமியிடம் போய் எனக்கு ஜபம் செய்ய ஏதாவது மந்திர உபதேசம் செய்யுங்களேன் என்று வேண்டினேன். ராமா கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டிரு என்று சொன்னார். இல்லை இல்லை எனக்கு ஏதாவது மந்திரம் சொல்லிக்கொடுங்கள் என்று கேட்டேன். அப்படியா கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டே இந்த மடத்தில் சுற்றிச் சுற்றி வா என்றார்.
நானும் சுற்றத் தொடங்கினேன். நூறு சுற்று சுற்றிவரச் சொன்னார். நான் அவர் அங்கு எங்காவது இருந்துகொண்டு நான் சுற்றுவதை எண்ணிக் கொண்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டே சுற்றினேன். ஆனால் அவர் அங்கு இல்லை என்று தெரிந்தவுடன் 68 சுற்றோடு நிறுத்திக் கொண்டேன். ஆனாலும் அப்படிச் சுற்றியது என்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. பிறகு அங்கே தியான ஹாலில் இருந்த கிருஷ்ணர் விக்கிரகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். கண்களில் கண்ணீர் பெருகியது.
அப்போதுதான் ஒரு விஷயத்தை எங்கிருந்து பார்க்க வேண்டும் என்ற சூட்சுமத்தைப் புரிந்துகொண்டேன். எதையும் நமக்குள் இருந்து விலகி நின்று பார்க்கக் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு எனக்கு நிதானம் கைவந்தது.
இந்த குணமே எனக்கு கதை எழுத மிகவும் உதவிகரமாக இருந்தது. வாழ்க்கையின் பரந்த அனுபவங்கள், அத்தோடு சிறிதளவு ஆன்மிகத் தெளிவு இவையே அதற்கு உதவியது.
—————————————————————–
(ஆன்மிகவாதியான உங்களுக்கு எப்போது இலக்கியப் பரிச்சயம் ஏற்பட்டது என்றும், இலக்கிய அமைப்புகள் எதனுடனாவது தொடர்பு கொண்டிருந்தீர்களா என்றும் கேட்டபோது, தன்னுடைய இலக்கிய ஆர்வம் துளிர்விட்ட கதையை அழகாகச் சொன்னார் பாலகுமாரன். அது…)
கசடதபற என்ற இலக்கிய வட்டத்துக்கு ஒருநாள் யதேச்சையாகப் போனேன். நா.முத்துசாமி என்ற கூத்துப் பட்டறை நண்பர் எனக்கு கசடதபற நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தார். நாங்கள் இருவரும் ஒரே டிராக்டர் கம்பெனியில் வேலை பார்த்தோம். அவர் அக்கவுண்ட்ஸ், நான் பர்ச்சேஸ். முத்துசாமியின் மூலம், ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் பரிச்சயம் கிடைத்தது. இவர்கள் மெத்தப் படித்தவர்கள். ஆங்கில இலக்கியம் தெரிந்தவர்கள். தமிழில் எழுத வேண்டுமென்றால் ஆங்கில இலக்கியப் பரிச்சயம் வேண்டும் என்பது ஒரு சாராரின் கருத்தாக இருந்தது. இன்னொரு சாரார் தமிழில் எழுத வேண்டுமென்றால், பழந்தமிழ் இலக்கியங்களில் பழக்கம் இருக்க வேண்டும் என்ற கருத்து கொண்டிருந்தனர். இந்த இரண்டு கருத்துக்களுமே எனக்கு மிகுந்த உவப்பைத் தந்தன. ஆக, அந்த இளம் வயதில் எனக்கு ஆங்கில இலக்கியமும் பழந்தமிழ் இலக்கியமும் பழக்கமாகின.
ஹொரீஷியஸ் லீடர்.. நன்றாகப் படித்தேன். தடி தடியாகப் புத்தகங்கள் இருந்தன. ஹக்ஸ்லி, ஐண்ட் ராண்ட், கூந்தர் க்ராஸ் என்று நிறையப் படித்தேன். என் தாயார் தமிழ்ப் பண்டிதராக இருந்ததால், வீட்டில் நிறையப் புத்தகங்கள் இருந்தன… என் தாயார் நிறையச் சொல்லித்தந்தார்கள். சுலோசனா என்று பெயர். பள்ளியில் பணியிலிருந்தார். யாப்பு சொல்லிக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து மரபுக் கவிதைகள் முதலில் எழுதிப் பழகினேன். எதுகை மோனையும் சப்த ஒழுங்கும் அமைந்த கவிதைகள் புனைந்தேன். ஞானக்கூத்தன் முத்துசாமி போன்றவர்கள் உற்சாகப் படுத்தினார்கள். நான் நிறையப் படிப்பதற்கு அவர்கள் காரணமாக இருந்தார்கள்.
லாயிட்ஸ் ரோடில் ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி வைத்திருந்த பழனி என்பவர் இருந்தார். அவரிடம் எல்லா புத்தகங்களும் இருந்தன. ஒரு புத்தகத்துக்கு ரெண்டு அணா. அவ்வளவு ரெண்டணா என்னிடம் இல்லை என்பதால், பல புத்தகங்களை இந்தா சீக்கிரம் படிச்சிட்டுக் கொடு என்று புத்தகங்கள் நிறையக் கொடுத்தார். அவர் கொடுக்கும் புத்தகங்கள் நன்றாகவே இருக்கும். காசு இல்லாமல் அவருடைய லெண்டிங் லைப்ரரியில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட புத்தகங்களை நான் படித்திருக்கிறேன்.
கசடதபற மற்றும் நண்பர்கள் கொடுக்கும் புத்தகங்கள், ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி என்ற இந்த வட்டத்துக்குள்ளேயே என் புத்தக வாசிப்பு வட்டம் அமைந்துவிட்டது. பல ஆங்கிலப் புத்தகங்கள் அங்கு மட்டும்தான் கிடைக்கும் என்ற அளவுக்கு சேர்த்து வைத்திருந்தார். உதாரணத்துக்கு ஜேம்ஸ் ஹால்டிசேஸ் புத்தகம். அது வேறு எங்கும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அந்தப் புத்தகத்தைப் படித்தால் ஆங்கிலம் சரளமாக வந்துவிடும். காரணம் அதில் நிறையப் பொதிந்துள்ள டயலாக்ஸ்… அதனால் ஆங்கில பேச்சுத்திறனும் வளரும் என்பது அந்தப் புத்தகங்களின் பலம். என்ன பேசுகிறார், என்ன கேட்கிறார் என்று புரிந்துவிடும். ஆங்கில வொக்கப்லரி அருமையாக அமைந்துவிடும்.
அலுவலகச் சூழல், இதுபோன்ற புத்தகங்களின் துணை போன்றவற்றால் என் ஆங்கில அறிவு நன்கு வளர்ந்தது. இப்படி முதலில் கவிதை பழகி, அதன் பின் கவிதையிலிருந்து உரைநடைக்குத் தாவினேன். அதனால் உரைநடை நன்கு கைவந்தது..
——————————————————————
(அப்பாடா… எல்லோரையும்போல நீங்களும் கவிதைக்குத்தான் வந்தீர்களா? அப்படியிருந்தும் நீங்கள் ஏன் கவிதையைக் கைவிட்டீர்கள்? என்று கேட்டதற்கு அவரிடமிருந்த வந்த பதில் இதுதான்…)
இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடந்தது. அந்த சமயங்களில் கதை, கவிதைகளுக்கு நல்ல மதிப்பும் வரவேற்பும் இருந்தது. ஆனால் முன்னர் கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் அவ்வளவாக மதிப்பும் இருந்ததில்லை; புறக்கணித்தலும் தொடர்ந்தது. அதற்கு முன்னர் எல்லாவற்றிலும் ஆங்கிலமே கோலோச்சியது. ஒரு கடிதம் எழுதினால்கூட, நமஸ்காரம் ஹவ் ஆர் யு? என்றுதான் கடிதம் தொடரும். ஆங்கிலம் அறிந்திருத்தலே அறிவு என்று கருதப்பட்ட காலம் …
இப்படிப்பட்ட கும்பல் சூழ்ந்திருந்த நிலையில் இருந்து சற்றே விலகி, தமிழில் எழுத ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் அது அவ்வளவாகப் பாராட்டப்படவில்லை… பின்னாளில் நான் அதிகம் எழுதியபோது என்னை கவனிக்கத் தொடங்கினார்கள். கசடதபற-தான் முதல் கதைக்கு கை கொடுத்தது. அதன் பின் கதைகள் எழுத பயிற்சி மேற்கொண்டு நிறைய கதைகள் எழுதத் தொடங்கியிருந்தபோதுதான், குமுதம் நிருபராக இருந்த பால்யூவின் அறிமுகம் கிடைத்தது.
அந்த நிலையில் குமுதம் பால்யூவின் நட்பு இல்லையென்றால் நான் தொடர்ந்து எழுதியிருப்பேனா என்பது சந்தேகமே! குமுதத்தில் கதை எழுதணுமே என்று எண்ணியபோது, பால்யூதான் பாலமாக இருந்தார். எப்படி எழுதுவது என்று யோசித்தபோது, உனக்கு என்ன வருமோ அதைச் செய், அவர்களுக்குப் பிடித்திருந்தால் நிச்சயம் வரும்… என்ன வாசகர்களுக்கும் புரிகிற மாதிரி எழுதணும்; அதைத்தானே அவர்களும் எதிர்பார்ப்பார்கள் என்று கூறி என்னை உசுப்பேற்றினார்.
ஒரு விஜயதசமி நாளில் என்னயும் நண்பர் சுப்பிரமணிய ராஜுவையும் குமுதத்துக்கு அழைத்தார். எஸ்.ஏ.பி எங்கள் இருவரையும் பார்த்துவிட்டு, ரா.கி.ரங்கராஜனிடம் இவர்கள் இருவரும் கெட்டிக்காரர்கள் என்று சின்முத்திரை காட்டிச் சொன்னார். அது பெரிய விஷயம் என்று பின்னர் பால்யூ என்னிடம் சொன்னார். அதன்பிறகு குமுதத்தில் கதைகள் எழுதினேன். அது ஒரு மகத்தான ஆரம்பம் எனக்கு. கெட்டாலும் ஆண்மக்கள் என்ற கதை எழுதினேன். நல்ல வரவேற்பு இருந்தது. நடை நன்றாக இருக்கிறதே என்று அப்போது இருந்த எழுத்தாளர்கள் சொன்னதாகவும் கேள்விப்பட்டேன். அது என் நான்காவது கதை என்றாலும் அதிகம் பேர் என்னை கவனிக்க வைத்த கதை.
—————————————————
(உங்களுடைய முதல் நூல் எது என்று நினைவிருக்கிறதா? அந்த நூல் வெளியான போது உங்கள் உணர்வு எப்படியிருந்தது என்று கேட்டபோது அவருடைய சிறுகதைத் தொகுப்பு நூல்தான் முதல் நூல் என்று சொல்லி சிலவற்றைச் சொன்னார், இப்படி…)
சிறுகதைத் தொகுப்பு நூல்தான்! சின்னச்சின்ன வட்டங்கள்-. அதை நர்மதா பதிப்பகம் தொகுத்து வெளியிட்டது. அதன்பிறகு குங்குமத்தில் சாவி ஆசிரியராக இருந்தபோது, அதில் ஒரு குறுநாவல் எழுதச் சொன்னார். நன்றாக வந்தது. அந்த நேரம் குங்குமத்திலிருந்து, சாவி என்கின்ற புதிய பத்திரிகையைத் தொடங்கினார். ஒரு புதிய பத்திரிகை, புதிய சூழல் என்று நானும் அவருடனேயே சென்றேன். அவர் சாவி பத்திரிகையை முதலில் கல்கண்டு போல் செய்திகளின் தொகுப்பாகக் கொண்டுவரவே எண்ணினார். ஆனால் பிறகு, அதில் சிறுகதை, கவிதை, பேட்டி என்று இடம்பெறச் செய்ய எண்ணினார். என்னையும் முதலில் நேர்காணல்கள் எடுத்துத் தரவே பணித்தார். நானும் பேட்டிகள் எடுத்து எழுதத் தொடங்கினேன்.
———————————————————–
(பேட்டிகள் எடுத்தேன் என்று சொன்னவுடனே உங்களுக்கு நன்கு நினைவில் இருக்கும் பேட்டி என்று கேட்டேன். ஆனால் அவருடைய பேட்டி, ஒரு நேரடிப் பேட்டியாக அமையாமல் ஒரு பேட்டிக் கட்டுரையாக அமைந்திருக்கிறது. அதை அவர் சொன்னபோது, மகிழ்வும் துக்கமும்