சசிகலா தரப்பு நெருக்கடி: கழன்று கொண்ட ஷீலா உள்ளிட்ட அதிகார வர்க்கம்!

தமிழக ஆளுநர் பொறுப்பில் உள்ள வித்யாசாகர் ராவ், பிப். 9ம் தேதியை ஒட்டி ஊரில் இல்லாமல், தனிப்பட்ட பல வேலைகளை வைத்துக் கொண்டுள்ளார். ஆளுநர் இல்லாத நிலையில், முதல்வர் பொறுப்பு ஏற்பது பிரச்னைக்குரியது

சென்னை:

தமிழக அரசின் சிறப்பு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், திடீர் என அந்த பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார்.  இதற்கு பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட நெருக்கடிகளே காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சசிகலா தரப்பு நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாகக் கூறுகின்றனர்.

இது குறித்து, தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தது…

முதல்வராக இருந்த ஜெயலலிதா, தலைமைச் செயலராக ஷீலா பாலகிருஷ்ணனை நியமித்து, அவரது ஆலோசனைபடியே பலவற்றையும் நிர்வாகத்தில் செய்து வந்தார். ஷீலாவின் நடவடிக்கைகள், ஜெயலலிதாவுக்குப் பிடித்திருந்ததால், அவரை மட்டும் எந்நேரமும் போயஸ் தோட்டம் வந்து செல்ல ஜெயலலிதா அனுமதித்திருந்தார். அவர் பதவி ஓய்வு பெற்றுவிட்ட பின்னரும் கூட, அவரது இடத்தில் தனக்கு சிறப்பு செயலராக இருந்த ராம் மோகன் ராவை, தலைமைச் செயலராக நியமித்து விட்டு, ஷீலாவின் பணியை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழக அரசின் சிறப்பு ஆலோசகராக நியமித்துக் கொண்டார்.

ஷீலாவின் ஆலோசனையை பெரிதும் சார்ந்திருந்தார் ஜெயலலிதா. நிர்வாகத்தில் எந்தக் கோப்பையும் முதல் கட்டமாக ஷீலா பாலகிருஷ்ணன் பார்க்க வேண்டும். அதன் பின், அவர் அதை தலைமை செயலருக்கு அனுப்பி, தனக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதனால், முதல்வருக்கு இணையான அதிகாரத்தை, தமிழக அரசு நிர்வாகத்தில் பெற்றிருந்தார் ஷீலா பாலகிருஷ்ணன்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அந்தப் பொறுப்பில் தொடர ஷீலா பாலகிருஷ்ணன் விரும்பவில்லை. முதல்வர் பன்னீர்செல்வத்திடம் தன் விருப்பமின்மையை பலமுறை தெரிவித்தார் ஷீலா. ஆனால், ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நீங்கள், எனது ஆட்சியிலும், அரசுக்கு தொடர்ந்து உதவியாக இருந்து செயல்பட வேண்டும். உங்களைக் கேட்டே எல்லா முடிவுகளும் எடுக்கப்படும் என சொல்லி வந்தார் பன்னீர்செல்வம். இதனால் ஷீலா பாலகிருஷ்ணனும், அரசு சிறப்பு ஆலோசகராக பணியில் தொடர்ந்தார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தில்லி சென்ற போதும் உடன் சென்றார்.

இந்நிலையில், பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்த சசிகலா தரப்பினர், ஷீலா பாலகிருஷ்ணனுக்கும் நெருக்கடி கொடுத்தனர்.  பன்னீர்செல்வம் என்ன செய்கிறார் என்பதை, ஷீலா பாலகிருஷ்ணன் மூலம் அறிந்து கொள்ள முயன்றனர். இந்த உளவு வேலைகளுக்கு ஷீலா உடன்படவில்லை என்றதால், அவருக்கு மறைமுகமாக நெருக்கடிகள் கொடுக்கத் துவங்கினராம்.

தங்கள் கையாட்களான காவல்துறை அதிகாரிகள் மூலம், ஷீலா பாலகிருஷ்ணனின் நடவடிக்கைகளை உளவு அறிந்தனர். இது ஷீலா பாலகிருஷ்ணனை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. இதனை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் ஷீலா பாலகிருஷ்ணன் சொல்லிப் பார்த்தார். ஆனால், தனது நிலையை எடுத்துச் சொல்லி வருத்தப்பட்ட முதல்வர் பன்னீர்செல்வம், தன்னை மீறி நடக்கும் விஷயங்களை தடுக்க இயலாமல் ஒதுங்கிப் போயுள்ளார்.  ஆனால், நாளாக நாளாக ஷீலா பாலகிருஷ்ணன் மீது பன்னீர்செல்வத்துக்கும் சந்தேக நிழல் படிந்தது. தான் சொல்லும் விஷயங்களை மட்டுமே, நிர்வாகத்தில் செய்ய வேண்டும் என ஷீலாவுக்குச் சொல்லியிருக்கிறார் பன்னீர்செல்வம். ஆனால், அரசு நிர்வாகத்தில் இப்படி இரு பிரிவுகளாக நின்று, ஆளாளுக்கு உத்தரவு போடுவதும்; உளவு பார்ப்பதும், ஷீலாவை எட்டிச் செல்ல வைத்தது.

தில்லியில்,  பிரதமரை சந்திக்கச் சென்ற போது, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அது தொடர்பான அமைச்சகங்களின் செயலர்கள் மட்டத்தில் நேரில் சென்று பேசினார் பன்னீர் செல்வம். அப்போது ஷீலா உடன் இருந்தார். ஆனால், இது அங்கிருந்த செயலர்கள்  மட்டத்தில் ஏளனப் பேச்சை ஏற்படுத்தியது. தொடர்ந்து, பிரதமரை பன்னீர்செல்வம் சந்திக்கச் சென்றபோது, ஷீலாவை தவிர்த்து, தனியாகச் சென்றுள்ளார். மேலும் அதிகாரிகளைத் தவிர்த்துள்ளார். அதன் பின்னர் முதல்வர் பன்னீர்செல்வத்தோடு, தம்பிதுரை தில்லியில் வைத்தே வெளிப்படையாக மோதினார். இவை எல்லாம் ஷீலாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால், ஆட்சி நிர்வாகத்தில் இருந்து விலக ஆரம்பித்த ஷீலா, இது குறித்து தனது குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் தொடர்ந்து நிர்வாகத்தில் இருப்பது, பின்னாளில் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என குடும்பத்தார் கூற, அது குறித்து சிந்தித்துள்ளார்.

இந்நிலையில், தனது குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல்நிலை சரியின்றி இருப்பதால், தாம் பணி நீட்டிப்பில் இருந்து விலகிக் கொள்ளும் முடிவுக்கு வந்ததாக ஷீலா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஷீலாவுக்கு மட்டுமல்லாமல், இதே போன்ற நெருக்கடிகள், முதல்வர் பன்னீர்செல்வத்திடம் செயலர்களாக இருக்கும் வெங்கட் ரமணன், ராமலிங்கம், விஜயகுமார் போன்றவர்களுக்கும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் ஜெயலலிதாவிடம் நீண்டகாலம் செயலர்களாக இருந்து பணியாற்றிய வெங்கட்ரமணனும், ராமலிங்கமும் நீண்ட விடுப்பில் சென்றுள்ளனராம். அவர்களும், தங்கள் வகிக்கும் பணியில் இருந்து விலகிச் செல்லத் தயாராகி விட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசு நிர்வாகம், இப்படி அதிகார மிரட்டல்களால் பிரிந்து நிற்பது, தமிழக அரசின் மொத்த செயல்பாடுகளையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சசிகலா வரும் பிப்.9ம் தேதி முதல்வர் பொறுப்பேற்பார் என்று அதிமுக வட்டாரங்கள் தகவலைக் கசியவிட்டுள்ளன. இதனிடையே சசிகலா, அதிமுக.,வின் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் குறித்து புகார் அனுப்பிய சசிகலா புஷ்பா, கட்சி தேர்தல் விதிகளின் படி சசிகலா தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லது என்றும் க்கூறி மனு கொடுத்தார். அதன் மீது விசாரித்த தேர்தல் ஆணையம், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மான நகலைக் கோரியது. அதிமுக தரப்பில் அதற்கு தீர்மான நகல் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அது தமிழில் இருந்ததால், ஆங்கிலத்தில் எழுதப் பட்ட தீர்மானத்தை தங்களுக்கு அனுப்புமாறு தேர்தல் ஆணையம் கோரியது.

இடையே, தமிழக ஆளுநர் பொறுப்பில் உள்ள வித்யாசாகர் ராவ், பிப். 9ம் தேதியை ஒட்டி ஊரில் இல்லாமல், தனிப்பட்ட பல வேலைகளை வைத்துக் கொண்டுள்ளார். ஆளுநர் இல்லாத நிலையில், முதல்வர் பொறுப்பு ஏற்பது பிரச்னைக்குரியது என்பதால், சசிகலா தரப்பு மேலும் தீவிரமாக யோசித்து வருகிறதாம்!