
அடுத்த பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் மற்றும் போரிஸ் ஜான்சன் இடையே போட்டி எழுந்துள்ள நிலையில், பென்னி மொர்டன்ட் என்ற பெண்ணும் போட்டியில் உள்ளார்.2024 ல் பார்லிமென்ட் தேர்தலில் தன்னால் மட்டுமே , கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியும் என எம்.பி.க்களிடம் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தரப்பினர் கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு முயற்சி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கடந்த ஜூலையில் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக பதவியேற்க முடியும். அதன்படி, கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது.இதில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் போட்டியிட்டனர். இதில் வென்று நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்றார். ஆனால், கட்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக 45 நாட்களிலேயே லிஸ் டிரஸ் பதவி விலகினார்.
இச்சூழ்நிலையில், தலைவர் பதவிக்கான தேர்தலில் லிஸ் டிரஸிடம் தோல்வியடைந்த ரிஷி சுனக்கை பிரதமராக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த வாரம் நடக்கும் எனவும், வெள்ளிக்கிழமைக்குள் முடிவு எடுக்கப்பட்டு விடும் என தகவல் வெளியாகி உள்ளது.
தலைவர் பதவிக்கு ரிஷி சுனக் முன்னிலையில் உள்ள நிலையில், போட்டியில் இருந்து விலகிக்கொள்ளும்படியும், தான் மீண்டும் பிரதமராக வழிவிடும்படி போரிஸ் ஜான்சன் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 2024 டிச மாதம் நடக்கும் பொதுத்தேர்தலில், கட்சி தோல்வியடைவதை தடுக்க தன்னால் மட்டுமே முடியும் என கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களிடம் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளதாக அந்நாட்டு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பார்லிமென்டில் மெஜாரிட்டி இருந்தும் மக்களின் ஆதரவை இழந்துவிட்டதால், உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் நிலையில், ரிஷி சுனக்கை தொடர்பு கொண்டு தன்னுடன் இணைந்து செயல்படும்படி போரிஸ் ஜான்சன் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
கோவிட் ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் விதிமுறைகளை கடைபிடிக்க தவறியதாகவும், பல முறை தடையை மீறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
அடுத்த பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் மற்றும் போரிஸ் ஜான்சன் இடையே போட்டி எழுந்துள்ள நிலையில், பென்னி மொர்டன்ட் என்ற பெண்ணும் போட்டியில் உள்ளார்.இந்த போட்டியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென் வாலஸ் மற்றும் நிதி அமைச்சர் ஜெர்மி ஹண்ட் இருந்தாலும் அவர்கள் பின்வாங்கி கொண்டனர். பென் வாலஸ், போரிஸ் ஜான்சனை ஆதரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
