நான் ஒரு நாத்திகன் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நான் பிறப்பால் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன் என்பது பலருக்கு தெரியாது. ஜோசப் விஜய் மாதிரி நான் ஜோசப் இதயா.

எனது குழந்தைகளுக்கு கிரண், பிரதீப் என்கிற பொதுவான பெயர்களை வைத்தாலும் ஸ்கூலில் த/பெ. ஜோசப் என்று கிறிஸ்தவ பெயர் வருவதை நான் விரும்பவில்லை. எனவே என் பெயரை எஸ்.ஜே.இதயா என்று கெசெட்டில் மாற்றினேன்.

இந்த பெயர் மாற்றத்திற்காக நான் சென்னை வந்த போது, (அப்போது சென்னையில் மட்டும்தான் பண்ண முடியும்.) சோ ஸாரிடம் நான் வாங்காத திட்டு இல்லை. ”சுத்த பைத்தியக்காரத்தனம்” என்று பகிரங்கமாக திட்டினார். “உங்கப்பா, அம்மா எவ்வளவு ஆசையாக உங்களுக்கு பெயர் வைத்திருப்பார்கள்? இப்போது அவர்கள் வைத்த பெயரை மாற்றினால் அவர்கள் மனதை நோகடித்த மாதிரி ஆகாதா? அவர்கள் தங்கள் பிள்ளையை நினைத்து மனம் வருந்த மாட்டார்களா?” என்று கேட்டார்.

ஆனாலும் நான் பிடிவாதமாக என் பெயரை மாற்றிக் கொண்டேன். ஆனாலும் அதற்காக அவர் என்னை நேசிப்பதை நிறுத்திக் கொள்ளவில்லை.

அவ்வப்போது கிறிஸ்தவ மதம் குறித்து ஏதாவது ஐயம் எழுந்தால் சோ ஸார் எனக்கு ஃபோன் பண்ணுவார். ஒருமுறை அப்படித்தான்.. “ரம்ஜான் நேரத்தில் முஸ்லீம்கள் விரதம் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். கிறிஸ்தவர்களும் அது போல் விரதம் இருப்பார்களாமே..?” என்று கேட்டார்.

நானும் “ஆமாம் சார். சாம்பல் புதன் (ஆஷ் வெனஸ்டே) முதல் புனித வெள்ளி (குட் ஃப்ரைடே) வரை விரதம் இருப்பதுண்டு. சிலர் நாற்பது நாட்களும் காலையில் விரதம் இருப்பார்கள். சிலர் சபரிமலைக்கு மாலை போடுவது போன்று அசைவமும், மதுவும் தவிர்ப்பார்கள்” என்றெல்லாம் விளக்கம் கொடுத்தேன்.

எல்லா விளக்கத்தையும் கேட்டுக் கொண்டு ஃபோனை வைக்கும் போது “எனக்கும் இந்த கிறிஸ்தவ மதத்திற்கும் வந்த கெட்ட நேரத்தைப் பார்த்தீங்களா ஸார்? இதையெல்லாம் உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு.” என்றாரே பார்க்கலாம். எனக்கு சிரிப்பை அடக்க வெகு நேரம் ஆயிற்று.

இன்னொரு முறை- சிதம்பரத்தில் தி.மு.க. அரசுக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே பிரச்னை வெடித்த போது சோ ஸார் என்னை ஃபோனில் அழைத்து, “நீங்க உடனே சிதம்பரம் போய் என்ன, ஏதுன்னு விசாரிச்சு ஒரு மேட்டர் பண்ணிடுங்க” என்றார்.
எனக்கு பேரதிர்ச்சி.

“ஸார் இது சாமி விவகாரம். எனக்கு சர்ச் பத்தி கேட்டாலே ஒண்ணும் தெரியாது. இந்த தீட்சிகர் விவகாரத்தில் எனக்கு இம்மியளவும் ஐடியா இல்லை. நான் சுத்தமாய் ஜீரோ..” என்றேன்.

உடனே இடைமறித்த அவர், “அதனாலதான் உங்களை அனுப்புறேன். போய் ஜீரோவில் இருந்து ஆரம்பிங்க” என்று உத்திரவிட்டு விட்டார்.

நான் தென் தமிழக நிருபராக இருந்தாலும், வட மாவட்டமான சிதம்பரத்திற்கு மட்டுமில்லை; குஜராத் (இருமுறை), பீஹார், மலேஷியா, இலங்கை ஆகிய ஊர்களுக்கும் ரிப்போர்ட் எடுக்க அனுப்பி என்னை கௌரவித்தார். நான் நாத்திகனாய் இருந்தாலும் என்னை வெறுக்காமல், ஒரு தந்தையைப் போல் நேசித்தார் என்பதற்காக இதைச் சொல்கிறேன். (பிற்பாடு நான் எழுதிய சிதம்பரம் கோவில் தொடர்பான ரிப்போர்ட்டை, ஐந்து பக்கம் வந்தாலும் பரவாயில்லை என்று கொஞ்சமும் எடிட் பண்ணாமல் பிரசுரித்தார்.)

இந்த நாத்திகம் சம்பந்தமான இன்னொரு சம்பவமும் உள்ளது. ஒருமுறை நான் சோ ஸாரை பார்க்க போனது போது அவர் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். நானும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

பகுத்தறிவு குறித்து ஏதோ ஒரு கேள்வி வந்தது. “கடவுள் நம்பிக்கை இருந்தாலாவது கடவுள் தண்டிப்பாரோ என்ற பயத்தில் ஊழல் செய்ய கொஞ்சம் தயக்கம் வரும். நாத்திகனாய் இருந்தால் இன்னும் சௌகர்யம். எந்த பயமும் இருக்காது. எதை வேண்டுமானாலும் திருடலாம்” என்கிற ரீதியில் அதற்கு பதிலளித்தார் அவர்.

பேட்டி முடிந்ததும், “எப்படி ஸார் இருந்துச்சு?” என்று என்னிடம் கேட்டார்.

“நல்லா இருந்துச்சு ஸார். ஆனால் அந்த கடைசி கேள்விக்குரிய பதிலில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. நான் நாத்திகன்தான். ஆனால் எத்தனையோ பக்திமான்களை விட நான் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க முயல்கிறேன்” என்றேன்.

உடனே “ஸாரி ஸார்.. ” என்ற சோ ஸார், “என்ன பண்ணித் தொலைக்க? நாத்திகன்னு சொன்னப்போ எனக்கு உங்க ஞாபகம் வரலையே.. கருணாநிதி ஞாபகம்தான் வந்துச்சு” என்றாரே பார்க்கலாம்.

எனக்கு வருத்தம் மீறி சிரிப்பு வெடித்து விட்டது.

பின் குறிப்பு: 27.10.2015 அன்று சோ ஸார் பற்றி நான் போட்ட ஃபேஸ்புக் பதிவை இப்படி முடித்திருந்தேன்.

//ஒரு தீவிரமான பக்திமான்; நான் ஒரு நாத்திகன் என்று தெரிந்தும் 18 வருடமாய் என்னை வேலைக்கு வைத்துள்ளார். பக்தி பற்றி எனக்கு அவர் சொன்ன புத்திமதிகள் ஏராளம். கேட்கவே கேட்காத இந்த நாதாரியை இன்று வரை ஒதுக்கி வைக்காத தெய்வம் அவர். சோ ஸார்.. நீங்கள்தான் தெய்வம் என்றால் இன்றே நான் ஆத்திகன் ஆக ரெடி! ஏ தெய்வமே.. நீ தான் நிஜம் என்றால், என் ஆயுளை எடுத்து என் குருவுக்கு அளி!//

இதே நாளில் துக்ளக் ஆசிரியர் சோ மறைந்தபோது துக்ளக் நிருபர் எஸ்.ஜே.இதயா எழுதியது…

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.