பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட 80 போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு பிறப்பித்து எச்சரித்திருந்தார். ஆனாலும், போலீஸார் பொது இடங்களில் பொது மக்களிடம் வீறாப்பு காட்டுறாங்களே… டிஐஜி சார் என்றுதான் இதனைப் பார்த்துவிட்டு… சொல்லத் தோன்றுகிறது.
சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து திருச்சி சரக காவல் துறையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. டிஐஜி பிறப்பித்த உத்தரவில், நடவடிக்கைக்கு உள்ளாகும் போலீஸார், அறிவாற்றல் நடத்தை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
நடத்தை சிகிச்சைக்கு பிறகே அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பொதுமக்களிடம் வந்த தொடர் புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாகக் கூறப் பட்டது.
இந்நிலையில் இன்று ஒரு வீடியோ சமூகத் தளங்களில் வைரலானது. அதில், திருச்சி நீதிமன்றம் அருகே சைக்கிளில் சென்ற முதியவர் மீது, அதே வழியில் மோட்டார் பைக்கில் வந்த காவலர் ஒருவரின் வாகனம் மோதியது. முதியவர் காவலரிடம் ஏதோ கூறிய நிலையில், காவலர் தன் பைக்கை விட்டு இறங்கி, முதியவரை ஓங்கி ஒரு அடி கொடுத்துவிட்டு, தன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்.
இப்படி வேறு யாராவது செய்திருந்தால், அவர் மீது புகார் பெற்று, வழக்கு பதிந்திருப்பார்கள் காவல் துறையினர் என்று சமூகத் தளங்களில் கருத்துகள் முன்வைக்கப் பட்டுகின்றன.