திமுக நிறைவேற்றாத பல திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட போரூர் பகுதியில், 2ம் கட்டமாக பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி;- நான் சொல்வதைதான் முதல்வர் செய்கிறார் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், நான் செய்வதையே ஸ்டாலின் சொல்கிறார். கடைசி வரை திமுக சொல்லி கொண்டே இருக்க போகிறது. செய்யும் இடத்தில் அதிமுக இருக்க போகிறது. திமுக ஆட்சிக்கு வர முடியாது.
சென்னை மேயராக இருந்த ஸ்டாலின் செய்தது என்ன? செல்லும் இடங்களில் எல்லாம் ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார். வழக்கத்தை மாற்றாமல், ஊர் ஊராக பெட்டியுடன் சுற்றி வருகிறார்.
நான் ஒரு விவசாயி. விவசாயிகள் படும் கஷ்டங்கள் எனக்கு தெரியும் என்பதால் தான் விவசாய கடனை தள்ளுபடி செய்தேன். தேர்தல் வருவதற்கு முன்பே திட்டங்களை அறிவித்து நிறைவேற்றுவது தான் அதிமுக அரசு. மக்களிடம் இருந்து எடுப்பது திமுக. மக்களுக்கு கொடுப்பது அதிமுக. கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து இல்லாமல், மக்கள் அதிமுக ஆட்சியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால், திமுகவினர் வெறியில் உள்ளனர். வீட்டு மக்களை நினைத்து கொண்டே, நாட்டு மக்களை மறந்தவர்கள் திமுகவினர். கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் ஸ்டாலின், அடுத்து உதயநிதி என திமுகவில் குடும்ப அரசியல் செய்கிறது.
பொய் சொல்வதற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றால், அதனை ஸ்டாலினுக்கு வழங்கலாம் என முதல்வர் விமர்சனம் செய்துள்ளார்.