ஶ்ரீரங்கத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் கார்த்திக் (33). சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த கார்த்திக், தனது உறவினரின் வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு திருச்சியை சேர்ந்த உறவினர் பெண்ணுடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டு, சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஶ்ரீரங்கம் – உத்தமர்கோயில் இடையிலான ரயில் பாதையின் அருகே கார்த்திக் நடந்துசென்றார். அப்போது அந்த வழியாக திருச்சி நோக்கி சென்ற சரக்கு ரயிலின் முன்னே திடீரென கார்த்திக் பாய்ந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் மணமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.