spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?பிரதமர் மோதி விளாசிய சிக்ஸர்..! பல தரப்புக்கும் சவுக்கடி கொடுத்த அதிரடி சரவெடி அசத்தல் பேச்சு..!

பிரதமர் மோதி விளாசிய சிக்ஸர்..! பல தரப்புக்கும் சவுக்கடி கொடுத்த அதிரடி சரவெடி அசத்தல் பேச்சு..!

- Advertisement -
pm modi speech on vaccine
pm modi speech on vaccine

7.6.2021 அன்று நாட்டுமக்களுக்கு
பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்,

அகில இந்திய வானொலி, சென்னை

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம்.  கொரோனாவின் இரண்டாவது அலை,  இந்தக் கொரோனாவின் இரண்டாவது அலையோடு நாட்டுமக்களின் போராட்டம்,  நடந்து வருகிறது.  உலகின் பலநாடுகளைப் போலவே, பாரதமும் கூட, இந்தப் போராட்டத்தின் போது,  மிகப்பெரிய துன்பத்தைத் தாங்கிக் கொண்டு பயணிக்கிறது.   நம்மில் பல மனிதர்கள், தங்கள் உறவினர்களை,  தங்களுடைய நண்பர்களை,  இழந்து தவிக்கிறோம்.  இப்படிப்பட்ட குடும்பத்தினர் அனைவருக்கும்,  என்னுடைய முழுமையான அனுதாபத்தைத் தெரிவிக்கிறேன்.  

நண்பர்களே, கடந்த 100 ஆண்டுகளிலே,  கடந்த நூறாண்டுகளில் வந்திருக்கும்,  இது மிகப்பெரிய பெருந்தொற்றாகும்.   பெரும்சோகம் இது.   இதைப் போன்றதொரு பெருந்தொற்றை,  தற்காலத்திய உலகமானது,  இதுவரை பார்த்ததுமில்லை,  அனுபவித்ததும் இல்லை.   இத்தனை பெரிய உலகளாவிய பெருந்தொற்றுக்கு எதிராக நமது தேசம்,   பல முனைகளிலே,  ஒன்றுபட்டுப் போரிட்டது.  

கோவிட் மருத்துவமனை உருவாக்கம் தொடங்கி,  ஐசியு படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பாகட்டும்,  பாரதத்தில் வெண்டிலேட்டர்கள் தயாரிப்பது முதல்,  பரிசோதனைக் கூடங்களின் ஒரு மிகப்பெரிய வலைப்பின்னலாகட்டும்,  கோவிடோடு போராட வேண்டி,  கடந்த ஒண்ணேகால் ஆண்டுக்காலத்திலே,  தேசத்திலே,  ஒரு புதிய,  உடல்நலக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 

இரண்டாவது அலையின் போது, ஏப்ரல் மற்றும் மே மாதக்காலங்களில்,  பாரதத்திலே,  மருத்துவப் பயன்பாட்டு ஆக்சிஜனுக்கான தேவை,  கற்பனையே செய்யமுடியாத அளவுக்கு அதிகரித்தது. பாரதநாட்டு வரலாற்றிலே இதுவரையில்,  இத்தனை அளவுக்கு,  மருத்துவப் பயன்பாட்டு ஆக்சிஜனுக்கான தேவை,  என்றைக்குமே உணரப்பட்டதே இல்லை. இந்தத் தேவையை நிறைவேற்றும் வகையிலே,  போர்க்கால அடிப்படையில் பணியாற்றப்பட்டது.   அரசு இயந்திரம் முழுமையாக ஈடுபட்டிருந்தது.   ஆக்சிஜன் ரயில் விடப்பட்டது,  விமானப்படை விமானங்கள் இயக்கப்பட்டன.   கடற்படை ஈடுபடுத்தப்பட்டது.  

மிகக்குறைவான நேரத்திலே,  திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியிலே,  பத்து மடங்குக்கும் கூடுதலாக,  அதிகரிக்கப் பட்டது.  உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும்,  அது எங்கே இருந்தாலும் சரி,  எந்த அளவுக்கு,  கிடைத்தாலுமே கூட,  அதைப் பெறுவதற்கு,  முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன… கொண்டும் வரப்பட்டது.  

இதைப் போலவே, அவசியமான மருந்துகளின் உற்பத்தியும்,  பலமடங்கு அதிகரிக்கப்பட்டது.   அயல்நாடுகளில் எங்கே எல்லாம்,  மருந்துகள் கிடைத்தனவோ,  அங்கிருந்து அவற்றைக் கொண்டுவர,  எந்தவிதமான முயற்சியையும் நாம் தவற விடவில்லை. 

நண்பர்களே,  கொரோனா போன்ற கண்ணுக்குத் தெரியாத,   மேலும் உருமாற்றம் செய்யும்,  பகைவனுக்கு எதிரான போரிலே,  மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம்,  கோவிட் விதிமுறை தான்.   முகக்கவசம்,  4 அடி இடைவெளி,  மேலும் மற்ற பிற முன்னெச்சரிக்கைகள்.   இவற்றைப் பின்பற்றியே ஆக வேண்டும்.   இந்தப் போராட்டத்திலே, தடுப்பூசியானது,  ஒரு பாதுகாப்புக் கவசத்துக்கு இணையானது.  

இன்று,  உலகம் எங்கிலும்,  தடுப்பூசிக்கென இருக்கும் தேவை,  இதை ஈடுகட்டும் வகையிலே,  உற்பத்தி செய்யும் நாடுகள்,  மற்றும் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள்,  மிகவும் குறைவான அளவே விரல்விட்டு எண்ணலாம். சற்று கற்பனை செய்யுங்கள்,  இப்போது நம்மிடத்திலே,  பாரதத்திலே உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் இல்லாதிருந்தால்,  அந்த நிலையில்,  பாரதம் போன்ற பரந்த தேசத்தின் கதி என்னவாகியிருக்கும்!!  

pm modi
pm modi

நீங்கள்,  கடந்த 50-60 ஆண்டு கால சரித்திரத்தை கவனித்தால்,  உங்களுக்கே புரியும்…  பாரதநாடு,  அயல்நாடுகளிடமிருந்து தடுப்பூசிகளைப் பெறுவதிலே,  பல பத்தாண்டுகள் ஆகியிருந்தன. அயல்நாடுகளில் தடுப்பூசிகளுக்கான தேவை நிறைவடைந்தவுடன்,  அப்போதும் கூட,  நமது நாட்டிலே தடுப்பூசி போடும் பணி  தொடங்கப்பட்டுக் கூட இருக்காது. போலியோ தடுப்பூசியாகட்டும்,  small pox….. கிராமத்தில் சின்னம்மை என்பார்கள். சின்னம்மைக்கான தடுப்பூசியாகட்டும்,  ஹெபடைடிஸ் பி தடுப்பூசியாகட்டும்,  இவற்றுக்காக நாட்டுமக்கள் பல பத்தாண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

2014ஆம் ஆண்டிலே,  நாட்டுமக்கள் எனக்கு சேவைபுரிய ஒரு சந்தர்ப்பம் அளித்த போது,  அப்போது பாரதத்திலே,  தடுப்பூசிப் பாதுகாப்பு,  2014ஆம் ஆண்டிலே,  நாட்டிலே தடுப்பூசி பாதுகாப்பு,  வெறும்  வெறும் 60 சதவீத அளவு சுமார் இருந்தது 60 சதவீத அளவு சுமார் இருந்தது.  

எங்களுடைய கண்ணோட்டத்திலே,  இது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருந்தது.   எந்த வேகத்திலே,  பாரதத்தின் தடுப்பூசி போடப்படும் திட்டம் செயல்பட்டு வந்ததோ,  அந்த வேகத்திலே,  தேசம் 100 சதவீத தடுப்பூசி பாதுகாப்பு என்ற இலக்கை எட்டுவதிலே,  கிட்டத்தட்ட 40 ஆண்டுக்காலம் பிடித்திருக்கும்.   நாங்கள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வை ஏற்படுத்தும் முகத்தான்,  மிஷன் இந்திரதனுஷை முடுக்கி விட்டோம்.  

நாங்கள் தீர்மானம் செய்தோம்,  மிஷன் இந்திரதனுஷ் வாயிலாக,  போர்க்கால அடிப்படையில்,  தடுப்பூசி போடப்படும்,  மேலும் தேசத்திலே,  யாருக்கெல்லாம் தடுப்பூசிக்கான தேவை இருக்கிறதோ,  அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  நாங்கள் பேரார்வத்தோடு பணிபுரிந்தோம்.  

மேலும், வெறும், வெறும்,  5-6 ஆண்டுகளுக்குள்ளேயே,  தடுப்பூசிப் பாதுகாப்பு,  60 சதவீதத்திலிருந்து அதிகரித்து,  90 சதவீதத்திற்கும் அதிகமானது. 60லிருந்து 90.  அதாவது,  நாங்கள் தடுப்பூசி போடும் வேகத்தையும் அதிகரித்தோம்,  மேலும்,  எண்ணிக்கையையும் அதிகரித்தோம். நாங்கள் குழந்தைகளை,  பல உயிர் கொல்லும் நோய்களிலிருந்து காப்பாற்றும் வகையிலே,  பல புதிய தடுப்பூசிகளையும் பாரதத்தின் தடுப்பூசி போடும் இயக்கத்தின், அங்கமாக்கினோம். 

இதை ஏன் செய்தோம் என்றால்,  இங்கே நமக்கு,  நமது நாட்டின் குழந்தைகள் பற்றிய அக்கறை இருந்தது.   ஏழைகளின் மீது அக்கறை இருந்தது.   ஏழைகளின் குழந்தைகளின் மீது கரிசனம் இருந்தது,  இவர்களுக்கு என்றைக்குமே,   தடுப்பூசி போடப்பட்டிருக்கவே இருக்காது.  

நாம் 100 சதவீத தடுப்பூசி போடுதல் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வந்த வேளையிலே,  இந்தக் கொரோனா வைரஸானது,  நம்மைச் சூழ்ந்து கொண்டது.   நமது தேசம் மட்டுமல்ல,  உலக நாடுகள் முன்பாக,  மீண்டும் பழைய ஐயப்பாடுகள் சூழத் தொடங்கின,  இப்போது,  பாரதம் எப்படி தன்னுடைய மக்கள் தொகையைக் காக்கப் போகிறாதோ என்று.    

ஆனால் நண்பர்களே,  நோக்கம் நேர்மையாக இருக்கும் பொழுது,  கொள்கை தெளிவாக இருக்கும் பொழுது,  தொடர்ந்து முயற்சிகள் செய்யப்படும் போது,  அப்போது,  நற்பலன்களும் கிடைத்தே தீரும்.  ஒவ்வொரு ஐயப்பாட்டையும்,  புறந்தள்ளிவிட்டு,  பாரத நாடு,  ஓராண்டுக்குள்ளாகவே,  ஒன்றல்ல,  ஆனால் இரண்டு,  இந்தியத் தயாரிப்பு தடுப்பூசிகளை உற்பத்தி செய்தது. 

நம் தேசமானது,  தேசத்தின் விஞ்ஞானிகள்,  என்ன நிரூபித்திருக்கிறார்கள்? அதாவது பாரதம்,  பெரிய பெரிய நாடுகளை விடப் பின்தங்கவில்லை என்பதை. இன்று நான்,  உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில்,  தேசத்திலே,  23 கோடிக்கும் அதிக அளவு டோஸ்கள்,  போடப் பட்டாகி விட்டது.  23 கோடி. 

நண்பர்களே, நம் நாட்டிலே கூறப்படுவதுண்டு – விஸ்வாஸேன,  சித்தி:.  விஸ்வாஸேன சித்தி:.   அதாவது, நமது முயற்சிகளில் நமக்கு,  வெற்றி எப்போது கிடைக்கிறது என்றால்,  எப்போது நாம்,  நம்மை நம்புகிறோமோ அப்போது தான்.    நமக்கு முழு நம்பிக்கை இருந்தது,  அதாவது நமது விஞ்ஞானிகள்,  மிகக்குறைவான காலத்திலே,  தடுப்பூசி தயாரிக்கும் பணியில் வெற்றி பெறுவார்கள் என்று.  

இந்த நம்பிக்கையால் தெம்படைந்த,  நமது விஞ்ஞானிகள்,  தங்களுடைய ஆய்வுப் பணிகளைச் செய்து வந்த அப்போது,  நாம் இன்னும் பல முன்முயற்சிகளைத் தொடங்கி விட்டிருந்தோம்.   உங்கள் அனைவருக்கும்,  நன்றாகவே தெரிந்திருக்கும்,  கடந்த ஆண்டிலே அதாவது ஓராண்டு முன்பாக,  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலே,  கொரோனாவின் சில ஆயிரம் கேஸ்கள் மட்டுமே இருந்த போது,  அந்த நேரத்திலேயே,  தடுப்பூசி பணிக்குழு அமைக்கப்பட்டாகி விட்டிருந்தது.  

பாரதத்திலே,  பாரதத்திற்காக,  தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு,  அரசாங்கம் அனைத்து விதமான ஆதரவையும் அளித்தது.   தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு,  மருத்துவப் பரிசோதனைக்கான உதவியும் செய்யப்பட்டது. ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கென தேவையான நிதி அளிக்கப்பட்டது. அனைத்து நிலைகளிலும்,  அரசாங்கம்,  அவர்களோடு தோளோடு தோள் நின்று உடன் பயணித்தது. 

தற்சார்பு பாரதம் பேக்கேஜின்படி,  மிஷன் கோவிட் பாதுகாப்பு வாயிலாகவும்,  அவர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. கடந்த பல காலமாகவே,  தேசம், தொடர்ச்சியாக செய்து வரும் முயற்சி மற்றும் உழைப்பு,  இவை காரணமாக,  இனிவரும் நாட்களில், தடுப்பூசி உற்பத்தி,  மேலும் அதிகப்பட இருக்கிறது. இன்று தேசத்திலே,  ஏழு நிறுவனங்கள்,  பலவகையான தடுப்பூசித் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.  மேலும் 3 தடுப்பூசிகளின் பரிசோதனைகளும்,  மிக முன்னேறிய கட்டத்தை எட்டியிருக்கின்றன.  

தடுப்பூசிகளின் இருப்பை அதிகரிக்க வேண்டி,  பிற நாடுகளின் நிறுவனங்களோடும் கூட,  தடுப்பூசி வாங்கும் செயல்பாட்டையும்,  விரைவுபடுத்தி இருக்கிறோம். 

இப்போது இன்றைய காலகட்டத்தில்,  வல்லுனர்கள் வாயிலாக,  நமது குழந்தைகள் தொடர்பான,  கவலையும் தெரிவிக்கப் பட்டது.   இந்த திசையிலும் கூட,  இரண்டு தடுப்பூசிகளுக்கான பரிசோதனைகள்,  விரைவாக நடந்து வருகிறது. 

இவற்றைத் தவிர,  இப்போது தேசத்திலே,  ஒரு…. நேஸல் வேக்ஸின்,  நாசிவழித் தடுப்பூசி மீதான ஆய்வும் நடந்து வருகிறது.   இதை,  ஊசி வழியாகச் செலுத்தாமல்,  மூக்கிலே ஸ்ப்ரே செய்யப்படும்.     தேசத்திற்கு ஒருவேளை,  அண்மை வருங்காலத்திலே,  இந்தத் தடுப்பூசியில் வெற்றி கிடைத்தால்,  இதனால் பாரதத்தின் தடுப்பூசி இயக்கத்திலே,  மேலும் அதிக விரைவு கூட்டப்படும். 

நண்பர்களே,  இத்தனை குறைவான காலத்திலே,  தடுப்பூசிகள் தயாரிப்பது,  என்பதே கூட  மனித சமுதாயம் முழுமையினுடைய,  மிகப்பெரிய சாதனையாகும். ஆனால் இதற்கென,  சில எல்லைகளும் உண்டு.   தடுப்பூசி தயாரிக்கப்பட்ட பிறகும் கூட,  உலகின் வெகுசில நாடுகளில் மட்டுமே,  தடுப்பூசி போடப்பட்டது. 

பெரும்பாலும் பார்த்தால்,  வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே தொடங்கியிருக்கிறது.   WHOவானது,  தடுப்பூசி தொடர்பாக,  வழிமுறைகளை அளித்திருக்கிறது.   விஞ்ஞானிகளும்,  விஞ்ஞானிகளும் கூட தடுப்பூசிக்கான வரையறைகளை அளித்தார்கள்.   பாரதமும் கூட,  பிற நாடுகளின் சிறப்பான வழிமுறைகளை,  உலக சுகாதார நிறுவனம் WHOவின் வழிகாட்டுதல்படி,  இதனை அடியொற்றியே,  படிப்படியான முறையில் தடுப்பூசி போடுவதை தீர்மானித்தது.

மத்திய அரசானது, மாநில முதலமைச்சர்களோடு நடைபெற்ற அநேக கூட்டங்களில் பெற்ற ஆலோசனைகளையும்,   அவற்றின் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் அளித்த ஆலோசனைகளையும்,  அனைத்தையும் கருத்தில் கொண்டது.   இதன் பிறகே,  என்ன தீர்மானிக்கப்பட்டதென்றால்,  யாருக்கெல்லாம்,  கொரோனாவால் அதிக அபாயம் இருக்கிறதோ,  அவர்களுக்கு முதன்மை அளிக்கப்படும்.

ஆகையால் தான்,  சுகாதாரப் பணியாளர்கள்,  முன்களப் பணியாளர்கள்,  60 வயதுக்கு அதிகமான குடிமக்கள்,  நோய்கள் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள்,  இவர்கள் அனைவருக்கும்,  முதலில் தடுப்பூசி போடப்படுவது தொடங்கப்பட்டது.  சற்றே நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்.  ஒருவேளை,  கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முன்பாக,  நம்முடைய முன்னணிப் பணியாளர்களுக்கு,  தடுப்பூசி போடப்படவில்லை என்றால்,  என்ன ஆகியிருக்கும்!!   சிந்தியுங்கள்!!  

நமது மருத்துவர்கள்,  செவிலியர்களுக்கெல்லாம்,  தடுப்பூசி போடாமல் இருந்தால்,  என்ன ஆகியிருக்கும்!!!   மருத்துவ மனைகளில் துப்புரவுப் பணி செய்யும் நமது சகோதர சகோதரிகளுக்கு,  அவசர வாகன ஓட்டுநர்களான நமது சகோதரர்களுக்குத் தடுப்பூசி போடப்படாமல் இருந்தால்,  என்ன ஆகியிருக்கும்!!   அதிக அளவிலே நமது சுகாதாரப் பணியாளர்களுக்கு,  தடுப்பூசி போடப்பட்ட காரணத்தினால் மட்டுமே,  அவர்கள் கவலைப்படாமல்,  மற்றவர்களுக்கு சேவை புரிய முடிந்தது,  இலட்சக்கணக்கான நாட்டுமக்களைக் காத்தளிக்க முடிந்தது.

ஆனால்,  தேசத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்புக்களுக்கு இடையே,  மத்திய அரசின் முன்பாக,  பலவகையான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.   பல்வேறு கோரிக்கைகள் கோரப்பட்டன.   வினாக்கள் எழுப்பப்பட்டன.  அனைத்தையும் ஏன் பாரத அரசே தீர்மானிக்க வேண்டும்,  மாநில அரசுகளுக்கு ஏன் அனுமதி அளிக்கப்படவில்லை,   மாநில அரசுகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு ஏன் அளிக்கப் பட வில்லை,  ஒரே அளவு,  அனைவருக்கும் பொருந்தி வராது.   இப்படியெல்லாம் பேசப்பட்டன.  

காரணம் என்ன தரப்பட்டதென்றால்,  அரசியலமைப்புச் சட்டத்திலே,  இதிலே health, அதாவது சுகாதாரம்,  முதன்மையாக மாநில அரசுகளின் பொறுப்பு.   ஆகையால் அனைத்தையும், மாநிலங்களே செய்வது நல்லதென்றார்கள்.   ஆகையால்,  இந்தத் திசையில்,  ஒரு தொடக்கம் மேற்கொள்ளப்பட்டது.   பாரத அரசாங்கம்,  ஒரு விரிவான வழிகாட்டுதலை ஏற்படுத்தி மாநிலங்களுக்கு அளித்தது.  

இதனால் மாநிலங்களால்,  தங்கள் வசதிகள் தேவைகளுக்கு ஏற்ப,  பணியாற்ற இயலும்.   வட்டார அளவிலே,  கொரோனா ஊரடங்கு போடுவதாகட்டும்,  நுண்கட்டுப்பாடுப் பகுதிகள் அமைப்ப தாகட்டும்,  சிகிச்சை தொடர்பான அமைப்புகளாகட்டும்,  மத்திய அரசானது,  மாநில அரசுகளுடைய இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது.  

நண்பர்களே,  இந்த ஆண்டு,  ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி,  ஏப்ரல் மாத இறுதி வரை,  பாரதத்தின் தடுப்பூசி இயக்கம்,  முக்கியமாக,  மத்திய அரசின் கண்காணிப்பிலேயே நடைபெற்றது.   அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடும் பாதையிலே,  தேசம் முன்னேறிக் கொண்டிருந்தது.   தேசத்தின் குடிமக்களும் கூட,  ஒழுங்குமுறையைப் பின்பற்றியவாறு,  தங்களுடைய முறை வந்த போது,  தடுப்பூசி போட்டுக் கொண்டு வந்தார்கள்.  

இதற்கிடையிலே,  பல மாநில அரசுகள் மீண்டும் கோரினார்கள்,  இந்த தடுப்பூசி போடும் பணியை,  பிரித்தளிக்க வேண்டும்.   மாநிலங்களிடம் விட்டு விட வேண்டும்.   பலவிதமான குரல்கள் எழுந்தன.    உதாரணமாக,  தடுப்பூசி போடப்பட,  ஏன் வயது வரம்பு விதிக்கப்படுகிறது?   வேறொரு புறத்தில் சொன்னார்கள்,  வயது வரம்பை ஏன்,  மத்திய அரசே முடிவெடுக்க வேண்டும்?    

எழுந்த குரல்களில் சில எப்படி என்றால்,  முதியவர்களுக்கு ஏன் முதலில் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்?   பலவகையான அழுத்தங்கள் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டன.   தேசத்தின் ஊடகத்துறையின் ஒரு பிரிவினர்,  இதை ஒரு இயக்கமாகவே பரப்பினார்கள்?  

நண்பர்களே கணிசமான ஆலோசனைகளுக்குப் பிறகு தான்,  மாநில அரசுகள்,  தங்கள் தரப்பில் முயற்சிகள் செய்ய விரும்பினார்கள் என்றால்,  பாரத அரசுக்கு இதில் என்ன ஆட்சேபணை இருக்க வேண்டும்?   பாரத அரசு ஏன் ஆட்சேபம் தெரிவிக்கப் போகிறது?  

மாநிலங்களின் இந்தக் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு,  அவர்களின் இந்தக் கோரிக்கையைக் கவனத்தில் கொண்டு,  ஜனவரி 16 முதல் செயல்பட்டு வந்த வழிமுறையில், இதிலே,  பரீட்சார்த்தமாக,  ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.   நாங்கள் என்ன நினைத்தோம் என்றால்,  மாநிலங்களின் கோரிக்கை இப்படி இருக்கும் போது,  அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்,  அதற்கேற்பவே,  25 சதவீத வேலையை,  அவர்களே செய்யட்டும்,  அவர்களுக்கே அளிக்கப்படட்டும்,  அப்படியே செய்தோம். 

மே மாத ஒன்று முதல்,  மாநிலங்களுக்கு,  25 சதவீதப் பணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.   இதை நிறைவேற்ற,  அவர்கள் தத்தம் வழிகளில் முயற்சிகளும் மேற்கொண்டார்கள். இத்தனை பெரிய பணியிலே,  எத்தனை சிரமங்கள் ஏற்படும் என்று,  அவர்களுக்கும் புரிய ஆரம்பித்தது,  தெரிந்து கொண்டார்கள்.   உலகம் முழுவதிலும்,  தடுப்பூசிகள் நிலைமை என்ன,  இந்த நிதர்சனமான உண்மையையும்,  மாநிலங்கள் தெரிந்து கொண்டன. 

நாம் ஒன்றை கவனிக்கலாம்,  ஒருபுறம் மே மாதத்தில்,  இரண்டாவது அலை,  இன்னொரு புறம்,  தடுப்பூசி போட்டுக் கொள்ள அதிகரிக்கும் மக்களின் ஆர்வம்.   மூன்றாவது புறத்திலோ,  மாநிலங்களின் சிரமங்கள்.  மே மாதத்தில் இரு வாரங்கள் கழிவதற்குள்ளாக,  சில மாநிலங்கள்,  வெளிப்படையாகவே கூறத் தொடங்கினார்கள்,  முதலில் இருந்த முறையே நன்றாக இருந்தது என்று.  

மெல்ல மெல்ல இதில் மேலும் சில மாநில அரசுகள்  இணையத் தொடங்கின.  தடுப்பூசிப் பணியை,  மாநிலங்களிடம் விட்டு விடலாம்  என்ற தரப்பில் கோரியவர்கள்,  அவர்களின் கருத்திலும் மாற்றம் ஏற்பட்டது.   ஒரு நல்ல விஷயம் என்ன என்றால்,  குறைந்த நேரத்திலேயே,  மாநிலங்கள்,  மறுபரிசீலனை கோரிக்கையை முன்னெடுத்து,  மீண்டும் வந்தார்கள்.   மாநிலங்களின் இந்தக் கோரிக்கையை,  நாங்களும் சிந்தித்தோம்.   நாட்டு மக்களுக்கு சிரமங்கள் ஏற்படக்கூடாது,  நல்லவிதமாக தடுப்பூசி போடப்பட வேண்டும்,  இதன் பொருட்டு,  மே ஒன்றுக்கு முந்தைய நிலைப்படி அதாவது மே ஒன்றுக்கு முன்பாக 16 ஜனவரி முதல்,  ஏப்ரல் முடிவு வரை இந்த வழிமுறையை,  முந்தைய பழைய வழிமுறையை,  மீண்டும் அமல் செய்வோம். 

நண்பர்களே,  இன்று,  என்ன தீர்மானிக்கப் பட்டிருக்கிறது என்றால்,  அதாவது மாநிலங்களிடத்தில்,  தடுப்பூசி தொடர்பாக, இருந்த 25 சதவீதப் பணி,  இதன் பொறுப்பையுமே கூட,  பாரத அரசே மேற்கொள்ளும்.    இந்த வழிமுறை,  வரவிருக்கும் 2 வாரக்காலத்தில்,  அமல் படுத்தப்படும்.   இந்த இரண்டு வாரங்களில்,  மத்திய மாநில அரசுகள் இணைந்து,  புதிய நெறிமுறைகளின்படி,  தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்.  

தற்செயல் நிகழ்வாக,  இரண்டு வாரங்கள் கழித்து,  ஜூன் 21 அன்று சர்வதேச யோகக்கலை தினமும் ஆகும்.   ஜூன் மாதம் 21 முதல்,  தேசத்தின் அனைத்து மாநிலங்களிலும்,  18 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய,  அனைத்துக் குடிமக்களுக்கும்,  பாரத அரசு,  மாநிலங்களுக்கு,  இலவசமாக தடுப்பூசியை அளிக்கும்.   தடுப்பூசி தயாரிப்பாளர்களிடத்திலே,  மொத்த தடுப்பூசி உற்பத்தியின்,  75 சதவீத பங்கினை,  பாரத அரசாங்கம்,  தானே கொள்முதல் செய்து,  மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கும். 

அதாவது தேசத்தின் எந்த ஒரு மாநில அரசுக்கும்,  தடுப்பூசி தொடர்பான,  எந்த ஒரு செலவையும் ஏற்கத் தேவை இருக்காது. இதுவரை,  தேசத்தின் கோடிக்கணக்கான மக்களுக்கு,  இலவச தடுப்பூசி கிடைத்திருக்கிறது. இப்போது,  18 வயது நிரம்பிய குடிமக்களும்,  இதிலே,  இணைக்கப்படுவார்கள். 

அனைத்துக் குடிமக்களுக்கும்,  பாரத அரசாங்கம்,  இலவசமாக தடுப்பூசியை,  கண்டிப்பாக வழங்கும்.  ஏழையாகட்டும்,  கீழ் மத்திய தட்டாகட்டும்,  மத்தியத் தட்டாகட்டும்,  உயர் தட்டாகட்டும்,  பாரத அரசின் இந்த இயக்கத்திலே,  இலவசமாகவே தடுப்பூசி போடப்படும்.   ஆம்,  எந்த நபர்,  இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பவில்லையோ,  தனியார் மருத்துவமனையில் போட்டுக் கொள்ள விரும்பினால்,  அவர்களும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். 

தேசத்திலே,  தயாரிக்கப்படும் தடுப்பூசிகளின்  25 சதவீதம்,  தனியார் மருத்துவமனைகள்,  நேரடியாகப் பெற்றுக் கொள்ளும்  வழிவகையும் செய்யப்பட்டிருக்கிறது.   தனியார் மருத்துவ மனைகள்,  தடுப்பூசிக்கு விதிக்கப்பட்ட விலைக்கு மேலே,  ஒரு டோஸுக்கு,  அதிகபட்சமாக,  150 ரூபாய் மட்டுமே,  சேவைக் கட்டணமாகப் பெற முடியும்.   இதனைக் கண்காணிக்கும் பொறுப்பு,  மாநில அரசுகளிடமே இருக்கும். 

நண்பர்களே,  நமது சாத்திரங்களில் என்ன கூறப் பட்டிருக்கிற தென்றால்,  25.14 प्राप्यआपदंन व्यथतेकदाचित्, उद्योगम्अनु इच्छतिचाप्रमत्तः॥ – அதாவது, வெற்றியாளர்கள்,  சங்கடங்கள் வரும் வேளையில் துவண்டு போய் தோல்வியை ஏற்க மாட்டார்கள்.  மாறாக, முயற்சி செய்வார்கள், மேலும் உழைப்பார்கள்.  மேலும் சூழ்நிலைகளை, சிறப்பாக வெற்றி கொள்வார்கள். 

கொரோனாவுடனான இந்தப் போரில், 130 கோடிக்கும் அதிகமான நாட்டுமக்கள், இதுவரை மேற்கொண்ட பயணம், பரஸ்பர ஒத்துழைப்பால், இரவு பகல் உழைப்பாலேயே தீர்மானித்தார்கள்.  இனிமேயும் கூட, நமது பாதை, நமது உழைப்பு, மற்றும் ஒத்துழைப்பால் மட்டுமே இது மேலும் பலமடையும்.  நாம் தடுப்பூசியை அடைவதற்கான வேகத்தையும் அதிகரிப்போம், மேலும், தடுப்பூசி இயக்கத்துக்கும் விரைவு கூட்டுவோம். 

நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். பாரதத்தின் தடுப்பூசி இயக்கத்தின் வேகம், இன்றும் கூட, உலகில் மிக வேகம் உடையது, பல வளர்ந்த நாடுகளை விடவும் விரைவானது.  நாம், ஏற்படுத்தியிருக்கும் தொழில்நுட்ப தளமான, கோவின், இதைப் பற்றியும் உலகெங்கும் விவாதிக்கப்பட்டு வருகிறது.  

பல நாடுகள், பாரதத்தின் இந்தத் தளத்தைப் பயன்படுத்தும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றன.   நாமனைவரும் கவனித்து வருகிறோம், தடுப்பூசியின் ஒவ்வொரு டோசும், எத்தனை மகத்துவம் வாய்ந்தது,  ஒவ்வொரு டோசுடனும், ஒரு உயிர் இணைந்திருக்கிறது.

மத்திய அரசாங்கம், ஒரு வழிமுறையை ஏற்படுத்தி இருக்கிறது, அதாவது ஒவ்வொரு மாநில அரசுக்கும், சில வாரங்கள் முன்னதாகவே அவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.  அதாவது எப்போது, எத்தனை தடுப்பூசிகள் அளிக்கப்படும் என்ற தகவல்.  மனித சமூகத்தின்,  இந்தப் புனிதமான பணியில், வீண் வாதங்களும், இதை வைத்து அரசியல் செய்வதையும்….. இதை யாருமே, யாருமே நல்லதாகக் கருத மாட்டார்கள். 

தடுப்பூசி இருப்புக்கு ஏற்ற வகையிலே, முழுமையான ஒழுங்குமுறையோடு, தடுப்பூசிகளைப் போட்டு வருவோம்,  தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும்,  கொண்டு சேர்க்க வேண்டும்,  இது அனைத்து அரசுகளின், அனைத்து மக்கள் பிரதிநிதிகளின்,  அனைத்து நிர்வாகத்தினருடைய சமூகக் கடமை. 

பிரியமான நாட்டுமக்களே,  தடுப்பூசியைத் தவிர, இன்று மேலும் ஒரு பெரிய தீர்மானத்தைப் பற்றி, நான் இதுபற்றி உங்களுடன், பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கடந்த ஆண்டு, கொரோனா காரணத்தால், ஊரடங்கு  போடப்பட்ட போது, பிரதம மந்திரி ஏழைகள் நலனுக்கான, உணவுத் திட்டத்திற்கு உட்பட்டு,  8 மாத காலம் வரை, 80 கோடிக்கும் அதிகமான நாட்டு மக்களுக்கு, இலவசமாக ரேஷன் பொருட்கள், விநியோகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டும் கூட, இரண்டாவது அலை காரணமாக, மே மற்றும் ஜூன் மாதங்களுக்கும்,  இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.  

இன்று அரசாங்கம் என்ன தீர்மானித்திருக்கிறது என்றால், பிரதம மந்திரி ஏழைகள் நலனுக்கான உணவுத் திட்டத்தினை, இப்போது, தீபாவளி வரை,  நீட்டித்து வழங்க வேண்டும் என்பதை.   பெருந் தொற்று நிலவும் இந்த வேளையிலே,  அரசாங்கம், ஏழைகளின் ஒவ்வொரு தேவையோடு, அவர்களுக்குப் பக்கபலமாக விளங்குகிறது.  

அதாவது, நவம்பர் மாதம் வரை, 80 கோடிக்கும் மேற்பட்ட நாட்டுமக்களுக்கு, ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட அளவு இலவசமாக உணவுப் பொருள் வழங்கப்படும்.   இந்த முயற்சிக்கான நோக்கம் என்னவென்றால், நம் நாட்டின் எந்த ஒரு ஏழை சகோதர சகோதரியோ,, அவர்களுடைய குடும்பத்தாரோ, பட்டினி கிடக்கக் கூடாது என்பதே. 

நண்பர்களே,  தேசத்தில் நடைபெற்று வரும், இந்த முயற்சிகளுக்கு இடையே, பல துறைகளில் தடுப்பூசிகள் தொடர்பாக, பிரமையும் வதந்திகளும் பரப்பப்படுவது, கவலையை அதிகரிக்கிறது.  மேலும் ஒரு கவலையை, நான் உங்களிடம் வெளிப்படுத்த விரும்புகிறேன். 

பாரதம் தடுப்பூசி தயாரிப்புப் பணியைத் தொடங்கியது முதல், அப்போதிலிருந்து, சில நபர்கள் வாயிலாக, பரப்பப்பட்ட விஷயங்கள், இவற்றின் காரணமாக, பொதுமக்கள் மனதிலே ஐயப்பாடுகளை எழுப்பின. மேலும் செய்யப்பட்ட ஒரு முயற்சி, பாரதத்தின் தடுப்பூசி தயாரிப்பாளர்களின், மன உறுதியைக் குலைக்கவும்,  அவர்கள் முன்பாக,  பலவகையான தடைகளை ஏற்படுத்தவும் செய்யப்பட்டது.

பாரதம் தடுப்பூசியை வெளியிட்ட போது, பல வழிகளிலே, சந்தேகங்கள் ஐயப்பாடுகள் மேலும் பெரிதாக்கப்பட்டன.  தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருக்க, வகைவகையான விதண்டாவாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

இவர்களையும்,  தேசம் பார்த்துக் கொண்டு வருகிறது.  யாரெல்லாம், தடுப்பூசி குறித்து, ஐயப்பாடுகளை ஏற்படுத்து கிறார்கள்,  வதந்திகளைப் பரப்புகிறார்களோ, அவர்கள், கள்ளம் கபடமில்லாத சகோதர சகோதரிகளின் வாழ்க்கையோடு, மிகப்பெரிய வினையை விளையாடுகிறார்கள். இப்படிப்பட்ட வதந்திகளிடத்தில், நாம் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம்.  

நானும் கூட, உங்கள் அனைவரிடத்திலும், சமூகத்தின் விழிப்புணர்வுடையோரிடத்தில், இளைஞர்களிடத்தில், வேண்டுகோள் விடுக்கிறேன்…  அதாவது நீங்கள், அனைவரும் தடுப்பூசி தொடர்பான,  விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஒத்துழைப்பு தாருங்கள்.  

இப்போது பல இடங்களில், கொரோனா ஊரடங்களில், தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இதனால் நம்மிடையே இருந்து, கொரோனா மறைந்து விட்டது, என்பது பொருளல்ல.  நாம், முன்னெச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்,  மேலும், கொரோனாவிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் விதிமுறைகளையும், தீவிரமாகப் பின்பற்றி வர வேண்டும்.  

எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது,  நாமனைவரும், கொரோனாவை, இந்தப் போரிலே வெற்றி கொள்வோம்,  பாரதம், கொரோனாவை வெற்றி கொள்ளும்.   இந்த நல்விருப்பங்களோடு, நாட்டுமக்கள் அனைவருக்கும்,  பலப்பல நன்றிகள்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்! தமிழாக்கம்: கு.வை.பாலசுப்பிரமணியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe