
தைப்பூசத்தையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் இருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை மாலை சீர் வரிசைப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன.
ஸ்ரீரங்கம் அரங்கநாதரும், சமயபுரம் மாரியம்மனும் அண்ணன் தங்கை உறவுமுறை கொண்டவா்கள். இதையொட்டி ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் கொள்ளிடம் வடக்கு வாசலுக்கு வரும் சமயபுரம் மாரியம்மன் தீா்த்தவாரி கண்டருளி எழுந்தருளுவார். அப்போது அண்ணன் அரங்கநாதர் பட்டுப்புடவை, வளையல், பழங்கள், மஞ்சள் கயிறு, மாலைகள் உள்ளிட்ட மங்களப்பொருள்களை மேளதாளத்துடன் எடுத்துச் சென்று சமயபுரம் மாரியம்மனுக்கு கொடுப்பது வழக்கம்.
நிகழாண்டில் கொரோனா பரவலால் ஸ்ரீரங்கம் வடக்குவாசல் கொள்ளிடக்கரைக்கு சமயபுரம் மாரியம்மன் வரவில்லை.
மேலும் கோயில் நடைகள் சாத்தப்பட்டிருப்பதால் தைப்பூசத்தன்று வழங்கும் சீா்வரிசைகளை செவ்வாய்க்கிழமை மாலை ஸ்ரீரங்க விலாச மண்டபத்தில் வைத்து யானை ஆண்டாள், மேளதாளத்துடன்
கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து, உதவி ஆணையா் கந்தசாமி, கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டர் மற்றும் கோயில் பணியாளா்கள் ரெங்கா கோபுரம் வரை ஊா்வலமாக எடுத்து வந்தனர். பின்னா் சமயபுரம் கோயிலுக்குச் சீா்வரிசைகளைக் கொண்டு சென்று, கோயில் இணை ஆணையர் செல்வராஜிடம் முறைப்படி அளித்தனர்.