தண்ணீர் பீச்சுவதற்கு பக்தர்கள் பயன்படுத்தப்படும் பிரஸர் பம்ப் காரணமாக அழகர் சிலையில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அழகர் கோவில் பாலாஜி பட்டர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதியின்றி கோயில் வளாகத்திலேயே நடைபெற்ற மதுரை சித்திரை திருவிழா இந்தாண்டு கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
கோவில் நகரமான மதுரையில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவானது மதுரை மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்ற ஒன்றாகும்.
சித்திரை திருவிழாவில் மதுரை வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளல் நிகழ்வானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
இந்த நிகழ்வில் கள்ளழகர் தங்கக்குதிரை மீது அமர்ந்தபடி காட்சியளிப்பார். இந்நிகழ்வு வருகிற ஏப்ரல் 16 ஆம் தேதி மதுரை வைகை ஆற்றங்கரையில் நடைபெற இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா நடைபெறும் காரணத்தால் வழக்கத்தை விட பக்தர்க்ள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் போது காலங்காலமாக பக்தர்கள் விசிறி வீசியும், கள்ளழகரை போல் வேடமணிந்து தண்ணீர் பீச்சியும், திரி எடுத்தும், சக்கரை தீபம் ஏற்றியும் வரவேற்று வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம்.
இதில் தண்ணீர் பீச்சும் வேண்டுதலின் தவறான வழிமுறைகள் காரணமாக அழகர் சிலையில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அழகருடன் தங்கக்குதிரையில் வரும் பாலாஜி பட்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கள்ளழகர் கோவிலின் பாலாஜி பட்டர் கூறுகையில், காலங்காலமாக மதுரைக்கு தங்கக்குதிரையில் வரும் கள்ளழகரை பக்தர்கள் தண்ணீர் பீச்சி வரவேற்பது வழக்கம்.
தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக தற்போது தண்ணீர் பீச்சும் பக்தர்களில் பெரும்பாலானோர் பாரம்பரிய துருத்திப் பைக்கு பதிலாக பிரஸர் பம்ப் பயன்படுத்தி தண்ணீர் பீச்சுகின்றனர். தங்கக்குதிரையில் வரும் அழகர் சிலையானது மன்னர் காலத்துத் தொன்மையுடையது.
பிரஸர் பம்ப் பயன்படுத்தி தண்ணீர் பீச்சி அடிப்பதன் மூலம் அழகர் சிலையில் சேதம் ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
மேலும் அழகருக்கு அனுவிக்கப்படும் தங்க ஆபரணங்களிலும் சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பக்தர்கள் பாரம்பரிய துருத்திப் பை பயன்படுத்தி தண்ணீர் பீச்சுவதே புண்ணியத்துக்குரிய வேண்டுதல்கள் ஆகும்.
பிரஸர் பம்ப் பயன்படுத்துவது சிறிதளவும் சரியில்லை. இது கள்ளழகர் சிலையின் பாதுகாப்புக்கே குந்தகம் விளைவிக்கும் செயல் என கூறினார்.
மேலும் அனைவரும் பாரம்பரிய துருத்திப் பை பயன்படுத்தி தண்ணீர் பீச்சும் படி பக்தர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.