
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போரிட்டு உயிர் நீத்த கோவையைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு, மேகாலயா மாநிலத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடபெருமாள். ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர். இவரது 4-வது மகன் கண்ணாளன் கென்னடி. இவர், பத்தாம் வகுப்பு படித்து முடித்தவுடன் கடந்த 1985-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சிப்பாயாக பணியில் சேர்ந்தார்.
குன்னூரில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் பயிற்சி முடித்த இவர், 25-வது மெட்ராஸ் ரெஜிமென்ட் ‘டெக்கான் டெவில்ஸ்’ ட்ரூப்பில் இணைந்து ராணுவ வீரராக பணியை தொடங்கினார்.
பணியில் சேர்ந்த சில ஆண்டுகளுக்கு பின்னர், ‘நாயக்’ தரத்தை பெற்றார். திருவனந்தபுரம், மேகாலயா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றிய நாயக் கண்ணாளன் கென்னடி, இறுதியாக ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றி வந்தார்.
கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ம் தேதி, இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவினர். அப்போது சிறிது நேரத்துக்கு முன்னர் பணியை முடித்துவிட்டு, முகாமுக்கு திரும்பிய கண்ணாளன் கென்னடிக்கு இதுகுறித்த தகவல் கிடைத்தது.
இதையடுத்து தன்னுடன் இருந்த ஒரு சிப்பாயுடன் இணைந்து தீவிரவாதிகளை தேடிச் சென்றார். தீவிரவாதிகளை நேருக்கு நேராக சந்தித்த அவர், இரண்டு பேரை சுட்டுக் கொன்றார்.
மற்றவர்களை தேடிச் சென்றபோது பனிக்குழியில் அவரது கால் சிக்கியது. அந்த சமயத்தில் தீவிரவாதிகள் சுட்டதில் நாயக் கண்ணாளன் கென்னடி வீர மரணம் அடைந்தார்.

28 வயதில் நாட்டுக்காக செய்த தியாகத்தை போற்றும் வகையில், ‘நாயக்’ கண்ணாளன் கென்னடிக்கு, கடந்த 1994-ம் ஆண்டு ராணுவத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘கீர்த்தி சக்ரா’ விருது வழங்கப்பட்டது. இதை அவரது பெற்றோர் பெற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, கோவை நாயக்கன்பாளையத்தில் ‘நாயக்’ கண்ணாளன் கென்னடி நினைவாக அவரது குடும்பத்தினர் சார்பில் நினைவாலயம் அமைக்கப்பட்டது.
இங்கு அவரது புகைப்படம், அவர் பயன்படுத்திய பொருட்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன.
இங்கு ஒவ்வோர் ஆண்டும் அவரது நினைவு நாளில், ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராணுவத்தில் கண்ணாளன் கென்னடியின் சேவையைப் போற்றும் வகையில், அவருக்கு மேகாலயா மாநிலத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கண்ணாளன் கென்னடியின் சகோதரர் அண்ணாதுரை கூறும்போது, ”25-வது மெட்ராஸ் ரெஜிமென்ட் ‘டெக்கான் டெவில்ஸ்’ ட்ரூப் சார்பில், கண்ணாளன் கென்னடியின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது டெக்கான் டெவில்ஸ் ட்ரூப் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ளது. எனவே, அவர்கள் முடிவு எடுத்தபடி, ஷில்லாங்கில் உள்ள தங்களது ட்ரூப் வளாகத்தில் கண்ணாளன் கென்னடியின் மார்பளவு கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 24-ம் தேதி இந்த சிலை திறக்கப்பட்டது. இந்த விழாவில், ராணுவத்தினரின் அழைப்பின் பேரில், நாங்கள் கலந்து கொண்டோம்.
25 மெட்ராஸ் ரெஜிமென்ட் ‘டெக்கான் டெவில்ஸ்’ ட்ரூப் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த சிலை உடன் எடுத்துச் செல்லப்படும். அதற்கேற்ப நகர்த்திக் கொள்ளும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.