
காட்டுமன்னார்கோவில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பெண்ணின் வயிற்றில், அடையாளம் தெரியாத மர்மப்பொருள் ஒன்று வைக்கப்பட்டதாக, காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே மாதர் சூடாமணி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் கர்ப்பப்பையில் கோளாறு ஏற்பட்டதால் கடந்த பல மாதங்களுக்கு முன்பு காட்டுமன்னார்கோவிலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில நாட்கள் சிகிச்சைக்கு பின் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
அறுவை சிகிச்சை முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு அவருக்கு வயிற்றில் தொடர்ச்சியாக வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் கள்ளக்குறிச்சியில் உள்ள மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது வயிற்றினுள்ளே வெள்ளை நிறத்திலான ஏதோ ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் தனக்கு அறுவை சிகிச்சை செய்த காட்டுமன்னார்கோவிலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் அறிக்கையை கொடுத்து இதுகுறித்து முறையிட்டார்.
மருத்துவமனை தரப்பில் இருந்து முன்னுக்குப்பின் முறையாக பதில் தெரிவிக்காமல் முரணாக பதில் அளித்தனராம். இதனால் ஆத்திரமடைந்த கலைச்செல்வி இது குறித்து காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.