மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி உயிரிழந்தது. காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து யானை உயிரிழந்ததாக கூறப்பட்டது.
புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி இன்று (நவ.30) அதிகாலை உயிரிழந்தது. நடைப்பயிற்சிக்காக ஈஸ்வரன் கோவில் அருகே சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக யானைப் பாகன் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானை லட்சுமியின் இதயத்தில் ஏதேனும் கோளாறு இருந்திருக்கலாம் என உடலை ஆய்வுக்காக அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை வந்தது. தற்போது லட்சுமிக்கு 32 வயது ஆகிறது. இந்நிலையில் அன்பர்கள் பலரும் யானையின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்ட இரங்கல் செய்தியில்…
நம் புதுவையில் அருள்மிகு மணக்குள விநாயகரை தொழ வருபவர்களின் தோழியான லட்சுமி யானை இன்று இல்லை என்று நினைத்து வருந்துகிறேன். மணக்குள விநாயகர் திருக்கோவிலுக்கு வருபவர்களிடம் தோழியாக, சகோதரியாக ஆசிர்வாதம் செய்தது இன்னும் மனக்கண்ணில் நிழலாடுகிறது.
மணக்குள விநாயகர் தேர் வரும்போது தேர் போன்றே கம்பீரமாக அந்த பிரகாரத்தில் தேரை வழிநடத்தி செல்வாள். எங்களை எப்படி தேற்றிக் கொள்வதே என்று தெரியவில்லை. லட்சுமி யானையை இழந்து வாடும் புதுவை மக்களுக்கும்,வெளியூரிலிருந்து வந்து அன்போடு அவளிடம் பழகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்.