
விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் ஜெகதீஷின் மகன் பிரபஞ்சன இன்று வெளிவந்த NEET தேர்வு முடிவில் 720/720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார்.
நீட் தேர்வு முடிவுகளை அறிய… லிங்க்: https://testservices.nic.in/resultservices/neet-2023-auth
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக மற்றும் ஆந்திர மாணவர்கள் முதலிடத்தையும், தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர், பட்டியலில் முதல் 10 இடங்களிலும் இடம் பிடித்துள்ளனர்.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுதும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை கடந்த மாதம் 7 ம் தேதி 13 மொழிகளில் நடத்தியது. 499 நகரங்களில் நடைபெற்ற தேர்வில் 20.38 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் 11,45,976 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வை 30,536 பேர் தமிழிலும் எழுதியிருந்தனர்.
இந்தத் தேர்வில், தமிழகத்தில் அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள, குறிப்பாக ஆளும் திமுக.,வின் தடைகளை மீறி தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் தேசிய அளவில் முதலிடம் பிடித்து நீட் குறித்த அரசியலை பொய்யாக்கியுள்ளார்.
விழப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அருகே உள்ள மேல்ஓலக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபஞ்சன் 10 ஆம் வகுப்பு வரையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றுள்ளார். தற்போது நடந்து முடிந்துள்ள நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே மொத்த மதிப்பெண்களான 720க்கு 720 எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். பிரபஞ்சன் கூறுகையில், நீட் தேர்வு கடினம் என்ற மன நிலையில் இருந்து மாணவர்கள் வெளியே வரவேண்டும் என்று நீட் அரசியலுக்கு சாவு மணி அடித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த போரா வருண்சக்கரவர்த்தி ஆகிய மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். முதல் 10 இடங்களை பிடித்தவர்களில் 4 பேர் தமிழக மாணவர்களே!
நீட் தேர்வை தமிழகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் தேர்வு எழுதினர். இதில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் பிரபஞ்சன் 99.99 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.