
தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது அமலாக்கத் துறை. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பான தகவல்கள், சட்டப்பேரவை செயலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து சபாநாயகருக்கு தகவல் தெரியப்படுத்தப்படும். சட்டப்பேரவை நடைபெறும் பட்சத்தில், உடனடியாக அவையில் தெரிவிக்கப்படும். சட்டமன்ற கூட்டம் தற்போது நடைபெறாத நிலையில், 5 நாட்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, செந்தில்பாலாஜி உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவருக்கு ஓரிரு நாட்கள் மருத்துவ கண்காணிப்பு தேவை எனவும் ஓமந்தூரார் அரசு மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் தடையில்லை என்று அறிவித்த பின், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப் பட்ட தகவல்:
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. அமலாக்கத் துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி நாள் முழுக்க உணவு எதுவும் எடுத்து கொள்ளவில்லை. மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப் பட்டபோது மயக்க நிலையிலேயே இருந்தார்; அப்போது ரத்த அழுத்தம் 160/100 ஆக இருந்தது. அவருக்கு ஓரிரு நாட்கள் மருத்துவ கண்காணிப்பு தேவை. அவரின் இதயத்துடிப்பு, உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப் பட்டு வருகிறது. சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்… – என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியை தில்லி அழைத்துச் சென்று விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகவும், எய்ம்ஸ் மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின் அமலாக்கத்துறை முடிவெடுக்கும் என தகவல் வெளியானது. இதனால், எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு இன்று முற்பகல் 11 மணியளவில் சென்னை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.