ஆஞ்சியோ பரிசோதனையில் இதய குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி க்கு பைபாஸ் சார்ஜரி செய்ய பரிந்துரை
அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவரது இதயக் குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டறியப் பட்டது. இதை அடுத்து அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின், ஓமந்தூரார் மருத்துவமனையில் வைத்து செந்தில் பாலாஜியைச் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், இன்றைய அரசு சார் நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்வரின் ஆய்வுக் கூட்டம், முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க சென்றதால் ஒத்தி வைக்கப்பட்டது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி சந்தித்து விட்டு வந்த முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்ததாவது….
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.